ஸ்பெஷல்

கமலின் ‘கிரேஸி’யான நண்பன்!

10th Jun 2020 02:59 PM | சுரேஷ் கண்ணன்

ADVERTISEMENT

 

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’-ன்னு சொல்லுவாங்க.. எங்க பழக்கம் சுடுகாட்லதான் ஆரம்பிச்சது”. கமலுடன் நிகழ்ந்த முக்கியமான சந்திப்பைப் பற்றி இப்படி நகைச்சுவையாக சொல்வார் கிரேஸி மோகன். ‘சத்யா’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஒரு சுடுகாட்டின் அருகே நிகழ்ந்து கொண்டிருந்த சமயம். அங்கு இவர்களின் தற்செயலான சந்திப்பு நிகழ்ந்தது. தனது அடுத்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதும் பொறுப்பை மோகனிடம் அளித்தார் கமல். அதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’.

கிரேஸி மோகன் எழுதிய நாடகமான ‘மேரேஜ் மேட் இன் சலூன்’, கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘பொய்க்கால் குதிரை’ என்கிற தலைப்பில் 1983-ல் திரைப்படமாக வெளியானது. அதற்கும் வசனம் எழுதினார்  கிரேஸி மோகன். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1988-ல் வெளியான ‘கதாநாயகன்’ திரைப்படமும்  கிரேஸி மோகனின் வசனத்தில்தான் உருவானது.

இப்படிச் சில திரைப்படங்களுக்கான பங்களிப்பை கிரேஸி மோகன் ஏற்கெனவே தந்திருந்தாலும் கமல் உடன் அமைந்த கூட்டணிக்குப் பிறகுதான் அவரது புகழின் வெளிச்சம் இன்னமும் மேலே உயர்ந்தது. இந்த நன்றியுணர்ச்சியை கிரேஸி மோகன் கடைசிவரை மறக்கவில்லை.

ADVERTISEMENT

திறமையான கலைஞர்களை, எழுத்தாளர்களை தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டு அவர்களிடமிருக்கும் அறிவைச் சரியான படி பயன்படுத்திக் கொள்வதில் கமல் சமர்த்தர். சினிமாவிற்கு அறவே தொடர்பில்லாத, கவிஞர் ஞானக்கூத்தன் உள்பட இலக்கியவாதிகள் பலர் கமலின் நண்பர்கள் பட்டியலில் உள்ளார்கள். 

எனவே கிரேஸி மோகனின் நகைச்சுவைத் திறனைத் திரைப்படத்திற்கு ஏற்றபடி சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள கமலுக்குத் தெரிந்திருந்தது. நகைச்சுவை நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. ஒரு மெலிதான கதையை மட்டும் வைத்துக் கொண்டு நிறைய நகைச்சுவை வசனங்களை தொடர்ச்சியாக அமைப்பது ‘அமெச்சூர்’ நாடக பாணி. எனவேதான் அவை ‘துணுக்குத் தோரணங்கள்’ என்று விமரிசிக்கப்படுகின்றன.

ஆனால் திரைப்படத்திற்கு இந்த முறை செல்லுபடியாகாது. கதையும் வலுவாக நகர வேண்டும். தீவிரமான காட்சிகளும் இருக்க வேண்டும். அதற்கு மேலாக உறுத்தாத வகையில் நகைச்சுவைப்பூச்சு இருக்க வேண்டும். இந்தப் பாணிக்கு கிரேஸி மோகன் எளிதில் தன்னை தகவமைத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கமலின் அனுபவ வழிகாட்டுதலும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும். இதற்குப் பிறகு கமல்ஹாசனின் திரைப்படங்களைத் தாண்டி பலவற்றிற்கு கிரேஸி மோகன் வசனம் எழுதியிருந்தாலும், கமல் + கிரேஸி மோகன் கூட்டணியில் அமைந்திருந்த திரைப்படங்களே தனித்துக் கவனிக்கப்படுகின்றன. இவர்கள் இணைந்துப் பணியாற்றிய திரைப்படங்களின் நகைச்சுவை வசனங்களை ரசிகர்கள் இன்றும் நினைவுகூர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.. என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. இந்தத் திரைப்படங்களைச் சற்று நினைவுகூர்ந்து பாருங்கள். உங்கள் நினைவில் இருந்தே மிக பிடித்தமான சில வசனங்களை அனைத்துத் திரைப்படங்களில் இருந்தும் சொல்லி விட முடியும். இதுவே கிரேஸி மோகனின் அபாரமான நகைச்சுவைத் திறனிற்குச் சான்று.

இந்தத் திரைப்படங்களை மறுமுறை பார்க்கும் போது நிச்சயம் சில நகைச்சுவை வசனங்களை, தருணங்களைத் தவற விட்டிருப்பீர்கள் என்று என்னால் உத்தரவாதமாகச் சொல்ல முடியும். அந்த அளவிற்கு அடுக்கடுக்கான நகைச்சுவைகளை ஒவ்வொரு காட்சியிலும் வாரியிறைத்திருப்பார் கிரேஸி மோகன். ஆனால் அவை பெரும்பாலும்  உறுத்தலாகவோ, திணிக்கப்பட்டதாகவோ அமைந்திருக்காது. இயல்பாகப் பொருந்தியிருக்கும். இல்லையெனில் இவையுமே துணுக்குத் தோரண நாடகமாகியிருக்கும்.

தன்னைப் பழிவாங்க வரும் அப்புவிடம் (அபூர்வ சகோதரர்கள்).  ‘நீயே ஆளு குள்ளம்’ என்று கிண்டல் செய்வார் வில்லன். ‘திருக்குறள் ரெண்டே அடிதான். என்னை விட குள்ளம். ஆனால் அதுல எவ்ளோ விஷயம் இருக்கு” என்பார் அப்பு. நகைச்சுவைக்குள் அசாதாரண புத்திசாலித்தனமும் இருப்பது கிரேஸியின் பாணி. ‘மைக்கேல் மதன காமராஜனில், தீயணைப்பு வீரராக இருக்கும் கமல், குஷ்புவிடம் பெயரைப் பற்றி விசாரிப்பார். “மைதிலி சிவராமன்” என்று பதில் வந்ததும், ‘யாரு.. இந்த சிவராமன்?” என்று குழப்பமடைவார் கமல். “அப்பா..” என்று குஷ்பு சொன்னதும் “ப்பா…” என்று நிம்மதியாவார். இப்படி போகிற போக்கில் பிரமிக்க வைக்கும் பல நகைச்சுவைத் தருணங்களை எளிதில் உருவாக்கி விடுவார். 

*

பொறியியல் மாணவரான மோகன், கல்லூரி விழாக்களுக்காக நகைச்சுவை நாடகங்கள் எழுதத் துவங்கினார். எஸ்.வி.சேகருக்காக இவர் எழுதிய முதல் முழுநீள நாடகம் ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’. அந்த நாடகம் வெற்றியடையவே அதிலிருந்த ‘கிரேஸி’ என்னும் அடையாளம் மோகனின் முன்னொட்டாக ஒட்டிக் கொண்டது. பிறகு ‘கிரேஸி கிரியேஷன்ஸ்’ என்னும் சொந்த நாடகக் குழுவை துவங்கிய அவர் அதற்காகப் பல நாடகங்களை எழுதினார். அவை நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் மேடையேறி வெற்றியடைந்தன. ‘சாக்லேட் கிருஷ்ணா’ என்னும் நாடகம் மூன்றே வருடங்களில் ஐநூறுக்கும் மேலான எண்ணிக்கையில் நடத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது. 

கிரேஸி மோகனின் நாடகங்கள் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வியலில் உள்ள அசட்டுத்தனங்களை நகைச்சுவையாகப் பிரதிபலித்தன. பிராமணச் சமூகத்தின் பின்னணியில் இவை நிகழ்ந்தாலும் அனைத்து நடுத்தர வர்க்கத்தினரையும் கவரும் வகையில் அமைந்திருந்தன. அடையாளக் குழப்பம், ஆள் மாறாட்டம், குறிப்பாக வார்த்தைகளின் ஒலியமைப்பு ஒற்றுமைகளை வைத்து வேடிக்கை செய்வது (pun) போன்றவை கிரேஸி மோகனின் எழுத்துப் பாணியாக அமைந்தது.

‘வியட்நாம் வீடு சுந்தரம்’தான் ஒருவகையில் என் குரு’ என்று அவரைச் சிலாகிக்கும் கிரேஸி மோகன், தமிழ் நகைச்சுவைத் திரைப்படங்களில் நிகழ்ந்த ஒரு சாதனையாக ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தை மதிப்பிடுகிறார். ஆபாசக் கலப்பில்லாத நகைச்சுவை என்பது மோகனுடைய எழுத்தில் உள்ள சிறப்பம்சங்களுள் ஒன்று. உடல்ரீதியான குறைபாடு கொண்டவர்களைப் பற்றிய கிண்டல்களும் இவருடைய எழுத்தில் கலந்திருந்தன. அது சுட்டிக் காட்டப் பிறகு ‘இனி அவ்வாறு எழுதுவதில்லை’ என்கிற உறுதியை மேற்கொண்டார்.  

எழுத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் கூட சோகத்தை அறவே தவிர்ப்பவர் கிரேஸி மோகன். ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தில் ஓர் அழுகைக் காட்சியில் அவர் நடிக்க வேண்டும். “எனக்கு அழுகையே வரலை. கிளிசரின் போட்டு ஒருமாதிரியா சமாளிச்சேன்” என்று சிரித்துக் கொண்டே ஒரு நேர்காணலில் சொல்கிறார். 

கிரேஸி மோகன் எழுதும் நாடகம், திரைப்படம் என்று அனைத்துப் படைப்புகளிலும் ஒரு பிரதான பாத்திரத்தின் பெயர் ‘ஜானகி’ என்று கட்டாயமாக அமைந்திருக்கும். ‘அது என்னோட மனைவி அல்லது காதலி பெயர் என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் இளம் வயதில் நான் படித்த பள்ளி ஆசிரியையின் பெயர் அது. எனக்குச் சிறப்பாக பல விஷயங்களை சொல்லிக் கொடுத்ததோடு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். அவருடைய நினைவிற்காகத்தான் நான் உருவாக்கும் பாத்திரங்களில் ஒன்றிற்கு ‘ஜானகி’ என்று பெயர் சூட்டி விடுகிறேன்’ என்கிறார். 

கிரேஸி மோகனின் நகைச்சுவை எழுத்து பற்றியே பலர் அறிந்திருப்பார்கள். அவருக்கு வேறு சில பரிமாணங்களும் உண்டு. நன்றாக ஓவியம் வரைவார். எந்தவொரு விஷயத்தையும் சுவாரசியமான ‘வெண்பா’வாக எழுதி விடுவார். இதுவரை அவர் சுமார் 40000 வெண்பாக்களை எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது. ரமண மகரிஷியின் வாழ்க்கை  குறித்து 425 வெண்பாக்களில் கிரேஸி மோகன் எழுதிய ‘ரமணாயணம்’ என்கிற நூல் சமீபத்தில் வெளியானது.

கமலுக்கும் கிரேஸி மோகனுக்குமான நட்பு இறுக்கமானது; நீளமானது. ‘ஏறத்தாழ தினமும் கமல்ட்ட பேசிடுவேன். நாடகம்.. சினிமா. தனிப்பட்ட விஷயம்.ன்னு எதுவாக எடுத்தாலும் அவர் கிட்ட பேசிய பிறகுதான் முடிவு செய்வேன். இன்ஃபாக்ட்.. என் மனைவிக்கு எழுதின லெட்டராக இருந்தாலும் அவர்ட்ட படிச்சுக் காண்பிச்ச பிறகுதான் போஸ்ட் செய்வேன்” என்று கமலுடனான நெருக்கத்தைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்கிறார் கிரேஸி மோகன். “சந்திரஹாசன், சாருஹாசனுக்குப் பிறகு மோகன்ஹாசன்” என்று கமலிற்கு ஒரு சகோதரராகவே தங்களின் உறவைப் பற்றிச் சொல்கிறார்.

கமலும் இந்த நட்பைப் பற்றி பல சமயங்களில் வழிமொழிந்திருக்கிறார். சடங்குகளில் பொதுவாக நம்பிக்கையில்லாத கமல், கிரேஸி மோகனின் இறுதிச் சடங்கிற்காக சுடுகாடு வரை சென்றார். கிரேஸியின் நட்பிற்கு அவர் அளித்த மரியாதை அது. சுடுகாட்டில் துவங்கிய நட்பு சுடுகாட்டிலேயே முடிந்தது என்றே கூறவேண்டும்.

‘கே.பாலச்சந்தர், நாகேஷ், அனந்து.. இப்போது மோகன்.. என்று என் மனதிறகு நெருக்கமானவர்களை இறந்து விட்டார்கள் என்றே நான் கருதுவதில்லை. இதோ.. எங்கோ சென்றிருக்கிறார்கள். விரைவில் திரும்பி விடுவார்கள்’ என்றே நினைத்துக் கொள்வேன்’ என்கிறார் கமல். ‘கிரேஸி மோகனின் மறைவிற்குப் பிறகு அவரது நாடகக்குழு ஸ்தம்பித்து நின்று விடக்கூடாது. மேலதிக உற்சாகத்துடன் பயணப்பட வேண்டும். அதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்” என்று அவர் சொன்னதும் நட்பின் வெளிப்பாடுதான்.

(தினமணி டாட் காமில் கடந்த வருடம் ஜூலை 1 அன்று வெளியான கட்டுரை.)

ADVERTISEMENT
ADVERTISEMENT