நடிகர் சங்கம் கடந்து வந்த பாதை..!

அன்றைய சென்னை மாகாணத்தில் பிரபலமாக இயங்கி வந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் நடித்து வந்தவர் சோமசுந்தரம்.
நடிகர் சங்கம் கடந்து வந்த பாதை..!

தமிழ்த் திரைப்படத்துறையில் பணியாற்றும் நடிகர்களையும், நடிகைகளையும் உறுப்பினராகக் கொண்ட சங்க அமைப்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் செயல்பட்டு வருகிறது. கே.சுப்பிரமணியம், என்.எஸ்.கே., டி.கே.பகவதி, டி.கே.சண்முகம், தங்கவேலு உள்ளிட்ட கலைஞர்களால் இந்தச் சங்கம் 1952-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.  அதன் முதல் தலைவராக கே.சுப்பிரமணியம் இருந்தார். 

அதைத் தொடர்ந்து எஸ்.எஸ். ஆர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், அஞ்சலிதேவி உள்ளிட்டோர் தலைவர்களாக இருந்துள்ளனர். பின்னர் விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் இந்த சங்கத்தின் தலைவர்களாக இருந்து நிர்வகித்தனர்.  கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரத்குமார் அணியை வென்று, நாசர் தலைமையிலான அணி நிர்வாகத்தை கவனித்து வந்தது. 

அன்றைய சென்னை மாகாணத்தில் பிரபலமாக இயங்கி வந்த நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் நடித்து வந்தவர் சோமசுந்தரம். இவர்தான் நடிகர்களுக்காக ஒரு சங்கம் அமைத்து நாடக நடிகர்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்தார். அதாவது நடித்து முடித்த பின்னர் பலருக்கு உரிய ஊதியம் வாங்குவது பெரும்பாடாக இருந்துள்ளது. அதை கவனத்தில் கொண்டு தொடங்கப்பட்டதே நடிகர் சங்கம்.  

சக்தி நாடக சபாவில் நடித்து வந்த கே.ஆர். ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, நம்பியார், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலர் அந்த அமைப்பில் உறுப்பினர்களாயினர். மயிலாப்பூர் ஜம்மி பில்டிங் எதிரில் ஒரு அறையில் சக்தி நாடக சபா குழுவினர் ஒத்திகைப் பார்ப்பார்கள். அங்குள்ள ஒரு சிறு அறையில்தான் ஆரம்பத்தில் நடிகர் சங்க அலுவலகம் செயல்பட்டது.

பிற்காலத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இடம் பெற்ற இந்த நடிகர் சங்கம் முதலில் ஒரு சாதாரண நாடக நடிகரால் தொடங்கப்பட்டது என்பது முக்கியமான விஷயம். ஆரம்பத்தின் அதன் நிதி இருப்பு பூஜ்ஜியம்தான். உறுப்பினர் அடையாள அட்டை அச்சிட இருபது ரூபாய் கூட இல்லாமல் இருந்துள்ளனர். சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோக்கள் சேலம், கோவை போன்ற இடங்களில்தான் இருந்தன. 

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ், கோவை பட்சிராஜா ஸ்டுடியோ என சில ஸ்டுடியோக்கள் பிரபலமாக விளங்கின. அங்கெல்லாம் படப்பிடிப்பு நடக்கும். அங்கே போய் தங்கி நடிப்பார்கள் நடிகர்கள். ஸ்டுடியோக்கள் சென்னை வந்த பிறகுதான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிக்கும் நடிகர், நடிகைகள் சென்னையில் தங்கினார்கள். 

இதையடுத்து திரைப்படக் கலைஞர்களுக்கென்று ஒரு தொழில்முறை அமைப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் கே.சுப்பிரமணியம் எடுத்த முயற்சியால் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது.

கே.சுப்ரமணியத்தை தொடர்ந்து, டி.வி.சுந்தரம், சித்தூர் வி.நாகைய்யா, என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., அஞ்சலிதேவி, ஆர்.நாகேந்திர ராவ், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.வி. சாமிநாதன், கே.ஆர்.ராமசாமி, சிவாஜி கணேசன், ராதாரவி, விஜயகாந்த், சரத்குமார், நாசர் என புகழ்பெற்ற பல கலைஞர்கள் தலைவர்களாக இருந்து வழி நடத்திய இந்த சங்கம் இதுவரை பதினைந்து தலைவர்களை சந்தித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com