காஷ்மீர் சொல்லும் செல்லுலாயிட் கதைகள்

கேமரா கண்களுக்கு காஷ்மீர் எப்பொழுதும் திகட்டாத விருந்துதான். வெண்மை பூசிய வெள்ளி மின்னும் பனிமலைகள், ஆங்காங்கே திட்டு திட்டாக எட்டிப்பார்க்கும் நீலவானம்.
காஷ்மீர் சொல்லும் செல்லுலாயிட் கதைகள்

கேமரா கண்களுக்கு காஷ்மீர் எப்பொழுதும் திகட்டாத விருந்துதான். வெண்மை பூசிய வெள்ளி மின்னும் பனிமலைகள், ஆங்காங்கே திட்டு திட்டாக எட்டிப்பார்க்கும் நீலவானம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று தோகை விரித்தாடும் பசுமைவெளிகள், சலனமின்றி கண்ணாடி போல விண்ணை உள்வாங்கி பிரதிபலிக்கும் ஏரிகள் என காஷ்மீரில் ஒரு கற்றுகுட்டி படம் பிடித்தாலும் ஒவ்வொரு படமும் ஒரு அழகியலை பிரதிபலிக்கும்.

எல்லா காலங்களிலும் சினிமா படைப்பாளிகளுக்கு காஷ்மீர் ஒரு  கனவு பூமியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. காஷ்மீர்  பியூட்டிபுல் காஷ்மீர் என்று அழகை சிலாகித்து பாடுவதாகட்டும்,  புது வெள்ளை மழை பொழிகின்றது என்று காதலை சொட்ட சொட்ட சொல்வதாகட்டும் காஷ்மீர் என்றும் காஷ்மீர்தான். இருபதுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்ற மறைந்த பெங்காலி இயக்குனர் ரிதுபர்னோ கோஷ் காஷ்மீரை தனது ஜீவபூமி என்று மகிழ்வார். அவரின் 'உன்னிசே ஏப்ரல்', 'அபோமான்' போன்ற படங்களில் பெரும் பகுதி  காஷ்மீர் பள்ளதாக்கில் படமாக்கப்பட்டவைதான். ரிதுவுக்கு மட்டுமல்ல எல்லா இயக்குனர்களுக்கு இது பிரியமிகு பிரதேசம்.

ஒரு காலத்தில் காதலுக்கும், அழகியலுக்கும் பாடலுக்கும் களமாக இருந்த காஷ்மீர் நாளைடைவில் சமூக பிரச்சனைகள் பேச களமாகி பின்னர் காஷ்மீரே களமாகி போனது.

சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் பல டாகுமெண்டரிகள் படமாக்கபட்டாலும் காஷ்மீரை சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடச் செய்த படம் சஷிகபூர் நடிப்பில் 1965 ல் வெளியான ஜப் ஜப்  பூல்கிளே எனும்  படம் தான். வழக்கமான ஏழை பையனுக்கும் பணக்கார பெண்ணிற்குமான காதல் கதைதான் என்றாலும் கதை காஷ்மீரில் நடைபெறுவதால் அந்த ஏழை பையன் ஒரு படகோட்டி. டால் ஏரியில் படகோட்டி பிழைப்பு நடத்துபவனாக சித்தரிக்கப்படுகிறான. அங்கு வரும் ராஜவம்சத்து பட்டத்து இளவரசி ரித்து கண்ணா அவனின் படகை வாடகைக்கு எடுக்கிறாள். காஷ்மீரை சுற்றிப்பார்க்க அவளின் முயற்சியில் அவளுக்கும் படகோட்டிக்கும் எப்படி காதல் மலர்கிறது என்பதுதான் கதை. ஆனந்த் கல்யாண்ஜி இசையில் இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டடிக்க, அதற்கு ஏற்ப காஷ்மீரின் அழகு படமாக்கப்பட, இந்தப் படம் 1965-ல் பிளாக் பஸ்டர் படமானது. பாகிஸ்தானில் வெளியாகி பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மீது மோகம் மிகுந்து அது 1971 போருக்கு உந்துதல் தந்ததும் இப்படம் என்போரும் உண்டு.

நூற்றுக்கும் அதிகமான படங்கள் இங்கு படமாக்கப்பட்டு இருந்தாலும் அதில் பெரும்பாலும் பாடல் காட்சிகளாக இருக்கும். ஆனால் காஷ்மீரை மையமாக வைத்தும் பல படங்கள் வந்திருக்கின்றன. தமிழில் ரோஜா, உயிரே என சில படங்களை வரிசைப்படுத்தலாம். ஹிந்தியை எடுத்துக் கொண்டால்  பிட்டூர், ஹைதர், பனா, யாஹூன், மிஷன் காஷ்மீர், சிக்கந்தர், என வரிசைக்கட்டி சொல்லலாம்

அயல்நாட்டு வரிசையில் Passage to India வை குறிப்பிடத்தக்க படமாக சொல்ல முடியும்,  பிரிட்டிஷ் அமெரிக்க படமான இப்படம் 1920-ன் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது எனினும் பெரும்பாலான பகுதிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன. காஷ்மீர் பிரச்னை உலகளாவிய பிரச்சனையாக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் குறித்து ஏராளமான படங்கள் வெளியாகின.

சமீபத்தில் வெளியான பரமாணு, ராசி, உரி ஆகிய படங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் ராசி படம் ஆலியா பட் நடிக்க பாகிஸ்தானில் ஒரு இந்திய அப்பாவி பெண் உளவாளியாக மாறி அவர்களின் சதியை எப்படி முறியடிக்கிறாள் என்று கதை சொல்லி இந்திய பார்வையாளர்களின் நாடி நரம்பை எல்லாம் சூடேற வைத்தது. உரியும் அவ்வகைதான். இந்தியா நிகழ்த்தியதாக சொல்லப்படும் சர்ஜிகள் ஸ்டிரைக்கை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இந்த கதையும் அதே போன்று தேசபக்தியை விதைத்தது. இது  போன்ற படங்கள்  காஷ்மீர் என்றால் காதலுக்கான பிரதேசம் என்ற நிலையை மாற்றி கலவர பிரதேசம் என்ற பாவனையை தோற்றுவித்தது. தேசபக்தி மிக மிக காஷ்மீர் மீதான் காதல் குறையத் தொடங்கியது. தவிர இத்தகைய படங்களால் காஷ்மீர் இன்னும் சீற்றமாகி இந்திய படங்களுக்க்கு தடை போட்ட நிகழ்வுகளும் உண்டு. இந்திப் படங்களுக்கு பாகிஸ்தான் மற்றும் அரபு தேச சந்தை மிகப் பெரியது. இதுபோன்ற நிகழ்வால் அது சூடு போட்டு கொண்டது.

பிரச்னைகளை அடிப்படையாக வைத்து எடுத்த படங்களை விட காதல் அடிப்படையான படங்கள் தான் மக்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றிருக்கின்றன. இம்தியாஸ் அலி இயக்கத்தில் வெளியான ஹைவே,  யே ஜவானி ஹை திவானி, ஜப் தக் ஹை ஜான், ராக்ஸ்டார் (பாகிஸ்தான் நடிகை நர்கீஸ் நாயகியாக நடித்த படம் ) லம்பா, ஜான்வார், சில்சிலா ஆகிய படங்கள் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளுக்காகவும் பாடல்களுக்காகவும் பெரும் வெற்றி பெற்றன.

இந்திய மாநிலங்களிலேயே காஷ்மீர் மிகவும் வித்தியாசமானது. முழுக்க முழுக்க இமயத்தின் சாரலில் தொய்ந்து இருப்பதால் பார்ப்பவர் மனதை எளிதில் கொள்ளை கொள்ளும் தன்மை வாய்ந்தது. எழுபது ஆண்டு கால புவி அரசியல் அந்த பகுதியை ஒரு பதட்டமுள்ள பகுதியாகவே வைத்திருக்கிறது. இருப்பினும் இப்பகுதியை மிகப்பெரிய சுற்றுலாதலமாக தக்க வைத்துக் கொள்ள இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் காஷ்மீர் நிர்வாகம் போராடிக் கொண்டே வந்திருக்கிறது. அதற்கு மிகப் பெரிய பாலமாக அமைந்திருப்பது சினிமா. சில சர்ச்சைக்குரிய படங்களை தவிர்த்து பாத்தோமேனால் காஷ்மீர் எனும் கனவு பூமி உலக மக்களின் பார்வைக்கு காமரா கண்கள் மூலமே சென்றடைந்திருக்கிறது. நேரில் பார்க்க தவறியவர்களில் பெரும் சதவீத மக்கள் காஷ்மீரை சினிமாவில் பார்த்து ரசித்தவர்கள்தான். காஷ்மீரின் இன்னொரு பகுதியான லே மற்றும் லடாக்கில் எண்ணற்ற திபெத்திய படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சம்சார, லிட்டில் புத்தா போன்ற புகழ்பெற்ற படங்கள் இங்குதான் உருவாகின. வேலி ஆப் செயிண்ட்ஸ் திரைப்படம் டால் ஏரியின் அழகியலை பெருமையை பேசிய விதத்திற்காக சண்டான்ஸ் திரைப்பட விழாவில் விருதுகள் பல வென்றது. காஷ்மீரை இன்னும் புகழ்பெற்றதாக மாற்றவேண்டும் என்று சினிமா எடுக்க பல சலுகைகளை அள்ளி தெளித்து வருகிறது காஷ்மீர் சுற்றுலா மேம்பாட்டு கழகம்.

கோவா திரைப்பட விழாவில் வருடந்தோறும் அவர்கள் இதற்கென பிரத்யோக நிகழ்ச்சிகளை நடத்தி திரைப்பட படைப்பாளிகளை ஈர்க்க பல முயற்சிகள் எடுக்கின்றனர். அழகியலின் ராணியான காஷ்மீரில் இதுவரை நிகழ்ந்தவை துரதிஷ்மானவை. அந்த நிலையிலும் காஷ்மீரின் நிஜத்தன்மையை தக்க வைத்துக் கொள்ள உதவியது சினிமா. இனி வரும் காலங்களிலும் இந்த செல்லுலாயிட் உலகம் காஷ்மீரை தாங்கி பிடிக்கும். ஏன் எனில் காஷ்மீரையும் படைப்பாளியையும் பிரிக்கவே முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com