ஸ்பெஷல்

கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!

ச. ந. கண்ணன்

ரஜினியின் கடைசி இரு படங்கள் - பேட்ட, தர்பார்

விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் - மாஸ்டர்

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் - இந்தியன் 2

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் - டாக்டர்

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் - காத்து வாக்குல ரெண்டு காதல்

விக்ரம், துருவ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம்

- இந்த அத்தனை படங்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை -  அனிருத். 

ஏ.ஆர். ரஹ்மான் கையில் கூட இத்தனை பெரிய தமிழ்ப் படங்கள் கிடையாது. மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன், விக்ரம் நடிக்கும் கோப்ரா, சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் ஆகிய தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே ரஹ்மான் தற்போது இசையமைத்து வருகிறார். அனிருத் படப் பட்டியல்கள் நிஜமாகவே மிரட்டுகின்றன. கமல் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளர் ஆகியிருப்பது அவருடைய உயரத்தை மேலும் கூட்டியுள்ளது. தமிழ் சினிமா இந்த இளைஞன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது.

2011-ல் 3 படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் அனிருத். கொலைவெறி பாடல் இந்தியா முழுக்கப் பிரபலமானது. முதல் படத்திலேயே பிரபலமான தமிழ் இசையமைப்பாளர்கள் பட்டியலில் இணைந்தார். 

இதன்பிறகு வருடத்துக்கு அதிகபட்சமாக 3, 4 படங்களுக்கு மட்டுமே அனிருத் இசையமைத்து வருகிறார். படங்களின் எண்ணிக்கையை உயர்த்த அவர் எப்போதும் ஆசைப்படுதில்லை. வருடத்துக்கு ஒரு படம் என்றாலும் அந்தப் படத்துக்கு இசை பெருமளவு கைகொடுக்க வேண்டும் என்று மட்டும் எண்ணுகிறார். 2016, 2017 ஆண்டுகளில் தலா இரு தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ரெமோ, ரம், விவேகம், வேலைக்காரன். 2018-ல் தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா, பேட்ட. கடந்த வருடம் இரு தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தார். தமிழில் தும்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்.

இந்த வருடம் தர்பார், மாஸ்டர் என இரு தமிழ்ப் படங்களின் பாடல்கள் மட்டும் வெளியாகியுள்ளன.

இப்படிப் பார்த்துப் பார்த்துப் படங்களை ஒப்புக்கொள்ளும் அனிருத், திடீரென பல பெரிய படங்களுக்கு இசையமைப்பது அவருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகிறது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பெற்றி பெற்றிருப்பது பலரையும் அவர் பக்கம் ஈர்த்துள்ளது. கமல், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் எனப் பிரபலக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகும் படங்களில் அவர் இடம்பெற்றிருப்பதற்குக் காரணம் - அனிருத்தால் பாடல்களை ஹிட் ஆக்க முடியும், இளைஞர்களை ஈர்க்க முடியும் எனத் திரையுலகம் முழுமையாக நம்புவதால் தான்.

இன்றைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் அதிகச் சம்பளம் பெறும் தமிழ் இசையமைப்பாளராக உள்ளார். ஆனால் பாடல்களின் வெற்றி, பெரிய பட வாய்ப்புகள் என்கிற அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளர் என்று அனிருத்தைத் தாராளமாக மதிப்பிடலாம். 

2021 நிச்சயம் அனிருத்துக்கான ஆண்டு. இந்தக் கட்டத்துக்குப் பிறகு அவருடைய வளர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பது நாம் எதிர்கொள்ளப் போகும் அடுத்த சுவாரசியமாக இருக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT