திரை விமரிசனம்

மனதைத் தொடும் 'தலைக்கூத்தல்’: திரைவிமர்சனம்

கி.ராம்குமார்

அரசியல் வசனங்கள் இல்லாமல் நடிகர் சமுத்திரகனியை அழகாக பயன்படுத்தி உருவாகியிருக்கிறது தலைக்கூத்தல்.

இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரகனி, வசுந்த்ரா, கதிர், ஆடுகளம் முருகதாஸ், கலைச்செல்வன், வையாபுரி என பலர் நடித்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருக்கும் தனது தந்தையை கவனித்துக் கொள்ளும் சமுத்திரகனி அதற்காக தனது குடும்பத்திடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கலை பேசியிருக்கிறது தலைக்கூத்தல். தலைக்கூத்தல் என்பது விருதுநகர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் உடல்நலக்குறைவால் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பவர்களை கொலை செய்யும் முறை. இந்த ஒரு விசயத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை சரியாக நிகழ்த்திக் காட்டியுள்ளது இத்திரைப்படம்.

லென்ஸ் திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநரான ஜெயப்பிரகாஷ் மிகுந்த சிரத்தையுடன் கதையை நகர்த்தியிருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் கதையின் அருகில் இருந்து பார்க்கும் வகையில் எப்படி உருவாக்கப்பட்டிருந்ததோ அதே போன்று அமைக்கப்பட்டிருக்கிறது தலைக்கூத்தல். குடும்பத்தில் நிலவும் கணவன் மனைவிக்கு இடையேயான வாக்குவாதத்தில் தொடங்கும் காட்சிகள் அதனைக் கடந்தும் பல உணர்வுகளை இறுதிவரை நம்மிடம் நிலைத்திருக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.

பொதுவாக தாய்க்கும், மகனுக்கும்தான் பாசப்பிணைப்பு அதிகம் எனும் கருத்துக்கு மத்தியில் ஒரு மகன் தனது தந்தையை எந்தளவு நேசிக்கிறார் என்பதை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. தனது தந்தைக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்யும் சமுத்திரக்கனி காட்சிக்கு நியாயமாக நடந்து கொண்டிருக்கிறார். தனது மனைவி வசுந்தராவால் அவமானப்படுத்தப்படும் இடங்களிலும், இயலாமையால் தவிக்கும் காட்சிகளிலும், குற்றவுணர்வால் அவதிக்குள்ளாகும் காட்சிகளிலும் சமுத்திரக்கனி வென்றிருக்கிறார்.

அவர் மட்டுமல்லாமல் அவரது மனைவியாக வரும் வசுந்தரா, மகளாக வரும் சிறுமி, தந்தையாக வரும் கலைச்செல்வன், கதிர், முருகதாஸ், வையாபுரி என அனைவரும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். இதுநாள் வரை  வசுந்த்ராவை அதிகம் பயன்படுத்த தவறியிருக்கிறது தமிழ் சினிமா. குடும்பத்தில் நடக்கும் குழப்பங்களில் அவரது நடிப்பு அபாரம். பகுத்தறிவுவாதி என அடையாளப்படுத்திக் கொள்ளவிட்டாலும் அத்தகைய நடவடிக்கைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் ஆடுகளம் முருகதாஸின் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கிறது. திரைப்படம் முழுக்க படுத்துக் கொண்டே சிக்சர் அடித்திருக்கிறார் கலைச்செல்வன்.

அவரது இளமைக் கதாபாத்திரமாக வரும் கதிரும், அவரது காதல் காட்சிகளும் படத்திற்கு ரசனையை சேர்க்கின்றன. சாதி கடந்த காதல் தொடங்கி அதனை காட்சிப்படுத்திய விதங்கள் கவனிக்கும்படி இருந்தன.

இவைதவிர படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் கேமிரா. கோவில்பட்டியை கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். கிராமத்தின் வீட்டைக் காட்டும்போது நாமே அந்த வீட்டிற்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. துறுத்தல் இல்லாத பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது. ஆங்காங்கே வரும் சின்ன சின்ன காட்சிகள் கலைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளன. ஓணான், சூரியகாந்தி, தெருநாய் என நுணுக்கமாக குறிப்பிட்டு பேச பல இடங்கள் இருக்கின்றன.

திரைக்கதை தொடக்கம் முதல் இறுதி வரை ஒரு நேர்க்கோட்டில் பயணிக்கிறது. இந்த ஏற்ற இறக்கமற்ற தன்மை படத்தை மெதுவாக்கும்படியாக இருப்பதை மறுக்கமுடியாது. சில இடங்களில் இந்தக் காட்சிகள் ஏன் என புரியாதபடியும் இருக்கின்றன. குறிப்பாக ஆடுகளம் முருகதாஸ் கதாபாத்திரம் மூலம் என்ன சொல்ல வருகிறார் இயக்குநர் எனும் கேள்வி தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சாதியால் தாக்குதலுக்குள்ளாகும் காதலர்கள் மீண்டும் எப்படி இணைந்தார்கள், சமுத்திரக்கனி அவர்களின் குழந்தையா என்பதில் குழப்பமே இருந்தது. சாதியால் காதலர்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டும் அதேசமயத்தில் அதற்கு எதிரான வலுவான வாதத்தை முன்வைத்திருக்கலாம்.

மனதுக்கு நெருக்கமாக இருக்கும்படியாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் படம் அந்த இலக்கை அடைந்திருக்கிறதா என்றால் ஆம் என்றுதான் கூற வேண்டும். சமுத்திரகனியாக நாம் இருந்தால் இப்படிப்பட்ட நிலையில் தனது தந்தைக்கு நாம் என்ன செய்திருப்போம் எனும் எண்ணச் செய்யும் இடத்திலேயே படம் வெற்றி பெற்று விடுகிறது.

வேகமாக ஓடும் நாம் பொறுமையாக அமர்ந்து உணர்ந்து பார்க்க தலைக்கூத்தல் நல்ல சாய்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT