திரை விமரிசனம்

காதலிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? லவ் டுடே - திரைவிமர்சனம்

4th Nov 2022 02:23 PM | சிவசங்கர்

ADVERTISEMENT

 

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.

இன்றைய இளைஞர்களுக்கு காதலிப்பதிலோ  ஒரு பெண்ணிடம் பேசுவதிலோ எந்த சிரமமும் இல்லை. சமூக வலைதளங்களின் வருகை அந்தத் தயக்கங்களையெல்லாம் உடைத்திருக்கிறது. ஆனால், அதே வலைதளங்களில் நாம் அறியாத ரகசியங்களும் சிதறிக் கிடப்பதை கருவாக வைத்து ‘லவ் டுடே’ உருவாகியிருக்கிறது.

தன் காதலியை அதிகம் புரிந்து வைத்திருப்பதாக நம்புகிறான் கதை நாயகன் உத்தமன் பிரதீப் (பிரதீப் ரங்கநாதன்) அதேபோல் காதலனையும் அவனுடைய அன்றாடங்களையும் தெரிந்துவைத்திருக்கிறாள் காதலியான நிகிதா (இவானா). இருவரின் காதலும் நாயகியின் தந்தையான சத்யராஜ்க்கு தெரிய வருகிறது. 

ADVERTISEMENT

காதலனை அழைத்துப் பேசும்போது அவர்களின் காதலை ஏற்றுக்கொள்ள ஒரு கோரிக்கையை வைக்கிறார். அதாவது, ஒரே ஒரு நாள் இருவரின் செல்போனையும் மாற்றிக்கொள்ள வேண்டும். சிறிய யோசனைக்குப் பின் காதலர்கள் ஒப்புக்கொண்டு தங்களின் செல்போன்களை மாற்றிக்கொள்கிறார்கள். 

இதன்பின், நாயகன் தன் காதலியின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளைத் திறந்து பார்த்ததும் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. அப்படி இருவருக்குள்ளும் உண்டாகும் மனப்போராட்டங்களும், சகிப்புத்தன்மையுமாக விரிந்து செல்கிறது லவ் டுடே. 

இதையும் படிக்க: விஜய்யின் வாரிசு பாடல் வெளியீட்டு விழா எங்கு, எப்போது?: புதிய தகவல்

முதல்பாதி முழுக்க பார்வையாளர்களை வயிறு குழுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, சத்யராஜ் மற்றும் பிரதீப் முதல் சந்திப்பில் விசில் பறக்கிறது. இரண்டாம் பாதிலும் பல இடங்களில் நகைச்சுவைக் காட்சிகள் பலமாக கைதட்ட வைக்கின்றன. படத்தின் இரண்டாம் பாதியின் நீளம், தடுமாற்றத்தைத் தந்த முதல் பாதி மேக்கிங் ஆகியவை படத்தின் சிறிய பலவீனங்கள். ஆனால், அதை யோசிக்க வைக்க நேரம் கொடுக்காமல் சிரிக்க வைத்தே படக்குழுவினர் வெற்றி பெற்றுள்ளனர்.

ரகசியங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வம், இங்கு யாரையும் நம்ப முடியவில்லை என அழும் இடங்களில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அறிமுகமான முதல்படம் என்றாலும் நாயகனாக பல இடங்களில் தேறியிருக்கிறார். நாயகியான இவானா நடிப்பு தத்ரூபமாக காட்சிபடுத்தப்பட்டதைப் போன்ற உணர்வு.

சத்யராஜ், நாயகனின் அம்மாவாக நடித்த ராதிகா சரத்குமார், யோகி பாபு, நாயகனின் நண்பர்கள் என அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு பலமாக அமைந்துள்ளனர்.

இதையும் படிக்க: பொன்னியின் செல்வனால் 'இரவில் நிழல்' வெளியாகத் தாமதமா? - பார்த்திபன் ட்வீட்!

யுவனின் பிண்ணனி இசை நன்று. இரண்டு பாடல்களும் காட்சிகளுடன் வரும்போது ரசிக்க வைக்கின்றன.

கோமாளி படத்தின் மூலம் முழுநீள நகைச்சுவை படத்தை எடுத்து கிளைமேக்ஸ் காட்சியில் சமூக கருத்தை முன்வைத்த பிரதீப் ரங்கநாதன் இப்படத்திலும் தன் நகைச்சுவை பாணி திரைக்கதை மூலம் காதல் மீதான நம்பிக்கையை அழகாக காட்சிகளின் வழி கூறியிருக்கிறார்.

இந்தாண்டு வெளியான நகைச்சுவைப் படங்களில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய இருக்கும் ‘லவ் டுடே’ குழுவினருக்கு பாராட்டுகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT