ஸ்பெஷல்

ரம்யா கிருஷ்ணனுக்கு 50 வயதாகிறதா? அன்று முதல் இன்று வரை!

15th Sep 2020 04:34 PM | எழில்

ADVERTISEMENT

 

அவ்வளவு எளிதில் நம்பிவிட முடியாது... 1970, செப்டம்பர் 15 அன்று பிறந்த ரம்யா கிருஷ்ணன் இன்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 

1984-ல் ஒய்.ஜி. மகேந்திராவுக்கு ஜோடியாக வெள்ளை மனசு என்கிற படத்தில் நடிக்கும்போது அவருடைய வயது 14. 

பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த நிகழ்வின் புகைப்படங்கள் மூலம் ரம்யா கிருஷ்ணனுக்கு சினிமா வாய்ப்புகள் வந்துள்ளன. பாரதிராஜா, டி.ஆர். படங்களின் கதாநாயகித் தேர்வுகளில் கலந்துகொண்ட ரம்யா கிருஷ்ணன், கடைசியில் வெள்ளை மனசு படம் மூலமாக அறிமுகமானார்.

ADVERTISEMENT

மறைந்த அரசியல் விமர்சகர் சோ, ரம்யாவின் உறவினர். இவர் சினிமாவுக்குள் நுழைந்தது சோவுக்குப் பிடிக்கவில்லை. படையப்பா படம் பார்த்த பிறகுதான் என் நடிப்பைப் பாராட்டினார் என்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

வெள்ளை மனசுக்கு முன்பு நேரம் புலரும்போல் என்கிற மலையாளப் படத்தில் மம்மூட்டி, மோகன் லாலுடன் இணைந்து நடித்தார். அந்தப் படம் 1986-ல் தான் வெளிவந்தது. 

தமிழில் பல படங்களில் நடித்து வந்தவருக்கு 1989-ல் சுட்ரதருலு என்கிற தெலுங்குப் படத்தின் மூலம் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் படம் சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. இதனால் 90களில் தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

இந்தச் சூழலில், கோலிவுட்டில் நடித்து கவனம் பெற வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. தெலுங்கில் கவர்ச்சி நடிகையாகப் புகழ் பெற்ற ரம்யா கிருஷ்ணன், அம்மன் படத்தில் அம்மனாக நடித்து ஆச்சர்யப்படுத்தினார். தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது.

80களில் நடித்த எல்லா நடிகைகளும் எந்த மொழியில் நடித்தாலும் அதே மொழியில் டப் செய்தார்கள். ஆனால் என்னுடைய குரல் தமிழில் பலமுறை தவிர்க்கப்பட்டுள்ளது. படையப்பாவுக்குப் பிறகு தான் என் குரலுக்குத் தமிழில் அங்கீகாரம் அளித்தார்கள் என்கிறார் ரம்யா கிருஷ்ணன். 

1999-ல் வெளியான படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிராக நீலாம்பரி வேடத்தில் நடித்தது இவருடைய திரை வாழ்க்கையையே மாற்றியது. படம் பெரிய ஹிட் ஆனது மட்டுமல்லாமல் நீலாம்பரி கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடம் பேரும் புகழும் அடைந்தார். இதன்பிறகு நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கமலுடன் இணைந்து நடித்த பஞ்சதந்திரம் படம் ரம்யா கிருஷ்ணனின் நடிப்புக்கு மேலும் மகுடம் சூட்டியது. சிம்ரன் நடித்திருந்தாலும் மேகி வேடத்தில் நடித்து பெயர் வாங்கிச் சென்றது ரம்யா கிருஷ்ணன் தான். 

தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து அங்கும் தன் முத்திரையைப் பதித்துள்ளார். கெளதம் மேனன், பிரசாந்த் முருகேசன் இயக்கிய குயின் இணையத் தொடரிலும் நடித்து அனைத்து வடிவத் திரைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

கல்நாயக், கிரிமினல் உள்ளிட்ட சில ஹிந்திப் படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன், பாலிவுட்டில் அதிகப் படங்களில் நடிக்காதது பற்றி சமீபத்தில் கூறியதாவது: பாலிவுட்டிலிருந்து நான் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை. நான் நடித்த சில ஹிந்திப் படங்கள் நன்றாக ஓடவில்லை.

எனக்கு வந்த ஹிந்திப் பட வாய்ப்புகளிலும் நான் ஆர்வம் செலுத்தவில்லை. மேலும் தென்னிந்தியப் படங்களில் நான் தீவிரமாக நடித்து வந்தேன். அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு தமிழ் - ஹிந்திப் படத்தில் நடிக்கவேண்டியது. ஆனால் ஒரு சில பிரச்னைகளால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படவில்லை என்றார்.

குயின் இணையத் தொடர் பற்றி ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது: ஒரு புத்தகத்தின் அடிப்படையில் குயின் இணையத் தொடர் உருவானது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை முன்வைத்து எடுக்கப்பட்டது என நினைப்பது உங்கள் விருப்பம். ஜெயலலிதாவின் வாழ்க்கைச் சம்பவங்களுடன் ஒத்துப்போவதால் குயின் இணையத் தொடர் எனக்குப் பிடிக்கும். அவருடைய துணிச்சல் எனக்கு மிகவும் பிடிக்கும். நிஜ ராணியாகவும் அவர் வாழ்ந்துள்ளார்.

குயின் இணையத் தொடரின் 2-ம் பாகத்துக்காக நான் காத்திருக்கிறேன். அதில் பங்குபெற ஆவலாக உள்ளேன். அதில் மேலும் அதிகப் பரபரப்பான, சுவாரசியமான காட்சிகளை மக்கள் எதிர்பார்க்கலாம் என்கிறார்.

2003-ல் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு.   

அழகு, அனுபவம் மட்டுமல்லாமல் நடிப்புத் திறமையும் இருப்பதால் தான் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களும் படங்களும் ரம்யா கிருஷ்ணனுக்கு அமைகின்றன. அதனால் தான் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த பாகுபலி படத்தின் முக்கியக் கதாபாத்திரம் அவருக்குக் கிடைத்தது.

பாகுபலியின் சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் முதலில் தேர்வானவர் மறைந்த ஸ்ரீதேவி தான். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாத நிலையில் ராஜமெளலி தேர்வு செய்தவர், ரம்யா கிருஷ்ணன். மிகவும் வலுவான அக்கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து நந்தி, ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். 

37 வயது பிரபாஸுக்குத் தாயாக நடித்தது பற்றி ரம்யா கிருஷ்ணன் கூறியதாவது: நான் நடிக்க ஆரம்பித்த புதிதில் என்னை விடவும் 20,30 வயது அதிகமான கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். வயது வித்தியாசங்கள் என்னைப் பாதிப்பதில்லை என்கிறார். 

50 வயது ஆனதை மறைக்காமல் அதுபற்றி இன்ஸ்டகிராமில் குறிப்பிட்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன். சிலருக்கு வயதானாலும் அழகும் ஸ்டைலும் மாறுவதே இல்லை. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT