திரை விமரிசனம்

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி! திரைவிமர்சனம்

20th May 2022 08:46 PM | கெளதம்

ADVERTISEMENT

ஆர்டிகில் 15 கதையை தமிழில் எடுப்பதற்காக அருண் ராஜா திரைக்கதையை மாற்றியிருப்பது நெஞ்சுக்கு நீதிக்காகவா, உதயநிதிக்காகவா?

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த ஆர்டிகில் 15 திரைப்படத்தை அதிகாரபூர்வமாக உரிமை வாங்கி தமிழில் எடுக்கப்பட்டுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தத் திரைப்படத்தை கனா இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், ஆரி, சுரேஷ், இளவரசு, மயில்சாமி, தன்யா, ஷிவானி, அப்தூல் லீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பே ஆர்டிகில் 15-இல் இருந்து தமிழ்நாடு சூழலுக்கு ஏற்ப இந்தப் படத்தில் சில விஷயங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் சொன்னதுபோல இந்தப் படத்தில் சில காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. கதைக்களமாக கொங்கு மண்டலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இயக்குநர் மாரி செல்வராஜுடன் பேரறிவாளன் சந்திப்பு

ADVERTISEMENT

காவல் துணைக் கண்காணிப்பாளராக பொள்ளாச்சி சுதந்திரபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் விஜயராகவனாக வரும் உதயநிதி ஸ்டாலின். அவர் பொறுப்பேற்றவுடன் ஊரின் நடுவே இரண்டு இளம்பெண்கள் தூக்கிலிடப்படுகின்றனர். இந்த வழக்கைக் கையிலெடுக்கும் உதயநிதி, இந்த சம்பவத்தில் காணாமல் போன மூன்றாவது பெண்ணைத் தேடுகிறார்.

தொலைந்து போன பெண் கண்டுபிடிக்கப்பட்டாரா? இல்லையா? என்பதுதான் நெஞ்சுக்கு நீதியின் கதை. பள்ளிக்கூடத்தில் நிகழும் சாதிய ஒடுக்குமுறைகளை ஒரு சிறுவன் கவனிப்பதிலிருந்து நெஞ்சுக்கு நீதி துவங்குகிறது. மனித கழிவுகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் குறிப்பிட்ட மக்கள் சுத்தம் செய்வதை மிகவும் அழுத்தமாகக் காண்பித்தது முக்கியமானது. காரணம், கடந்த 5 ஆண்டுகளில் கழிவு நீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி அதிகம் பேர் உயிரிழந்தவர்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது என்கிறது மத்திய அரசின் தரவுகள்.

பிறகு, அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலை கூண்டிலிருப்பதை விவரிக்கிறது. இப்படியாக படம் முழுவதிலும், அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை சாதிய வேர் ஊன்றி இருப்பதை பார்வையாளர்கள் முன் அடுக்கியுள்ளார் அருண்ராஜா. இதற்காக ரீமேக் படமாக இருந்தாலும் திரைக்கதையில் பெரிதளவில் தொய்வு ஏற்படாதவாறும், பிரசாரத் திரைப்படமாக அமைந்திடாதவாறும் இருப்பதை உறுதி செய்து அவர் வெற்றி கண்டிருக்கிறார்.

இதையும் படிக்க | விக்ரம் நடிக்கும் கோப்ரா: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பொதுப்புத்தி மனநிலையைப் பிரதிநிதிப்படுத்தி, அந்தப் பாத்திரத்தின் வாயிலாக சில விஷயங்களைக் கடத்த வேண்டும் என ஆர்டிகில் 15-இல் இருந்து விலகி மயில்சாமி பாத்திரம் வடிவமைப்பு போன்ற சில விஷயங்களுக்கு மெனக்கெட்டிருக்கிறார். அது வெற்றியும் பெற்றிருக்கிறது.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ன் அம்சங்களை விளக்கும் காட்சி ஆர்டிகில் 15 படத்தில் இருந்ததுபோலவே உருவாக்கப்பட்டிருந்தாலும், பின்னணி இசை, காட்சி அமைப்பு மூலம் அதைவிடக் கூடுதல் வலிமையாகக் காண்பிக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையில் தோன்றும் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் எவ்வித உறுத்தலுமின்றி சிறப்பாகவே ஜொலித்திருக்கிறார்.

சுரேஷ் சக்ரவர்த்தி தனது கதாபாத்திரத்தை மிகச் சரியாக ஏற்று நடித்திருக்கிறார். இயக்குநர் எதிர்பார்க்கும் உணர்வுகள், அவர் மூலம் அப்படியே பார்வையாளர்களை சென்றடைகிறது. ஆரி மிகச் சிறிய பாத்திரத்திலேயே தோன்றுகிறார். ஆர்டிகில் 15 படத்திலிருந்து விலகி குமரனாக வரும் ஆரி கதாபாத்திரம் நிறைய மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | இயக்குநர் பிரபு சாலமனின் புதிய படம் அறிவிப்பு

ஆர்டிகில் 15-இல் இதே பாத்திரம் தலித் உரிமை அரசியல் பேசுபவராக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஹிந்துத்வ அரச பயங்கரவாதத்திற்கு இந்தப் பாத்திரத்தின் சித்தாந்தம் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் மற்றும் இதனால், அந்தப் பாத்திரம் எதிர்கொள்ளும் விளைவு என்ன என்பது விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால், நெஞ்சுக்கு நீதியிலோ குமரன் பாத்திரத்திற்கு பில்டப்கள் கொடுக்கப்பட்ட அளவிற்கு வீரியம் இல்லை. இதனாலேயே, ஆரி கதையிலிருந்து சற்று தனியாகத் தெரிகிறார்.

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் முதுகெலும்பாக இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக பின்னணி இசையை அமைத்துள்ளார். இந்தப் போட்டியில் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனும் இணைந்துள்ளார். நிச்சயமாக ஒளிப்பதிவு மற்றும் இசை படத்திற்குப் பலம். கொங்கு மண்டலத்தைத் தேர்வு செய்தமைக்கு டப்பிங் நியாயம் கற்பிக்கவில்லை. கோவை மொழி பல இடங்களில் மிகச் செயற்கையாகத் தெரிவது உறுத்தலை உண்டாக்குகிறது. இதில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் எழுகிறது.

கதையின் சாரத்தில் நுழைந்தால் நெஞ்சுக்கு நீதியில் ஒரு வசனம் உண்டு. "இங்கு தேவை ஹீரோ இல்லை, ஹீரோவை எதிர்பார்க்காமல் இருப்பவர்கள்தான் தேவை" என்பதுதான் அந்த வசனம். ஆனால், இதற்கு முரணமாக ஆர்டிகில் 15-இல் வரும் மிக முக்கியமான வசனம் ஒன்று நெஞ்சுக்கு நீதியில் மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பா. இரஞ்சித்தின் அடுத்த படம் அறிவிப்பு

அனைவரும் சமம் என்றால் ராஜா யார் என்ற கேள்வி ஆர்டிகில் 15 படத்தில் வரும். இதற்கு, அனைவரும் சமம் என்றால் ராஜாவின் தேவை எதற்கு என பதில் வரும். இதுவே நெஞ்சுக்கு நீதியிலோ எவன் ஒருவன் அனைவரும் சமம் என நினைக்கிறானோ அவனே ராஜா என பதில் வரும். இது வசனத்தோடு நில்லாமல், காட்சியாகவும் நீள்கிறது.

படம் தொடக்கத்தில் சாதிய ஒடுக்குமுறை தீண்டாமையைக் கவனிக்கும் சிறுவன், இறுதியில் விஜய் ராகவனாக வரும் உதயநிதியை ஹீரோவாகப் பார்ப்பது போல முடிகிறது. இதன்மூலம், அனைவரையும் சமமாகப் பார்ப்பவரே ராஜா என்ற வசனத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையில், அனைவரையும் சமமாகப் பார்க்கும் ராஜாவாக உதயநிதியைக் காண்பிக்க முயற்சித்திருக்கிறாரா அருண்ராஜா என்ற கேள்வி எழுகிறது. உதயசூரியன் முன்பு உதயநிதி நிற்பதுபோல காட்சி அமைக்கப்பட்டுள்ளது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் இன்னும் நடைமுறையில் உள்ள சாதியத் தீண்டாமையை சமரசமின்றி, தொய்வில்லாதவாறு முக்கியமான ஒரு நல்ல படத்தைக் கொடுத்திருக்கிறார் அருண்ராஜா. உதயநிதி படங்களின் பட்டியலிலும் இது முக்கியமானப் படமாக அமையும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT