திரை விமரிசனம்

ரோபோ வந்தாலும் மாறாதா சாதிய மனநிலை?: புழு | திரைவிமர்சனம்

சிவசங்கர்

மனிதனின் நாகரிகம் எத்தனை வளர்ச்சிகளை நோக்கி நகர்ந்தாலும் அவனுக்குள் இருக்கிற பிறப்பு குறித்த அடையாளங்களில் உள்ள உயர்வை ஏதோ ஒருகணத்தில் நினைத்துப் பார்ப்பதைப்போல தன் சாதியின் உயர்நிலையையும் அதன் மூலம் பின்பற்றுகிற ஒழுக்கம் குறித்தும் பெருமிதத்தில் இருக்கும் குட்டனின் (மம்மூட்டி) சாதிய மனநிலையை சமூகத்துடன் இணைத்துப் பேசும் திரைப்படமே மலையாளத்தில் வெளியான ‘புழு’. தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மனைவியை இழந்த குட்டன், மகனுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடுமையான ஒழுக்கங்களும், யாருடன் பழக வேண்டும் என்பது குறித்தும் தினமும் தன் மகனுக்குப் பாடம் எடுக்கிறார்.

இன்னொரு பக்கம் பாரதி (நடிகை பார்வதி), அவளுடைய கணவன் குட்டப்பன் (அப்புன்னி சசி). இருவரும் வேறுவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். வாடகைக்கு வீடு கிடைக்காமல் இருக்கும் இவர்களுக்கு ஒருகட்டத்தில் மம்மூட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கிடைக்கிறது.

கதைப்படி பாரதி குட்டனின் (மம்மூட்டி) தங்கை.   உயர்சாதியில் பிறந்து தலித் சமூகத்தைச் சார்ந்த குட்டப்பனைத் திருமணம் செய்ததிலிருந்து மொத்தக் குடும்பமே அவளை ஒதுக்கிவிட்டது. குட்டனுக்கு அவளைப் பார்க்கும்போதெல்லம் ஜீரணிக்க முடியாததைப்போல உணர்கிறான். ஆனாலும், அவள் குட்டனின் மகனைப் பார்க்க அவர்கள் வீட்டுக்குச் செல்வதும் அதைக் கண்ட பின்பும் இங்கு இனி வரக்கூடாது என கூறுவதும் இல்லை.

ஒருநாள் தன் அண்ணனிடம் தான் கர்ப்பமாக இருப்பதைச் சொல்லி அம்மாவைக் காண ஆசைப்படுவதாக பாரதி கூறுகிறாள். இதுவரை அரை மனதாக அவளை ஏற்றுக்கொண்ட குட்டன் இந்தத் தகவல் கிடைத்த பின் என்ன முடிவை எடுக்கிறான் என்பதே மீதிக் கதை.

எப்போதும் பிடிவாத குணத்திலேயே இருக்க முடியாது என்பதையும் தலைமுறைகளுக்குள் நிகழும் மாற்றம் குறித்தும் காட்சிக்குக் காட்சி அபாரமாக படம் நகர்ந்து செல்கிறது.

காவல்துறை அதிகாரி என்பதால், குற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாகவும், தாழ்ந்த சாதியினராகவும் இருப்பார்கள் என அவர்கள் மீதான மொத்த பார்வையையும் திரையில் வெளிப்படுத்தும் காட்சிகளிலும், ஒவ்வொரு முறையும் தன் தங்கையை எதிர்கொள்ளும் காட்சிகளில் நடிகர் மம்மூட்டியின் முகபாவனைகளைக் கண்டு மிரளாமல் இருக்க முடியவில்லை. இப்படியான ஆதிக்க வெறிகொண்ட பாத்திரங்களில் நம் ஊர் நட்சத்திரங்கள் எல்லாம் நடிக்க வாய்ப்பே இல்லை என்கிற அளவிற்குக் கதைக்காகத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் மம்மூட்டி.

நாடகக் கலைஞராக நடித்திருக்கும் பாரதியின் கணவனான குட்டப்பனின் (அப்புன்னி சசி) நடிப்பும் வசன உச்சரிப்புகளும் அசலாக இருப்பது மேலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக சாதிய மனநிலை குறித்து பேசும்போது “இங்கு மனிதன்போய் ரோபோ வந்தாலும் எதுவும் மாறாது” என்பதும் “நாம் யாரையும் மாற்ற வேண்டாம், முதலில் மாற வேண்டியது நாம்தான்” போன்ற கனமான வசனங்கள் படம் முழுக்க நிறைந்துள்ளன.

சில நிமிடங்கள் மட்டுமே வரும் நெடுமுடி வேணு, இந்திரன்ஸ் இருவரும் மறக்க முடியாத முகங்கள்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, ஜேக்ஸ் பிஜாயின் இசை நேர்த்தி. ஒரு சில காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

அனைத்தையும் தாண்டி நுட்பமான காட்சிகளால் கதாபாத்திரங்களுக்குள் இருக்கும் மனித மனங்களின் சிக்கல்களை மட்டுமே பேசும்படியான திரைக்கதையை உருவாக்கி தன் முதல் படத்திலேயே ஆச்சரியத்தை அளித்திருக்கிறார் பெண் இயக்குநர் ரதீனா. 

பார்த்து உணர வேண்டிய திரைப்படம் ‘புழு’ - ஆணவக் கொலைகள் பற்றி 'அத்ரி புத்ரி' கதைகளை எடுத்து அவசியமில்லாமல் புதிய மோதல்களுக்கும் காரணமாகி விடுகிற நம் திரைத்துறையினரில் சிலரும்கூட கவனிக்க வேண்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT