ரஜினியைக் ‘கெட்ட பயலாக்கிய’ இயக்குநர்!

தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே ரஜினியை வைத்து வெற்றியைக் கொடுத்த மகேந்திரன் நினைத்திருந்தால் அவரை வைத்து...
ரஜினியைக் ‘கெட்ட பயலாக்கிய’ இயக்குநர்!

இயக்குநர் மகேந்திரனுக்கும் நடிகர் ரஜினிகாந்த்திற்கும் இடையில் இருந்த பரஸ்பர நட்பும் பிரியமும் மிகப் பிரத்யேகமானது. இவர்கள் இருவரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து இதை நம்மால் அழுத்தமாக உணர முடியும்.

ஒரு திரை விழாவில் இயக்குநர் பாலச்சந்தர், ரஜினியை நேர்காணல் செய்யும் சுவாரசியமான பகுதி நடந்து கொண்டிருக்கிறது. ஆசிரியரின் முன்னால் அமர்ந்திருக்கும் மாணவனைப் போல பயபக்தியுடன் அமர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் ரஜினி. அதில் ஒரு கேள்வி ‘உனக்குப் பிடித்தமான இயக்குநர் யார்?’ என்று பாலச்சந்தர் கேட்கிறார். ரஜினி சற்றும் தயங்கவில்லை. மின்னல் வேகத்தில் பதில் சொல்கிறார். மகேந்திரன்.

ரஜினிக்கு, ஒரு நடிகருக்கான அஸ்திவாரத்தை பாலச்சந்தர்தான் அமைத்துக் கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தனது குருநாதர் இடத்தில் பாலச்சந்தரை வைத்து மதிப்பவர் ரஜினி என்பதையும் நாம் அறிவோம்.

ஒரு பொதுச்சபையில், பல இயக்குநர்கள், நடிகர்கள் முன்னிலையில், அதுவும் குருநாதராலேயே கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு சம்பிரதாயமான பதிலை அளிக்க ரஜினி நினைத்திருந்தால் அவரை எவரும் தடுத்திருக்கப் போவதில்லை. பாலச்சந்தர் என்று அவர் சொல்லியிருந்தால் கூட அது ஒரு நல்ல சம்பிரதாயமான பதிலாக அமைந்திருக்கும். ‘ஆஹா.. குருவை மதிக்கும் சீடர்’ என்று ரஜினியின் மதிப்பு இன்னமும் உயர்ந்திருக்கும். அல்லது தன்னை ‘சூப்பர் ஸ்டார்’ அந்தஸ்த்திற்கு இட்டுச் சென்ற ‘எஸ்.பி.முத்துராமன்’ போன்ற வணிக இயக்குநர்களைக் கூட குறிப்பிட்டிருக்க முடியும்.

ஆனால்,  தன் மனதிற்குப் பட்டதை அந்த இடத்தில் தயங்காமல் சொன்னது ரஜினியின் நேர்மையின் அடையாளம் மட்டுமல்ல, மகேந்திரனின் மீது அவர் வைத்திருந்த மதிப்பையும் காட்டுகிறது.

*

இப்போது மகேந்திரனின் பக்கமிருந்து பார்ப்போம். இளம் வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் இருந்த பல அபத்தங்கள் குறித்து மகேந்திரனுக்கு ஒவ்வாமையும் எரிச்சலும் இருந்துள்ளது. தன் மாமாவின் வழிகாட்டலில் ஆங்கிலப்படங்களை பார்த்து வளர்ந்த மகேந்திரன், அவற்றோடு ஒப்பிடும் போது மலைக்கும் மடுவிற்குமான இடைவெளியை தமிழ் சினிமாக்களில் காண்கிறார். அளவுக்கு அதிகமான வசனங்கள், பாடல்கள், அவற்றில் இருந்த மிகையுணர்ச்சி, செயற்கைத்தனங்கள் போன்றவற்றில் அவருக்குக் கசப்பு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆர் நடித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை அடைந்திருந்த சமயம் அது. அதற்காக ஏராளமான பாராட்டுக்கூட்டங்கள் நடைபெற்றன. அவற்றில் ஒன்று காரைக்குடி அழகப்பா செட்டியார் கலைக்கல்லூரியிலும் நடந்தது. அங்குக் கல்லூரி மாணவராக இருந்தார் மகேந்திரன். எம்.ஜி.ஆர் முன்னிலையில் நிகழ்ந்த கலை நிகழ்ச்சிகளில் பேச்சுப் போட்டியும் ஒன்று. மகேந்திரனும் அந்த வரிசையில் இருந்தார். அவருக்குத் தரப்பட்டிருந்த தலைப்பு ‘தமிழ் சினிமா’.

‘தமிழ் சினிமா’வில் இருந்த அபத்தங்களையும் செயற்கைத்தனங்களையும் தனது பேச்சில் காரசாரமாகச் சுட்டிக் காட்டினார் மகேந்திரன். இதற்காக எம்.ஜி.ஆரை உதாரணம் காட்டவும் அவர் தயங்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் இதற்காக கோபித்துக் கொள்ளவில்லை. மகேந்திரனின் பேச்சையும் விமரிசனத்தையும் தானும் ரசித்ததோடு கூட்டத்தையும் கைத்தட்டச் சொல்லி ஊக்கப்படுத்தினார். மாறாக, சினிமா என்னும் கலையின் மீது ஒரு மாணவனுக்கு இருந்த ஈடுபாட்டை எண்ணி வியந்து மகேந்திரனுக்கு வாழ்த்துக் கடிதம் அளித்தார்.

பிறகு எம்.ஜி.ஆரின் மூலமாகவே திரைத்துறைக்கு மகேந்திரன் வந்து சேர்ந்தது ஒரு தனிக்கதை. தமிழ் சினிமாவின் போதாமைகள் குறித்துப் பல கடுமையான விமரிசனங்களைக் கொண்டிருந்த மகேந்திரன் பின்னாளில் அதன் ஒரு பாகமாக தானும் ஆக நேர்ந்தது ஓர் அவல நகைச்சுவை. தனக்குப் பிடிக்காவிட்டாலும், வேண்டாவெறுப்பாக பல திரைப்படங்களுக்கு கதை - வசனகர்த்தாகவாக அவர் ஆக நேர்ந்தது. அவற்றில் பல வெற்றிப்படங்களாக அமைந்ததால் தயாரிப்பாளர்கள் அவரை தொடர்ந்து நச்சரித்தனர்.

மகேந்திரனுக்கும் ரஜினிக்கும் இடையில் அறிமுகம் உருவானதற்கு காரணமாக இருந்தது ஒரு சிகரெட் என்றால் அது ஆச்சரியமாக இருக்கும். ஆம், அது அப்படித்தான் நேர்ந்தது.

கதை - வசனகர்த்தாவாக மகேந்திரன் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருந்த படங்களில் ஒன்று ‘ஆடு புலி ஆட்டம்’. படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ச்சியாக வசனம் எழுதித் தள்ளிக் கொண்டிருந்த மகேந்திரன், சிகரெட் தீர்ந்து போய் விட்டதைக் கவனிக்கிறார். அவருக்கு கையொடிந்தது போல் ஆகிப் போனது. ‘யாரையாவது அனுப்பி சிகரெட் வாங்கி வரச் சொல்லலாம்’ என்று வெளியே வரும் போது, கண்ணாடிக்கு முன் நின்று சிகரெட்டை வாயில் தூக்கிப் போட்டுப் பிடித்து நடிப்பிற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த ரஜினியைப் பார்க்கிறார். ‘ஹலோ.. மிஸ்டர்.. சிகரெட் கிடைக்குமா?” என்று மகேந்திரன் கேட்க, இருவருக்குமான அறிமுகம் நடக்கிறது. அப்போது துளிர்த்த நட்பு பல வருடங்களுக்கும் மேலாக நீடிக்கப் போகிறது என்பதை அப்போது அவர்கள் அறிந்திருக்க முடியுமா?

‘ஆடு புலி ஆட்டம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் மட்டுமல்ல, அது முடிந்த பிறகும் பல சமயங்களில் ரஜினியும் மகேந்திரனும் சந்தித்து பல பின்னிரவுகளைப் பேசியே தீர்க்கிறார்கள். ரஜினியிடமிருந்த பிரத்யேகத் திறமையையும் ஆர்வத்தையும் மகேந்திரன் கண்டுகொள்கிறார். அதுவரை பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களே ரஜினியைத் தேடி வந்து கொண்டிருந்தன. ‘ஆனால் இவரை ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக பரிமளிக்கச் செய்ய முடியும்’ என்கிற எண்ணம் மகேந்திரனுக்குள் வளர ஆரம்பித்தது.

இந்த எண்ணம், மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தின் வழியாக பிறகு உண்மையானது. ஆனால் அந்தப் பாதை அத்தனை எளிமையானதாக அமையவில்லை. தான் விரும்பியிருக்காத விஷயங்களையே தமிழ் சினிமாவில் செய்ய நேர்ந்தனின் காரணமாக சினிமாத்துறையிலிருந்து விலகுவதற்காக மகேந்திரன் பலமுறை முயன்றிருக்கிறார். என்றாலும் விதி அவரை விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் தமிழ் சினிமாவிற்குள்ளேயே தள்ளியது.

அதுவரை கதை - வசனகர்த்தாவாக புகழ்பெற்றிருந்த மகேந்திரனை ஒரு தயாரிப்பாளர் சந்திக்கிறார். ‘ஏதேனும் கதை இருந்தால் சொல்லுங்கள். நீங்களே இயக்கித் தாருங்கள்’ என்று வேண்டுகிறார். பல தமிழ் நாவல்களை மகேந்திரன் அப்போது வாசித்து முடித்திருந்தார். அவற்றில் ஒன்று, உமாசந்திரன் எழுதிய ‘முள்ளும் மலரும்’. உண்மையில் மகேந்திரன் பாதி நாவலைத்தான் அப்போது வாசித்திருந்தார். ‘வின்ச் ஆப்ரேட்டர், கோபக்கார அண்ணன், பாசமிகு தங்கை’ போன்ற பாத்திர படைப்புகள் அவரைக் கவர்ந்திருந்தன. எனவே அதை வைத்து ஒரு மாதிரியான திரைக்கதையை தன் சுயமகிழ்ச்சிக்காக எழுதி வைத்திருந்தார் மகேந்திரன்.

தயாரிப்பாளர் இவரை நச்சரிக்கவே, ‘சரி.. ஒரு அண்ணன் - தங்கை கதை’ என்று மகேந்திரன் சொல்லியதுதான் தாமதம், ‘சூப்பர்… இதையே படமாக்கலாம்..” என்று துள்ளிக் குதிக்கிறார் தயாரிப்பாளர். ‘அண்ணன் - தங்கை கதை என்றவுடனேயே அவருக்கு ‘பாச மலர்’ திரைப்படத்தின் வெற்றி நினைவில் தெரிந்திருக்க வேண்டும். மகேந்திரனும் அப்போது ஒரு நல்ல வசனகர்த்தாவாக அறியப்பட்டிருந்ததால் ‘மனுஷர் பிய்த்து விடுவார். நன்றாகக் கல்லா கட்டி விடலாம்’ என்பது தயாரிப்பாளரின் கனவாக இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் டபுள் பாசிட்டிவ்வைப் பார்த்து பின்பு அவர் அலறியதும் மகேந்திரனைத் திட்டித் தீர்த்ததெல்லாம் தனிக்கதை.

‘சரி. அண்ணன் கதாபாத்திரத்துக்கு யாரை நடிகராகப் போடலாம்?’ இது தயாரிப்பாளரின் கேள்வி. சற்றும் யோசிக்காமல் மகேந்திரன் சொன்னது ‘ரஜினிகாந்த்’. தயாரிப்பாளரின் முகம் வாடிப் போகிறது. “அடப் போப்பா.. அந்தாளு கருப்பா இருக்காரு.. வில்லன் பாத்திரங்களில்தான் நடிக்கிறாரு.. அவரைப் போய்.. ஏன்? அவரு உங்க பிரெண்டா இருக்கறதால இந்த சிபாரிசா?’ என்று தன் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார். மகேந்திரன் நிதானமாகவும் உறுதியாகவும் சொல்கிறார். ‘இல்லை. அவர் என் நண்பர் என்பதற்காக இதை நிச்சயம் சொல்லவில்லை. ‘காளி’ என்கிற பாத்திரத்திற்கு ரஜினிதான் கச்சிதமாகப் பொருந்துவார் என்பது திரைக்கதை எழுதும் போதே என் மனத்தில் தோன்றி விட்டது. என்னைச் சுதந்தரமாகப் படம் எடுக்கவிட்டால்தான் இந்தப் படத்தை இயக்குவேன். ரஜினிதான் அந்தப் பாத்திரத்தை ஏற்க வேண்டும். இல்லையென்றால் இந்தப் படத்தை இயக்க எனக்கு விருப்பமில்லை’ என்று தயாரிப்பாளரிடம் கறாராகச் சொல்லி விடுகிறார். 

ஓர் இயக்குநராக தனக்கு வந்த முதல் வாய்ப்பை அலட்சியமாகத் தட்டி விட எத்தனை பேரால் முடியும்? ரஜினியின் நடிப்புத் திறமை மீது மகேந்திரனுக்கு இருந்த அபாரமான நம்பிக்கையே இதற்குக் காரணம். பிறகு ‘முள்ளும் மலரும்’ திரையில் வந்து முதல் சில வாரங்களில் கவனிக்கப்படாமல், தயாரிப்பாளர் அலறி, பிறகு பார்வையாளர்களின் வாய்மொழியால் நன்மதிப்பு பரவி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. ரஜினியின் மீது மகேந்திரன் வைத்த அசாத்தியமான நம்பிக்கை இப்படியாக உண்மையானது.

தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே ரஜினியை வைத்து வெற்றியைக் கொடுத்த மகேந்திரன் நினைத்திருந்தால் அவரை வைத்து மேலதிகத் திரைப்படங்களை உருவாக்கி செல்வந்தராக ஆகியிருக்க முடியும். ஆனால் மகேந்திரன் அவ்வாறு செய்யவில்லை. தன்னுடைய பிரத்யேக பாணியில் உருவாக்க முடிகிற திரைப்படங்களில் மட்டுமே ஈடுபட நினைத்துள்ளார். ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படம் ‘உதிரிப்பூக்கள்’. முன்னணி நடிகர்கள் எவரும் இல்லாத திரைப்படம்.

தனக்குப் பிடித்த இயக்குநராக மகேந்திரனை ரஜினி குறிப்பிட்டிருந்தாலும், மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினி நடித்தது வெறும் மூன்று திரைப்படங்கள் மட்டுமே. ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்திற்குப் பிறகு மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினி நடித்தது ‘ஜானி’. அப்போது வெகுஜன மனநிலைக்கு இணக்கமான வணிகத் திரைப்படங்களின் நட்சத்திரமாக ரஜினி உயர்ந்து கொண்டிருந்தார். என்றாலும் தன் பாணியிலிருந்து ‘ஜானி’ திரைப்படம் பெரிதும் விலகாமல் பார்த்துக் கொண்டார் மகேந்திரன். ‘ஜானி’ ரஜினி திரைப்படமாகவும் இருந்தது. அதற்குரிய சில வணிக அம்சங்களும் இருந்தன. அதையும் தாண்டி மகேந்திரனின் அடையாளங்களும் பெரிதும் இருந்தன. இப்படியொரு வசீகரமான கலவையில் ‘ஜானி’ திரைப்படம் அமைந்தது. ஒருவகையில் இதுவே அதன் பலமும் பலவீனமும். இளையராஜாவின் அற்புதமான பாடல்களும், பின்னணி இசையும் இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன. குறிப்பாக இதன் பாடல்கள் இன்றைக்கும் கூட விரும்பப்படுபவையாக இருக்கின்றன.

‘ஜானி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸை தான் நினைத்தபடி மகேந்திரனால் உருவாக்க முடியவில்லை. தயாரிப்பாளர் செய்த குளறுபடிகள்தான் இதற்குக் காரணம். கிளைமாக்ஸில் ஸ்ரீதேவி பாடும் போது அதற்குரிய சில ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மகேந்திரன் தவித்த நிலையில் இருக்கும் போது ‘உங்களுக்காக நான் அதிக நாட்கள் கூட கால்ஷீட் தருகிறேன். நீங்கள் விரும்பியபடி படமெடுத்து முடியுங்கள்’ என்று உதவ முன்வந்தார் ரஜினி. அவரைப்  போன்று ஸ்ரீதேவியும் மகேந்திரனுக்கு உதவத் தயாராக இருந்தார். ஆனால் இருந்த வசதிகளை வைத்து ஒரு மாதிரியாக ஒப்பேற்றி படப்பிடிப்பை நடத்தி முடித்தார். மகேந்திரன். அசந்தர்ப்பமான சூழ்நிலையில் ரஜினியிடமிருந்து வெளிப்பட்ட அன்பையும் பெருந்தன்மையையும் மகேந்திரன் பாராட்டத் தவறவில்லை.

மகேந்திரன் மற்றும் ரஜினி இணைந்து நிகழ்த்திய பயணத்தில் அமைந்த மூன்றாவது திரைப்படம் ‘கை கொடுக்கும் கை’. இதன் மூலத்திரைப்படம் ஒரு கன்னடத் திரைப்படமாகும். மூன்று கதைகளைக் கொண்டு ‘கதா சங்கமம்’ என்கிற தலைப்பில் உருவாகியிருந்த இந்த கன்னடத் திரைப்படத்தில், ‘முனித்தாயி’ என்கிற மூன்றாவது கதையை புட்டண்ணா கனகல் இயக்கியிருந்தார். இந்தக் கதையினால் கவரப்பட்ட ரஜினி, இதை தமிழில் ஒரு திரைப்படமாக இயக்கித் தருமாறு மகேந்திரனிடம் வேண்டுகோள் வைத்தார்.

மகேந்திரனுக்கும் அந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால் நாயகி கற்பழிப்பு செய்யப்படும் காட்சியை படத்தில் வைக்க அவருக்கு உடன்பாடில்லை. எனவே அதைச் சற்று மாற்றி தன்னுடைய பாணியில் திரைக்கதை எழுதினார். ஆனால் பிற்பாடு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஏதாவது நெருக்கடி எழுமோ என்கிற சந்தேகம் மகேந்திரனுக்குத் தோன்றியது. அவருக்கு நிகழ்ந்த முந்தைய அனுபவங்கள் அப்படி. ரஜினி மீது நம்பிக்கை இருந்தாலும், ரஜினியிடமும் தயாரிப்பாளரிடமும் ‘தான் விரும்பும்படி எடுக்கும் வடிவத்தில் அவர்கள் தலையிட மாட்டார்கள்’ என்கிற உறுதிமொழியை வாங்கினார். இதற்குப் பிறகே படப்பிடிப்புக்குச் சென்றார் மகேந்திரன்.

ஆனால் மகேந்திரன் பயந்தது மாதிரியே ஆயிற்று. படப்பிடிப்பின் ஒரு கட்டத்தில், ‘அசல் வடிவத்தின் படிதான் கிளைமாக்ஸை வைக்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நெருக்கடி தரப்பட்டது. ரஜினியும் அதைத்தான் விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. ரஜினி இப்படி சொல்லியிருக்க மாட்டார் என்று மகேந்திரனுக்கு நிச்சயமாகத் தெரியும். ஆனால் ரஜினி வெளியூர் படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்ததால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலைமை. தயாரிப்பாளரின் நெருக்கடியைத் தாங்க முடியாத மகேந்திரன், ‘சரி..உங்கள் விருப்பப்படியே படத்தை எடுத்துத் தருகிறேன். ஆனால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு தோல்விப் படமாகத்தான் அமையும். இதனால் எனக்கும் கூட பின்னடைவு ஏற்படும்’ என்று தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார். மகேந்திரன் கணித்தபடியே ஆயிற்று. பெரும்பாலும் வெற்றியையே ருசி பார்த்திருந்த ரஜினியின் திரைப்பயணத்தில் ‘கை கொடுக்கும் கை’ ரசிகர்களைக் கவராதது மட்டுமன்றி வணிகரீதியாகவும் தோல்விப்படமாக அமைந்தது. ரஜினிக்கும் சரி, மகேந்திரனுக்கும் சரி, அந்தத் திரைப்படம் கை கொடுக்கவில்லை.

வெளியூரில் இருந்து திரும்பிய ரஜினியிடம் நடந்தவற்றைச் சொல்லி வருந்தியிருக்கிறார் மகேந்திரன். ‘நான் அவ்வாறு சொல்லவில்லை’ என்று மறுத்த ரஜினி. ‘சரி விடுங்கள். இதற்கு மேல் என்னைக் கேட்காதீர்கள்’ என்று சங்கடம் அடைந்திருக்கிறார். ரஜினியின் தர்மசங்கடம் மகேந்திரனுக்கும் புரிந்ததால் இதைப் பெரிதுபடுத்தவில்லை.

இது போன்ற விவகாரங்களால் இருவருக்கும் இடையேயான நட்பில் எந்தவொரு விரிசலும் விழவில்லை என்பதுதான் விசேஷமான அம்சம். அவ்வப்போது தொலைபேசியிலும் நேரிலும் சந்தித்துப் பல விஷயங்களை ரஜினியும் மகேந்திரனும் பேசியிருக்கின்றார்கள். தனது படவிழாக்கள், தனிப்பட்ட விசேஷங்கள் போன்ற பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு மகேந்திரனை ரஜினி அழைத்திருக்கிறார். ‘எந்திரன்’ போன்ற பிரம்மாண்டத் திரைப்படங்களுக்காக தன் உடலை ரஜினி வருத்திக் கொள்வது குறித்து மகேந்திரனுக்கு கவலை ஏற்பட்டிருக்கிறது. ‘ராணா’ திரைப்படத்தின் போது ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட செய்தியும் மகேந்திரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஜினி மற்றும் மகேந்திரனுக்கு இடையில் பல வருடங்களாக இருந்த உன்னதமான நட்பு மகேந்திரனின் மறைவின் மூலம் முடிவிற்கு வந்தது. ‘எனக்குள் இருந்த இன்னொரு ரஜினியை உலகிற்கு காட்டியவர் மகேந்திரன்’ தனது அஞ்சலிக்குறிப்பில் மனம் நெகிழ்ந்து பேசினார் ரஜினி.

‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் வெளிப்பட்ட ‘காளி’ என்கிற பாத்திரம் தமிழ் சினிமா வரலாற்றில் உருவாக்கப்பட்ட மகத்தான கதாபாத்திரங்களுள் ஒன்று. முள்ளாக ரஜினிகாந்த்தையும் மலராக ஷோபாவையும் உருவகப்படுத்திக் கொண்டவர்களே அதிகம். ஆனால் ‘முள்ளாக’ இருந்த காளி ‘மலராக’ உருமாறுவதுதான் இந்தக் கதையின் மையம் என்கிறார் மகேந்திரன்.

மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினி நடித்து இன்னமும் அதிகத் திரைப்படங்கள் வெளிவந்திருக்கலாமே என்கிற விருப்பத்தை ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ ஆகிய திரைப்படங்கள் ஏற்படுத்துகின்றன. ஆனால், ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற அந்தஸ்தை ரஜினி எட்டிய பிறகு வெகுஜன இயக்குநர்கள் மட்டுமே அவரை நெருங்க முடிந்தது. ‘உன்னை வெச்சு என்னால படம் எடுக்க முடியாது. படம் எடுக்கத் தெரியாது’ என்று பாலச்சந்தரே ஒதுங்கிப் போன நிலையில் மகேந்திரனுக்கும் அதேதான் நிலைமை என்பது யதார்த்த உண்மை.

ஆனால் திரைப்படம், அதன் வணிக வெற்றி போன்ற எந்தவொரு விஷயங்களும் ரஜினி மற்றும் மகேந்திரனின் நட்பிற்கு இடையில் குறுக்கிடவில்லை. தனது மதிப்பிற்குரிய நண்பராகவே மகேந்திரனை இறுதி வரையிலும் நடத்தினார் ரஜினி. மகேந்திரன் என்கிற இயக்குநருக்கு மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதருக்குக் கிடைத்த அங்கீகாரம் அது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com