ஸ்பெஷல்

முதல் படத்திலேயே சுவையான சம்பவம்: எம்.ஜி.ஆருக்காக அடிமைப்பெண் படத்தில் எஸ்.பி.பி. பாடியபோது...

25th Sep 2020 03:47 PM

ADVERTISEMENT

 

ஆரம்பத்தில் தெலுங்கு, கன்னடப் படங்களில் பாடிய எஸ்.பி.பி. 1969-ல் சாந்தி நிலையம், அடிமைப் பெண் ஆகிய படங்களில் பாடி தமிழ்த் திரைத்திறைக்குள் நுழைந்தார்.

அடிமைப்பெண் படத்தில் பாடியபோது எஸ்.பி.பி.க்கு சுவையான அனுபவங்கள் கிடைத்துள்ளன. 

எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் தெலுங்கு டப்பிங்குக்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் பாடிக் கொண்டிருந்திருக்கிறார் எஸ்.பி.பி. அதே ஸ்டூடியோவில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர்., மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது அப்பாடலைக் கேட்டுள்ளார். அப்போது ஏசி வசதிகள் கிடையாது. அதனால் ஸ்டூடியோவின் கதவுகள் திறந்திருந்தன. எஸ்.பி.பி. பாடியதைக் கேட்ட எம்.ஜி.ஆர். அதை ரசித்துவிட்டு பாடகரைப் பற்றி விசாரித்துள்ளார். பிறகு அவரைப் பற்றி கே.வி. மகாதேவனிடம் பரிந்துரைத்துள்ளார். ஒரு புதிய பாடகர் தனக்குப் பாடவேண்டும் என அவர் விரும்பியுள்ளார்.

ADVERTISEMENT

பிறகு ஒரு கார் எஸ்.பி.பி. வீட்டுக்கு வந்திருக்கிறது. சின்னவர் (எம்.ஜி.ஆர்.) தன்னுடைய படத்தில் நீங்கள் பாடவேண்டும் என விரும்புகிறார். எனவே ஒத்திகைக்கு வரவும் எனக் கட்டளை வந்துள்ளது. எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்கு சென்றுப் பார்த்தால் திரையுலகப் பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பிக்காகக் காத்திருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் பிறகு சுசீலாவுடன் இணைந்து பாடிப் பயிற்சி எடுத்தார் எஸ்.பி.பி. 

ஒரு வாரத்தில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு. ஆயிரம் நிலவே பாடலை அங்குதான் படமாக்க வேண்டும். அந்த நேரம் பார்த்து எஸ்.பி.பிக்கு டைபாய்ட் காய்ச்சல் வந்துவிட்டது. இதனால் படக்குழுவுக்கு அவர் மீது பரிதாபம் வந்தது. சரி பாடலைப் பிறகு ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம் என ஜெய்ப்பூருக்குக் கிளம்பிவிட்டார்கள். எம்.ஜி.ஆர். படத்துக்கும் பாடும் வாய்ப்பைக் கெடுத்துக்கொண்டேனே என வருந்தியுள்ளார் எஸ்.பி.பி. இப்படியொரு நல்ல வாய்ப்பு இனி எப்போது வரும் என ஏங்கியுள்ளார்.

உடல்நலம் தேறிய பிறகு அழைப்பு வந்துள்ளது. அதுதான் ஜெய்ப்பூருக்குக் கிளம்பிவிட்டார்களே, அந்தப் பாடலை வேறொருவரைப் பாட வைத்து இந்நேரம் படமாக்கியிருப்பார்கள் என எண்ணியபடி ஸ்டூடியோவுக்குச் சென்றுள்ளார் எஸ்.பி.பி. அங்கு அவருக்கு இன்பதிர்ச்சி காத்திருந்தது. ஆயிரம் நிலவே வா பாடலை ஞாபகம் இருக்கிறதா? கொஞ்சம் ஒத்திகை பார்த்துவிட்டு அதை ஒலிப்பதிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார் மகாதேவன். ஆச்சர்யம் தாங்கவில்லை எஸ்.பி.பிக்கு. பிறகு அவர் பாடியதைக் கேட்டு எம்.ஜி.ஆரும் பாராட்டியுள்ளார்.

ஆர்வம் தாங்காமல் இந்தப் பாடலைத் தன்னையே பாட வைத்தது ஏன் எனக் கேட்டுள்ளார் எஸ்.பி.பி. இதற்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில்:

எம்.ஜி.ஆர். படத்துக்குப் பாடுகிறேன் என நண்பர்களிடம் சொல்லியிருப்பீர்கள். இப்போது உங்களுக்குப் பதிலாக வேறொரு பாடகரைப் பாட வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எனக்கு உங்களின் குரல் பிடிக்கவில்லை என்பதால் தான் பாடகரை மாற்றிவிட்டேன் என வெளியே செய்தி வரும். இந்தத் துறையில் நீங்கள் முன்னேறுவதற்கு அது தடையாக அமையும். எனவே தான் நீங்கள் தேறி வரும் வரை ஜெய்ப்பூர் பயணத்தை ஒத்திவைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர்.

இதைக் கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் எஸ்.பி.பி. நான் ஒரு புதுமுகம். என் மீது எம்.ஜி.ஆர். அக்கறை செலுத்தியதை மறக்கவே முடியாது என்று பேட்டியளித்துள்ளார் எஸ்.பி.பி. பிறகு அதே படத்தில் மேலும் இரு பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. வீரத்திலே கவி எழுதி என்கிற பாடல் படத்தில் இடம்பெறவில்லை. தாய் இல்லாமல் நான் இல்லை என்கிற பாடலை முதலில் எஸ்.பி.பி. தான் பாடியிருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆர். எதிர்பார்த்த உணர்ச்சிகள் எஸ்.பி.பி. குரலில் கிடைக்காததால் பிறகு கம்பீரக் குரலோன் டி.எம்.எஸ். அப்பாடலைப் பாடியுள்ளார். 

அடிமைப்பெண், சாந்தி நிலையம் என ஒரே வருடத்தில் வெளியான இரு படப் பாடல்களுக்காகவும் சிறந்த பாடகருக்கான மாநில அரசு விருதைப் பெற்றார் எஸ்.பி.பி. தனக்குப் பிடித்த எம்.ஜி.ஆர். பாடல் என ஆயிரம் நிலவே வா-வைத்தான் சிவாஜி சொல்வார். 

Tags : SP Balasubrahmanyam MGR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT