ஸ்பெஷல்

ஜூன் 10: ரசிகர்களை முதல் முறையாக அழ வைத்த கிரேஸி மோகன்!

10th Jun 2020 11:54 AM | ச.ந. கண்ணன்

ADVERTISEMENT

 

நடிகர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்களைக் கொண்ட கிரேஸி மோகன் (66) மாரடைப்பு காரணமாக சென்னையில் கடந்த வருடம் ஜூன் 10 அன்று காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1952-ஆம் ஆண்டு பிறந்த கிரேஸி மோகன், பள்ளியில் படிக்கும்போதே நாடகங்களில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர். இளம் பருவத்தில் இருந்தே, பல நாடகங்களை இயக்கி நடித்திருக்கிறார். சிறிது காலம் பொறியாளராக பணியாற்றி வந்த கிரேஸி மோகன், நாடகத் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக மீண்டும் கலைத்துறைக்கு திரும்பினார்.

எஸ்.வி.சேகரின் கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தில் அறிமுகமானார். அந்தக் காலகட்டத்தில் அந்த நாடகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் மோகன் என்ற பெயரோடு கிரேஸி என்ற அடைமொழி சேர்ந்து கொண்டது.

ADVERTISEMENT

நாடக உலகில் முத்திரை பதித்த கிரேஸி மோகன், திரைத் துறையிலும் கால் பதித்தார். பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றத் தொடங்கினார். 1983-ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘கிரேஸி கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கி 30-க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றினார்.

நாடகங்களில் இவர் படைத்த மாது, ஜானு, சீனு உள்ளிட்ட கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. ‘அபூர்வ சகோதரர்கள்', ‘மைக்கேல் மதன காமராஜன்', ‘சதி லீலாவதி', ‘அவ்வை சண்முகி', 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்' உள்ளிட்ட 40-க்கும் அதிகமான படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார்.

நகைச்சுவையில் தனி முத்திரை: கிரேஸி மோகன் கதாசிரியர், வசனகர்த்தாவாக இருந்து எழுதிய படங்கள், நகைச்சுவையில் தனித்துவம் பெற்றன. குறிப்பாக ‘மகளிர் மட்டும்', ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.' உள்ளிட்ட படங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்' படத்திலும் பணியாற்றியிருக்கிறார். திரைத் துறையைச் சேர்ந்த பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்.

கிரேஸி கிரியேஷன்ஸின் இயக்குநர்  எஸ்.பி. காந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிரேஸி மோகன் அவர்களுடன் பல ஆண்டுகளாக எனக்கு நட்பு உண்டு. அவருக்குப் பெரிய அளவில் வியாதி எதுவும் இருந்தது இல்லை. முதல்முறையாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் நாடகக் குழுவில் நல்ல உடற்தகுதியுடன் இருந்தது அவர்தான். இந்த இழப்பு எதிர்பாராதது என்று கூறினார்.

கிரேஸி மோகனின் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

நண்பர் கிரேஸி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.

கிரேஸி என்பது அவருக்குப் பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்பது தான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக்கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர் .

அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம்.

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன?

மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன்.

அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன் என்று அறிக்கையில் கூறினார்.

தனியார் மருத்துவமனைக்குச் சென்று கிரேஸி மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நடிகரும் நாடக ஆசிரியருமான எஸ்.வி. சேகர். பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

1% கூட ஆபாசம் இல்லாமல் நகைச்சுவை வசனங்கள் எழுதியவர், கிரேஸி மோகன். என்னுடைய நாடகத்தில் பங்கேற்று பிறகு அதன் மூலமாக கிரேஸி மோகன் என்கிற பெயரை அவர் பெற்றார்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர். நன்குப் படங்கள் வரைவார். வெண்பாக்கள் எழுதுவார். கூட்டுக் குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளவர். அவருடைய நாடகங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சனி, ஞாயிறு என்றால் சென்னையில் கிரேஸி மோகனின் நாடகங்கள் இருக்கும்.

அவருடைய தம்பி மாது பாலாஜியிடன் பேசினேன். பாரதியார் போய்விட்டார், விவேகானந்தர் போய்விட்டார். நாமும் வேலை முடிந்தால் போய்விட வேண்டியதுதானே என்று கிரேஸி மோகன் இன்று காலையில் பேசியதாக அவர் சொன்னார். மிகப்பெரிய இழப்பு இது. இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என்

அவதூறுகளுக்கு சகோதரர் மாது பாலாஜி பதில்


 

கிரேஸி மோகனின் மரணம் தொடர்பாக வெளியான தவறான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து அவருடைய சகோதரர் மாது பாலாஜி, விடியோ மூலமாக விளக்கம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

என்னுடைய சகோதரர் கிரேஸி மோகன் ஜூன் 10 அன்று மதியம் 2 மணிக்குக் காலமானார். நேரிலும் சமூகவலைத்தளங்கள் வழியாகவும் எங்களுக்கு அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த விடியோவை வெளியிடுவதற்குக் காரணம் - முதலில் நாங்கள் எல்லோரும் மிகவும் அதிர்ச்சியில் உள்ளோம். ஏனெனில் அவர் வியாதி வந்தோ கஷ்டப்பட்டோ சாகவில்லை. இந்த மரணம் உடனடியாக நிகழ்ந்த ஒன்று. இதனால் எங்களுக்கே பேரதிர்ச்சி. அன்றைய தினம், காலை 7.30 மணிக்கு மோகனைச் சந்தித்தேன். எப்போதும் போல மிகவும் சந்தோஷமாகப் பேசினார். அவருக்கு சுகர், பிபி எதுவும் கிடையாது. எல்லோரும் தவறான தகவல்களை எழுதுகிறார்கள். மூன்று மாதத்துக்கு முன்புகூட உடல் பரிசோதனை செய்தோம். அவருக்கு சுகரோ பிபியோ கிடையாது. காலையில் அவரைச் சந்தித்தபோது நகைச்சுவையாக என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வழக்கமாக, காலை 9.15 மணிக்கு காலை உணவை மேற்கொள்வார். அதை அன்று அதே நேரத்தில் முடித்துள்ளார். பிறகு காலை 9.45 மணிக்கு என்னை அழைத்தார். பாலாஜி மூச்சு முட்டுவது போல உள்ளது. அடிவயிற்றில் லேசாக வலிக்கிறது. கொஞ்சம் வரமுடியுமா என்று கேட்டார். உடனே அவருடைய வீட்டுக்கு விரைந்தேன். அவரால் மூச்சு விட முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். உடனடியாக காரை எடுத்துக்கொண்டு காவேரி மருத்துவமனைக்குச் சென்றோம். அந்த மருத்துமனையின் சுரேஷ் குமார் தலைமையிலான மருத்துவர்கள் அவருக்கு அற்புதமான சிகிச்சை அளித்து மீட்டுக்கொண்டு வர முயன்றார்கள். காலை 10 மணி முதல் மதியம் 2 வரை அவர்கள் மிகவும் போராடினார்கள். ஆனால் என்ன செய்வது, மாரடைப்பு ஏற்பட்டுவிட்டது. விதி அதுபோல முடிவெடுத்துவிட்டது. நம்மால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

நான் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அவர் வியாதி வந்து இறந்துவிட்டார், அவருக்கு சுகர், பிபி இருந்தது, அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று இதுபோன்ற செய்திகளை யாரும் பரப்பவேண்டாம். எல்லாமே தவறான செய்திகள். இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் பெருமாள் பெயரில் 12 கவிதைகள் எழுதிவிட்டுத்தான் இறந்துள்ளார். அதனால் அவருக்கு எந்தவிதமான வியாதியும் கிடையாது. திடீரென்று நிகழ்ந்த சம்பவம் இது. என்ன செய்வது, நம் தலையெழுத்து. நம்மை சோகத்தில் ஆழ்த்திவிட்டு அவர் சந்தோஷமாகக் கிளம்பிவிட்டார். திடீரென ஏற்பட்ட, இயற்கையான மரணம் காரணமாகவே அவர் இறந்துள்ளார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதேபோல கிரேஸி கிரியேஷன்ஸின் இயக்குநர் எஸ். பி. காந்தன், மாது பாலாஜியின் விடியோவைப் பகிர்ந்து, கிரேஸி மோகன் எந்தவொரு தருணத்திலும் மியாட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறினார்.

கமல் தான் என்னுடைய விசிட்டிங் கார்டு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு, 2016-ல் கிரேஸி மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

என்னுடைய எல்லா வெற்றிகளையும் கமலுக்குச் சமர்ப்பிக்கிறேன். உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் நான் நாடகம் அமைக்கும்போது அவரே என்னுடைய விசிட்டிங் கார்டாக உள்ளார். நான் கிரேஸி மோகன் என்பதால் எனக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கிறதா? இல்லை. அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் (1991), வசூல் ராஜா எம்பிபிஎஸ் (2004), அவ்வை சண்முகி (1996) & மகளிர் மட்டும் (1994) என அவருடைய பல படங்களுக்கு வசனம் எழுதியதால் தான். இந்தப் பேட்டி உள்பட எல்லாவற்றுக்கும் அவருடைய ஆலோசனையைக் கேட்பேன். என்னுடைய மனைவிக்குக் கடிதம் எழுதுவதாக இருந்தாலும் அவரிடம் ஆலோசனை கேட்பேன். எங்கள் நட்பின் பலம் அதுவே.

ரஜினிக்கு என் தந்தையை மிகவும் பிடிக்கும். அவரிடம் இரவு வேளைகளில் பேசுவார். அதை என்னால் நம்பவே முடியவில்லை. என்ன விஷயம் என்று ரஜினியிடம் செயலாளரிடம் கேட்டேன். அப்போது என்னை வீட்டுக்கு வரச் சொன்னார்கள். அருணாச்சலம் (1997) படத்துக்கு நான் வசனம் எழுதவேண்டும் என்று ரஜினி சொன்னார். என் வாழ்க்கையில் கிடைத்த போனஸ், ரஜினி.

கூட்டணிதான் கிரேஸி மோகனின் வெற்றிக்குக் காரணம். எங்கள் குழுவைச் சேர்ந்த கிச்சாவின் சகோதரி திருமணத்தில் தான், அவன் என்னிடம் சொன்னான், நாம் ஏன் ஒரு நாடக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது? நீ நாடகம் எழுது. அப்போதிருந்துதான் கிரேஸி கிரியேஷன்ஸ் தொடங்கியது என்று கூறினார்.

என்றும் அழாத நான் ஏன் அழுகிறேன்?

ஸ்ரீ ரமண மகரிஷியின் வாழ்க்கை குறித்து கிரேஸி மோகன் எழுதியுள்ள வெண்பா நிகழ்ச்சி கர்நாடக இசையுடன் சென்னையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 27 அன்று நடைபெற்றது. ரமண மகரிஷியின் வாழ்க்கை குறித்து ‘ரமணாயணம்’ என்ற தலைப்பில் 425 வெண்பாக்களை எழுதினார் கிரேஸி மோகன். இந்த வெண்பாக்களின் தொகுப்பு இ-புத்தகமாக வெளியாகி உள்ளது. இந்த வெண்பாக்களை பொதுமக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில், கர்நாடக இசையுடன் கூடிய நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் உள்ள மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட் அரங்கில் நடைபெற்றது. ராஜ்குமார் பாரதி இசையமைத்த வெண்பாக்களை கர்நாடக இசைக் கலைஞர் காயத்ரி கிரீஷ் பாடினார். இந்த நிகழ்ச்சியில், ‘அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், இசைக் கலைஞர் ஜி.எஸ்.மணி, அம்பிகா காமேஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இதுகுறித்து தினமணி கதிர் இதழுக்கு கிரேஸி மோகன் அளித்த பேட்டி:

எல்லாம் ரமணரின் அருள். நான் ஒரு நாள் மதுர பாரதி எழுதிய ‘ரமண சரிதம்’ படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ரமணரின் வாழ்க்கை வரலாற்றைக் கவிதை வடிவில் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு நாள் காலையில் உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். 24 மணிநேரத்தில் 425 வெண்பாக்களை எழுதி விட்டேன். ரமணர் முக்தி அடைந்த பகுதி வரும்போது என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. என்றும் அழாத நான் ஏன் அழுகிறேன் என்று என் மனைவிக்கு தெரியவில்லை.

‘என்ன ஆயிற்று?'' என்று என்னிடம் கேட்டார். ‘‘ரமணர் முக்தி அடைந்து விட்டார்'' என்று கூறினேன். ‘‘எனக்கு  முக்தி பற்றி ஒன்றும் தெரியாது'' என்று கூறியவாறு வேறு வேலை பார்க்கச் சென்று விட்டார். ராமாயணம் போல் காண்டமாக இதைப் பிரித்து 11 காண்டங்கள் எழுதியிருந்தேன். கவிதை எழுத எனது நண்பன் சு.ரவி ‘ஆனா' போட்டுவிட்டு ‘பூனா' போய்விட்டான்.

என்னுடைய எழுத்துகளுக்கெல்லாம் ஆதார ஸ்ருதி என்னுடைய இளவல்  ‘மாது' பாலாஜி தான்.  

இதை இசையோடு பாடலாமே என்று ஒருவர் சொல்ல அதற்கும் பாலாஜிதான் ஆரம்பித்து ராஜ்குமார் பாரதி இசையில், கர்நாடக இசை பாடகி காயத்ரி கிரீஷ் பாட ஒரு கச்சேரியே நடத்தி விட்டார்கள். இது இசை பாடல் வரிசையில் இல்லை என்று எனக்கும் தெரியும். ஆனாலும் பல்வேறு ராகங்களில் சுமார் 70 வெண்பாக்களை சிறப்பாக இசை அமைத்து, அதை வார்த்தை சுத்தமாகப் பாடினார் காயத்ரி கிரீஷ். உண்மையாகச் சொல்லவேண்டும் என்றால் இவர்கள் இருவருக்கும் தான் இந்த பெருமை எல்லாம் செல்ல வேண்டும். மேடையில் பேசிய திருப்பூர்  கிருஷ்ணன் இதை எங்கள் அமுதசுரபியில் வெளியிட்டு எங்களால் குறைந்த தொகை தான் கொடுக்க முடியும் என்று சொல்ல, விரும்பி இதை ரமணரின் பிரசாதமாக நினைத்துக் கொள்ளுங்கள் என்றார்.  அதையும்  ‘பிரஸ்'  சாதம் என்று ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

நீண்ட நேரம் யோசித்து எழுதினேன்


ஒருமுறை, கிரேஸி மோகனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் நகைச்சுவை வசனங்களை எப்படி எழுதுகிறார் என்று கொஞ்சம் விளக்கினார்.

அதாவது, காட்சிக்கு உகந்த நகைச்சுவையான வரி என்பது நிச்சயம் எங்கேயோ இருக்கும். அதைத் தேடிக்கண்டுபிடிப்பதில் தான் சவால் உள்ளது. யோசிக்க யோசிக்கத்தான் சிறந்த பதில் கிடைக்கும் என்றார்.

ஹோட்டலில், நமக்கு வழங்கப்பட்ட காபியில் ஈ மிதக்கிறது. இதைப் பற்றி சர்வரிடம் முறையிடும்போது அவர் என்ன பதில் சொல்வார்? இதற்கு நூறு பதில்களைச் சொல்லமுடியும். ஆனால், யோசிக்க யோசிக்கதான் நாம் தேடுகிற நகைச்சுவையான பதில் கிடைக்கும் என்றார். இதற்கு ஓர் உதாரணமும் சொன்னார்.

மேரேஜ் மேட் இன் சலூன் நாடகத்தில் ஒரு முக்கியமான கட்டம். சலூனில் வேலை பார்க்கும் மாது, மாறுவேஷத்தில் இருப்பார். மாதுவைச் சந்திக்கும் ஒரு பெண்ணுக்கு அவர்மீது சந்தேகம் ஏற்படும். உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று மாதுவையே உற்றுப் பார்ப்பார். குட்டு உடையும் நேரமிது. சமாளிக்கவேண்டும். சட்டென்று சொல்கிற பதிலில் அந்தப் பெண்ணின் சந்தேகம் முழுவதுமாகக் களையவேண்டும். மாதுவின் பதிலை நீண்ட நேரம் யோசித்து இப்படி எழுதினேன் என்றார் கிரேஸி மோகன்.

‘சான்ஸே இல்லை, ஐ ஆம் ஒன்லி ஃபார் ஜெண்ட்ஸ்!’

கோவா திரைப்பட விழாவில் கிரேஸி மோகனுக்கு அஞ்சலி

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2019-ல் 50-ஆவது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் 9 நாள்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கோவா திரைப்பட விழாவைத் தொடங்கிவைத்தார்கள்.  

மறைந்த 13 திரைக்கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களுடைய படங்கள் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன. கிரேஸி மோகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஜினி நடித்த அருணாச்சலம் படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

Tags : Crazy Mohan
ADVERTISEMENT
ADVERTISEMENT