முகமதியர்களை எதிர்த்த வீரதீர மிக்க கடைசி இந்து அரசர்களில் ஒருவரின் கதை மீண்டும் திரைப்படமாகிறது!

ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்டு சிலாகிக்கப்பட்டு விட்ட இத்திரைக்கதையில் அப்படியென்ன மாற்றத்தைப் புகுத்தி மீண்டும் சுவாரஸ்யமாக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் யாருக்கேனும் வரலாம்.
முகமதியர்களை எதிர்த்த வீரதீர மிக்க கடைசி இந்து அரசர்களில் ஒருவரின் கதை மீண்டும் திரைப்படமாகிறது!

பிரித்விராஜ் சம்யுக்தை கதையை மறக்க முடியுமா? கதை என்பதைக் காட்டிலும் அதை வரலாறு என்று சொல்வதே உத்தமம். 

ஏனெனில், ப்ரித்விராஜ் எனும் ராஜபுத்திர மன்னன் இந்தியாவை ஆண்ட இந்து மன்னர்களில் கடைசிக்கு முந்தியவர்.

ப்ரித்விராஜ் செளஹான் எனும் இயற்பெயர் கொண்ட ராஜபுத்திரர்களில் செளஹான் பிரிவைச் சார்ந்த இம்மன்னனுக்கு பக்கத்திலிருந்த நாடான கனோஜியின் இளவரசி சம்யுக்தையின் மீது தீராக்காதல். அவளுக்கும் தான். ஆனால், சம்யுக்தையின் தந்தையும், கனோஜியின் மன்னருமான ஜெயச்சந்திர ரத்தோடுக்கு ப்ரித்விராஜைக் கண்டால் ஆகாது. அவர் முகமது கோரியுடன் இணைந்து கொண்டு ப்ரித்விராஜை ஒடுக்கி டெல்லியைக் கைப்பற்றி மிகப்பெரும் ராஜபுத்திர பேரரசராகும் கனவில் இருக்கிறார். இந்நிலையில் மகளின் காதல் தெரிந்ததும் அவளை வேற்று மன்னர்களில் எவரேனும் ஒருவருக்கு மணமுடித்து அனுப்ப சுயம்வரம் நடத்துகிறார்.

சுயம்வரத்தில் கலந்து கொள்ள அனைத்து ராஜபுத்திர மன்னர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் டெல்லியின் பிரித்விராஜ் செளஹான் மட்டும் புறக்கணிக்கப்படுகிறார். ராஜபுத்திர அரச குலங்களைப் பொருத்தவரை இது மிகப்பெரிய அவமானம். அதிலும் பிரித்விராஜனுக்கு, சம்யுக்தையின் மீது காதல் இருக்கும் போது அவனால் இதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. சுயம்வர தினத்தன்று குதிரையின் மீதமர்ந்திருக்கும்வாயிற்காப்போன் சிலைக்கும் மறைந்திருந்து சரியாகச் சுயம்வர நேரத்தில் சிலையை உடைத்துக் கொண்டு வெளிவந்து இளவரசி சம்யுக்தையின் சுயம்வர மாலையை ஏற்று அவளை அப்படியே அலாக்காகத் தூக்கித் தன் குதிரையில் அமர்த்தி டெல்லிக்கு கொண்டு சென்று விடுகிறான். 

இதனால் கடும் கோபமுற்ற கனோஜி மன்னன், தனது நண்பரான முகமது கோரியுடன் இணைந்து பிரித்விராஜனைப் போரில் தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டுகிறார்.

முகமது கோரி ஒரு ஆப்கானிய மன்னன். வழக்கம் போல அனைத்து முகமதிய மன்னர்களுக்கும் இருந்த டெல்லி அரியணை ஆசை இவருக்கும் இருந்தது. அதற்குத் தடையாக இருந்தது பிரித்விராஜனும் அவனது வம்சாவளியினருமே. அவர்களை ஒழித்துக் கட்டவே செளஹான்கள் மற்றும் ரத்தோட்கள் எனும் இரு ராஜபுத்திர அரச குலங்களுக்குள் பொறாமை, அரசியல் துவேஷங்களைத் தூண்டிவிட்டு அவர்களை மோத விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் முகமது கோரி. அதுமட்டுமல்லாமல் முன்னரே முதலாம் தரெய்ன் போரில் பிரித்விராஜனுடன் பொருதி போரில் தோல்வியுற்ற கோபமும் அவருக்கு இருந்தது. அந்தத் தோல்விக்கான பழியைத் தீர்த்துக் கொள்ள சமயம் பார்த்து முகமது கோரி காத்திருந்தபோது தானாக வந்து வலையில் சிக்கிய மீன் கனோஜியின் ஜெயச்சந்திரன். 

ஜெயச்சந்திரனுடன் கூட்டுச் சேர்ந்து இரண்டாம் தரெய்ன் போருக்குத் திட்டமிடப்பட்டது. இம்முறை முகமது கோரியின் சூழ்ச்சிக்குப் பலியானார் பிரிதிவிராஜ் செளஹான். ஆம், தமது 43 ஆம் அகவையில் போரில் வீரமரணம் அடைந்தார் மன்னர் பிரித்விராஜ செளஹான்.

இதெல்லாம் வரலாற்றுப் பதிவுகள்.

இதையெல்லாம் தான் நாங்கள் வரலாற்றுப் பாடப்புத்தகத்திலும் பாலிவுட், கோலிவுட் திரைப்படங்களிலுமாகக் கண்டு விட்டோமே, இப்பொதென்ன அதற்கு என்கிறீர்களா?

காரணம் இல்லாமலில்லை. மீண்டும் பிரித்விராஜ், சம்யுக்தையின் கதை திரைப்படமாகவிருக்கிறது. தமிழில் அல்ல. இந்தியில்.

பிரித்விராஜனாக நடிக்கவிருப்பது தேசிய விருது பெற்ற நடிகரான அக்‌ஷய்குமார்.

பிரித்விராஜனாக அக்‌ஷய் குமார்...
பிரித்விராஜனாக அக்‌ஷய் குமார்...

தற்போது 52 வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் அக்‌ஷய் குமார், தமது 43 வயதில் முகமது கோரியுடனான போரில் வீரமரணம் எய்திய இந்து ராஜபுத்திர அரசனான பிரித்விராஜ் வேடமேற்று நடித்து அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டப் போகிறார். 

அஜ்மீரில் அமைந்திருக்கும்  ராஜா பிரித்விராஜ் சிலை
அஜ்மீரில் அமைந்திருக்கும்  ராஜா பிரித்விராஜ் சிலை

படத்தை தயாரிக்கவிருப்பது பாலிவுட்டின் புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான  யஷ் ராஜ் ஃபிலிம்ஸ்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் சந்திரபிரகாஷ் திவிவேதி. இவர் , முன்பே ’சாணக்யா’  எனும் சரித்திர மெகாத்தொடர் மூலம் தானொரு திறமை மிக்க இயக்குனர் என்று நிரூபித்தவர். 

பிரித்விராஜ் திரைப்படமானது அடுத்தாண்டு தீபாவளியன்று அதாவடு 2010 ஆம் ஆண்டு தீபாவளிக்குத் திரை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதெல்லாம் சரி தான்... ஆனால்;

ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்டு சிலாகிக்கப்பட்டு விட்ட இத்திரைக்கதையில் அப்படியென்ன மாற்றத்தைப் புகுத்தி மீண்டும் சுவாரஸ்யமாக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் யாருக்கேனும் வரலாம்.

வந்தால் தவறில்லை, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இந்தித் திரைப்படங்களுக்கும் பொதுவானதே!

ஆனால், இம்முறை அப்படி நடந்து விட வாய்ப்பில்லை. ஏனெனில், இம்முறை பிரித்விராஜனின் கதையில் சம்யுக்தைக்கு இடமிருந்தாலும் கூட கதையில் பிரதானமாக ஒலிக்கவிருப்பது பிரித்விராஜ் எனும் இந்து மன்னன் இந்தியாவில் ஊடுருவ நினைத்த முகமதியர்களை ஒடுக்க இந்து அரசர்களை குறிப்பாக ராஜபுத்திர அரசர்களை ஒருங்கிணைக்க முயன்ற வீரதீரக் கதை வெகு ரசமாக படமாக்கப்படவிருக்கிறதாம்.

‘ஒரே தேசம்’ எனும் கொள்கை வலுத்துவரும் இவ்வேளையில் இத்தகையை திரைப்படங்கள் குறித்து அறிவிப்புகள் வராமல் இருந்தால் தான் அது ஆச்சர்யம்.

பிரித்விராஜ் டெல்லியை ஆண்ட இந்து மன்னர்களில் கடைசிக்கு முந்தியவர் இவரை அடுத்து ராஜ ஜெய்சிங் டெல்லியை ஆண்ட சமயத்தில் இந்து மன்னர்களின் மிகப்பெரும் அரண்மனைகளையும், கோயில்களையும் உருக்குலைத்து மறைத்து அவற்றின் பூர்வீக வடிவங்கள், வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு இன்று தாஜ்மஹால் முகமதியக் கட்டடக் கலைக்குச் சான்றாக உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது என்றொரு குற்றச்சாட்டும் முன்பு இணையத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

அந்தக் கதையெல்லாம் இந்தத் திரைப்படத்தில் இடம் பெற வாய்ப்பில்லை என்ற போதும். முகமதிய அரசர்களை எதிர்த்த வீரதீர பராக்கிரமம் பொருந்திய ராஜா பிருத்விராஜ் என்ற அளவில் இன்றைய தலைமுறையினருக்கு அன்று நடந்த போரின் உண்மையை ஒட்டிய சம்பவங்களே பெரிதும் கடத்தப்பட வேண்டும் என்ற ஆதங்கம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com