ஸ்பெஷல்

16 வயதினிலே: கிராமத்துக் காதல் ஓவியம்!

தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநராக பாரதிராஜா திரைக்குள் வந்து புதிய பாதையை உருவாக்கி, தமிழ்த் திரைப்படங்களை நாடக ஸ்டூடியோக்களை விட்டு நிஜக் கிராமங்களைத் தேடி ஓட வைத்த 16 வயதினிலே திரைப்படம் வெளிவந்த நாள் இன்று. 

கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகி 43 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பேசப்படும் திரைப்படங்களின் வரிசையில் கிரீடம் தாங்கி நிற்கும் திரைப்படம். தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ் தயாரிப்பில் புதிய இயக்குநர் பாரதிராஜாவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், பி. கலைமணி வசனத்தில் நிவாஸ் ஒளிப்பதிவில், கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் கே.பாக்யராஜ், பாரதிராஜாவின் உதவியாளராகவும், படத்தில் வைத்தியராகத் தனது சொந்தக் குரலில் பேசிக் காட்சியளித்த முதல் திரைப்படம். இப்படத்தில் ரஜினிகாந்துடன் படம் முழுவதும் வரும் கவுண்டமணியின் பெயர் கெளண்டன் வீரமணி என்றுதான் டைட்டில் கார்டில் இடம் பெற்றுள்ளது. அதேபோல் பாடகர்கள் வரிசையில் மலேசியா வாசுதேவனின் பெயரும் எம்.வாசுதேவன் என்றுதான் இடம் பெற்றுள்ளது. பின்னாளில் இவர்கள் கவுண்டமணி என்றும், மலேசியா வாசுதேவன் என்றும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. 

திரைப்படத்தில் நடிகர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் பெயர்களான சப்பாணி, பரட்டையன், மயிலு, குருவம்மாள் என்பதுடன் அறிமுகப்படுத்தப் பட்டது அதுவரை வெளியான தமிழ்ப்படங்களில் மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருந்தது. கவலையுடன் சேலை கட்டிய பெண்ணொருவர் ரயில் நிலையத்திற்கு வரும் ரயிலில் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போல் திரைப்படம் தொடங்கி பின்னணி வசன அறிமுகத்துடன் பின்நோக்கிக் காட்சிகளாக மாறி கதைசொல்லிக் காட்சிகளாக 16 வயதினிலே படம் திரையில் விரியத் தொடங்கும். 

கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாயாரின் பதின்ம வயது அழகுப் பெண்ணொருவர் அந்தக் கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து முடித்து ஆசிரியையாக விருப்பம் தெரிவித்து அதற்கான கனவுகளுடன் இருப்பார். அவரது தாய்க்கு ஒத்தாசையாக இருக்கும் அநாதையான சப்பாணியைத் தன் வீட்டில் வைத்து பராமரித்து தனது சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திடும் போது மருமகனே என்று விளிப்பதால் அவர் ஒருதலையாக மயிலை விரும்புவார். ஆனால் மயிலோ அவரது அன்பை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து கேவலப்படுத்துவார். அதே கிராமத்தில் கும்பலுடன் ஒரு ரெளடி போல் வாழும் பரட்டையன், பண்ணையார், திருமண நிகழ்ச்சிகள் உள்பட கிராமம் முழுவதும் சேவகம் செய்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்து வருவார் சப்பாணி. 

மயிலு பூப்படையும் போது அங்கு வரும் உறவினர்கள் இவ்வளவு அழகானவளுக்கு பட்டணத்திலிருந்து கோட்டு சூட்டு போட்டவன்தான் மயிலைக் கட்டிக்க வருவான் எனக் கூற அதே ஆசையிலிருக்கும் மயிலுக்கு அந்தக் கிராமத்திற்கு கால்நடை மருத்துவர் சூட்டு கோட்டுடன் வரவே அவரையே விரும்பி காதல் கொண்டு காதலருக்காக தனது எதிர்கால ஆசிரியர் பயிற்சியையும் விட்டு விடுவார். 

இதனிடையே மருத்துவரின் விருப்பத்திற்கு பணியாமல் தப்பும் மயிலிடம் அவரது 16 வயது ஈர்ப்பைத் தெரிவித்து விட்டு நகருக்குச் சென்று மனைவியுடன் கிராமத்திற்கு வருவார் கால்நடை மருத்துவர். இந்த நிலையில் மயிலு மருத்துவரைக் காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டதாகக் கிராமம் முழுவதும் பரப்பப்படும் வீண் வதந்திகள் காரணமாக குருவம்மாள் இறந்து போவார். 

உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் மயிலு மீது பரிதாபப்பட்டு வைத்தியரைக் கூட்டி வந்து குணப்படுத்தும் சப்பாணியின் உண்மையான அன்பை புரிந்து விருப்பம் கொள்ளும் மயிலு, சப்பாணிக்கு கோபால் என்று பெயர் மாற்றி அவர் யாருக்கும் சேவகம் புரியக்கூடாது என்றும், கோபால் என்றழைக்காமல் சப்பாணி என்று அழைத்தால் தயங்காமல் அவர்களை அடிக்கவும் நிர்ப்பந்திப்பார். மயிலுவின் வாக்கை வேதவாக்காகப் பின்பற்றும் சப்பாணி தன்னை சப்பாணி என்றழைக்கும் பரட்டையன் மற்றும் கால்நடை மருத்துவரை அறைந்து விடுவார். இதனைக் கேட்டு மகிழ்ச்சியுறும் மயிலு, தன்னை அறைந்து விட்டதற்காக சப்பாணியைத் தாக்கும் பரட்டையன் முகத்தில் காறித் துப்பி விடுவார். தன் பேச்சைக் கேட்டு தனக்காக மட்டுமே வாழும் சப்பாணியைத் திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து அவரைத் தாலி, சேலை, பட்டு வேட்டி, சட்டை வாங்கி வர சந்தைக்கு அனுப்பி வைப்பார் மயிலு.

மிகவும் உற்சாகமாகப் பாடலுடன் சந்தைக்குச் செல்லும் சப்பாணி தனக்கும் மயிலுக்கும் திருமணம் என்பதையும் அதற்காகத்தான் சந்தைக்குச் செல்வதாகவும் பரட்டையன் குழுவினருக்கும் கிராமம் முழுமையும் தெரிவித்தபடி செல்வார். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பரட்டையன் தன் முகத்தில் காறித் துப்பிய மயிலுவைப் பழிவாங்க மிதமிஞ்சிய மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்து மயிலைக் கெடுக்க முயல்வார். அதற்குள் வீடு திரும்பும் சப்பாணி மயிலைக் காப்பாற்ற மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்காமல் போகவே வீட்டுக்குள் இருக்கும் பாறையை எடுத்து பரட்டையன் மீது வீசி கொலை செய்து விடுவார். இதனைத் தொடர்ந்து கொலைக்குற்றத்திற்காகக் காவல்துறையினர் சப்பாணியை அழைத்துச் செல்ல, சப்பாணி வந்து தனக்கு வாழ்வு தருவான் என்று மயிலு காத்திருப்பதாகப் படம் முடிவடையும். 

கதையாகப் படிப்பதை விடவும் காட்சிகளாகப் பார்ப்பதைப் பிரமாதப்படுத்தியிருப்பார்கள் பாரதிராஜாவும் ஒளிப்பதிவாளர் நிவாஸும். கோபத்தில் மயிலால் வீசப்பட்ட மாங்கொட்டை மாமரச் செடியாக வளர்ந்து சப்பாணியின் பாசமாக மாறியிருப்பதையும், பரட்டையன் மயிலை பழிவாங்கச் செல்லும் போது மாமரச் செடியை மிதித்து செல்வதும், தான் செய்த தவற்றை உணர்ந்து சப்பாணி மீது அன்பு வளரும் போது மருத்துவருடனான உறவு நெகட்டிவ்களாக எரிவது, மயிலு கெட்டுப்போனார் என்பதை குருவம்மாளின் எதிரியான பெண் காதுகள் வழியாகப் பரப்புவது போன்ற மிக அழகான உத்திகள் தமிழுக்கு புதிதாகவே அமைந்திருந்தன. படத்தின் வசனங்கள் அனைவரையும் கவரும் விதத்தில் எளிமையாக அமைந்திருந்தது. குறிப்பாக, சந்தைக்குப் போகனும் ஆத்தா வையும் காசு கொடு, இது எப்படி இருக்கு, பத்த வைத்திட்டியே பரட்டை, தொட்டவன் விட்டுட்டு போயிட்டான் பெத்தவளும் உட்டுட்டு போயிட்டா பிறக்கப் போற குழந்தைக்கு அப்பா யாருன்னு சொல்லனுமே, அடிச்சா ஏன் கேட்க ஆளில்லாத அனாதைப் பையலே உனக்கு இவ்வளவு திமிரா, ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா நாய் மட்டும் வளர்த்தல ஆனா இந்த சப்பாணியைத் தான் வளர்த்தா மயிலு, அது ரத்தமில்ல மயிலு... ஆத்தா போட்ட சோறு என்கிற வசனங்கள் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது. இது எப்படி இருக்கு என்பது அப்போதைய இளைஞர்களின் டிரெண்ட்டாகவே இருந்து வந்து பின்னர் அதன் பேரில் தமிழ்த் திரைப்படமும் வெளியானது. 

தமிழ்த் திரைப்படங்களில் வழக்கமாகப் பாடல் காட்சிகளைச் சுவாரசியமாகவும் வித்தியாசமாகவும் படமாக்கி பாடல் காட்சிகளை ரசிக்க வைத்திடும் இயக்குநர் ஸ்ரீதருக்கு இணையாகப் பாடல் காட்சிகளை அழகுற அமைத்து ரசிகர்களைப் பாடல் காட்சிகளுக்கு வெளியே அனுப்பி விடாமல் திரையரங்குக்குள் இளையராஜா உதவியுடன் அமர வைத்து சாதனை படைத்தார் பாரதிராஜா. படத்தில் பல காட்சிகளில் வசனமின்றி இசைக்கோர்வை மூலமாகவே அந்தக் காட்சியைத் தெளிவுபடுத்திடும் இசை இயக்கமும் இடம் பெற்றிருந்தது. படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா குரலில் சோளம் வெதக்கையிலே, எம்.வாசுதேவன், எஸ்.ஜானகி ஆகியோர் குரல்களில் செந்தூரப் பூவே, ஆட்டுக்குட்டி முட்டையிட்டு, செவ்வந்திப் பூ பறித்த சின்னக்கா, மஞ்சக்குளித்து போன்ற பாடல்கள் தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் அந்தக் கால வரிசையில் எங்கெங்கும் பாடிக் கொண்டேயிருந்தன. தமிழகத்தின் சர்க்கஸ் கூடாரங்கள், திருவிழாக்கள்: உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த ஹிந்திப் பாடல்கள் புறந்தள்ளப்பட்டு 16 வயதினிலே தமிழ்ப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. அப்போது ஒலிக்கத் தொடங்கிய தமிழ்ப்பாடல்கள் இன்று வரை சர்க்கஸ் கூடாரங்களிலும், திருவிழாக்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பாடல்கள் ஒலிப்பரப்பில் புதுக் கலாசாரத்திற்கு அச்சாரமிட்டது 16 வயதினிலே திரைப்படப் பாடல்கள் மட்டுமல்ல 16 வயதினிலே படத்தின் திரைப்பட வசனங்கள் அடங்கிய ஒலிப்பரப்புகளும் வானொலிகள் வாயிலாக வீடுகளிலும் ஒலிப்பெட்டிகள் மூலமாக வீதிகளிலும் ஒலித்துக் கொண்டுதானிருந்தது. 

அதுவரையிலான தமிழ் பேசும் திரைப்படங்களில் நாடகத்தனமாக காதல் சொல்லும் நிலையில் பதின்ம வயதுப் பெண்ணின் பருவக்கோளாறு, சப்பாணியின் பொருந்தாக் காதல், மயிலுடன் மருத்துவர் காதல் என கிராமத்தை மையமாக வைத்து காட்சிகளை நகர்த்திய விதமும் அறிவுபூர்வ விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அறிவுள்ளவர்கள் மட்டுமே பார்க்கத் தகுந்த படம் என்று படம் வெளிவந்த போது தோன்றிய பொது எண்ணங்களினால் முதல் சில நாள்களில் திரையரங்குகள் வெறிச்சோடிக் கிடந்தபோது, பாடல்களும் புதுவகைத் திரைப்படம் என்பது குறித்து அனைத்துப் பகுதிகளிலும் மெளத்டாக் எனும் வாய்பூர்வ விமர்சனங்களும் தமிழகம் முழுவதும் திரையரங்குகளை நிரப்பத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து வெகுஜன மக்களின் பாராட்டுக்களையும் பெற்று 16 வயதினிலே திரையிடப்பட்ட திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக உருமாறி வெற்றி பெற்ற திரைப்படமானது. 

மயிலுவின் ஊஞ்சல் காட்சிகள், கிராமக் கொண்டாட்டங்கள், கிராமங்களில் பெண்கள் சண்டை, ஜாக்கெட் அணியாத பெண்கள், பக்கத்து வீடுகளின் நிகழ்வுகளில் ஆர்வம், பதின்ம வயது பெண்ணின் பருவக் கோளாறு, கிராமத்தில் சோப் போட்டுக் குளிக்கும் பெண்ணை ரசிக்கும் சிறுமிகள், ஓணானை அடித்து மகிழும் சிறுவர்கள் என்று படம் முழுவதும் வியாபித்த புதுவகைக் காட்சிகள் தமிழின் சத்யஜித்ரேவாகவே பாரதிராஜா கொண்டாடப்பட்டார். அதற்குரிய அனைத்து வகை புதுவகைத் திரைப்பட உத்திகளையும் திரைப்பட மொழிகளையும் படம் முழுவதும் வெற்றிகரமாக கையாண்டிருந்தார் பாரதிராஜா. 16 வயதினிலே வெற்றிக்கு கதை, வசனம், நடிகர், நடிகைகள் மட்டுமன்றி படத்தில் இடம் பெற்றிருந்த அச்சு அசல் கிராமமும் காரணமென்று இயக்குநர் பாரதிராஜா இன்றும் குறிப்பிட்டு வருகிறார். ஒட்டுமொத்த படக்குழுவையும் கர்நாடக மாநிலத்தில் அப்போதிருந்த அசல் கிராமத்திற்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தப்பட்டதையும் நினைவு கூர்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்றதற்குப் பிறகு அதே ஸ்ரீதேவியை வைத்து அமோல்பால்கருடன் ஹிந்தியிலும் பாரதிராஜா இயக்கத்தில் படம் உருவாக்கப்பட்டது. பின்னர் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் 16 வயதினிலே எடுக்கப்பட்டு திரையிடப்பட்டது. செந்தூரப் பாடலுக்காக எஸ்.ஜானகி சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநருக்கான மாநில விருதுகளையும் 16 வயதினிலே பெற்றது. இந்த வரிசையில் திரைப்படத் தனியார் அமைப்புக்கள் வழங்கும் விருதுப் பட்டியல்களிலும் 16 வயதினிலே தவறாமல் இடம் பெற்றிருந்தது. 

திரைப்படத்தில் நடித்தவர்களின் கதாபாத்திரங்களான மயிலு, பரட்டையன், சப்பாணி, குருவம்மா பெயர்கள் வெற்றிக்கு இணையாகப் பிரபலமாகி இன்றும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவு கூறப்பட்டு வருகின்றன. 16 வயதினிலே முத்திரைக்குப் பிறகு தமிழின் புதுமை இயக்குநராகக் கொண்டாடப்பட்ட பாரதிராஜாவை இந்தியத் திரையுலகம் கொண்டாடித் தீர்த்தது. அந்த மரியாதைக்கு எந்தவிதத்தில் குறைவின்றி தனது திரைப்பட மேன்மையைப் பாதுகாத்து தமிழுக்கு பெருமை சேர்த்தார் பாரதிராஜா. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, காந்திமதி ஆகியோர்களுக்கும் அதற்குரிய வரவேற்பு கிடைக்காமலில்லை. ரஜினியின் இது எப்படி இருக்கு என்கிற வசன உச்சரிப்புக்கு அனைத்துத் தரப்பினரிடையேயும் வரவேற்பு எவ்வளவு அபாரமாகக் கிடைத்ததோ அதே அளவிற்கு மயிலைக் கெடுக்க முயலும் போது அதற்கு நிகராக அபாரமான திட்டல்களும் பெண்களிடமிருந்து கிடைக்காமலில்லை. தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தக் கட்டத்திற்குத் தன்னை எடுத்துச் செல்வதற்கு ரஜினிகாந்திற்கு 16 வயதினிலே நல்ல வாய்ப்பாக அமைந்தது. அழகு நாயகனாக திரையை நிறைத்து வந்த கமல் ஹாசன் சீவாத தலை, வெற்றிலை போட்டு சிவந்த வாய், நொண்டியபடி நடை, தெளிவில்லாத பேச்சு, கோவணத்துடன் அலையும் கதாபாத்திரம் எனத் தன்னை வெளிப்படுத்தி திறமையை நிருபித்தார். தன்னால் இப்படியும் நடிக்க முடியுமென்கிற நம்பிக்கையை கமலஹாசனுக்கு 16 வயதினிலே வழங்கத் தவறவில்லை. அழகு ஓவியமாக மட்டுமின்றி தன்னால் நடிக்கவும் முடியும் என்பதை நிருபிப்பதற்கு வாய்ப்பாக ஸ்ரீதேவிக்கு இப்படம் அமைந்து. அதற்குப் பிறகு கனமான கதாபாத்திரங்களுடனும் ஸ்ரீதேவி நடிக்கத் தொடங்கியதற்கு அஸ்திவாரமிட்டது 16 வயதினிலே என்பதுதான் உண்மை. 

கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம், நடிப்பு என அனைத்து வகையிலும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததன் மூலமாகவே 16 வயதினிலே இன்று வரை பேசப்படும் படங்களில் முக்கியத் திரைப்படமாக இருந்து வருகிறது. அறிவுசார் விமர்சகர்கள், ரசிகர்கள் முதல் பாமர ரசிகர்கள் வரை அனைவரும் கவரும் வகையில் அமைந்து வெற்றிகரமாக ஓடி 43 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் நினைவுக்கூரத்தக்கத் திரைப்படமாகப் போற்றப்பட்டு வருகிறது. 16 வயதினிலே படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர், உதவி இயக்குநர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் அனைவரும் பிற்காலத்தில் தங்களது திறமையினால் பெற்ற மேன்மைக்கும் உயர்வுக்கும் பாராட்டுக்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்திருந்தது 16 வயதினிலே. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் வரவேற்பைப் பெறுவதற்கும் அனைத்துத் தகுதிகளையும் கொண்டிருந்த 16 வயதினிலே திரைப்படம் காலங்களைக் கடந்தும் இன்று வரை கொண்டாடப்பட்டு வருவதற்கு தகுதியுள்ள படம்தான் என்கிற சாத்தியத்தை நிரூபித்துள்ளது. 43 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் தமிழ்த் திரையுலகின் புதுப்பாதைக்கு அச்சாரமிட்ட கிராமத்துக் காதல் ஓவியம் 16 வயதினிலே திரைப்படம் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம்தான்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT