திரை விமரிசனம்

சாணிக் காயிதம் திரை விமர்சனம்: ரத்தம் தெறிக்கும் வழக்கமான சினிமா

6th May 2022 03:56 PM | கி.ராம்குமார்

ADVERTISEMENT

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படம் இன்று நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. 

ராக்கி திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினரிடையே எழுந்தது. குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் போஸ்டர் வெளியீடு படத்தின் மீது உச்சகட்ட கவனத்தை திருப்பியது.

இதையும் படிக்க | மார்க் ஆண்டனி திரைப்பட படப்பிடிப்பு தொடக்கம்

காவலராக பணியாற்றும் கீர்த்தி சுரேஷ், அவரது அண்ணனாக செல்வராகவன், கீர்த்தி சுரேஷின் கணவராக வரும் கண்ணா ரவி மற்றும் சிலர் என குறுகிய எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை நடப்பது கதையோட்டத்திற்கு உதவியுள்ளது. சாதியால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினர் எரித்துக் கொல்லப்பட அவர்களை கீர்த்தி சுரேஷும் செல்வராகவனும் எப்படி பழி வாங்குகின்றனர் என்பதே கதை. 

ADVERTISEMENT

தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட வழக்கமான அதே கதை. ஆனால் அதனை திரையில் கடத்தும் விதத்தில் அருண் மாதேஸ்வரன் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அது போதவில்லை. அவரின் முந்தைய படத்தின் (ராக்கி) சாயல்கள் ஆங்காங்கே தென்படுகின்றன. தொடக்கத்தில் கருப்பு வெள்ளை நீளமான காட்சியில்  தொடங்கும் படத்தில் ஆங்காங்கே கலருக்கும், கருப்பு வெள்ளைக்குமாக படம் பயணிக்கிறது. 

இதையும் படிக்க | மஞ்சு வாரியா் புகாா்: மலையாள திரைப்பட இயக்குநா் கைது

தமிழ் சினிமாவிற்கு பழக்கப்பட்ட கதாநாயகிகளுக்கான பாத்திரங்களிலிருந்து விலகி புதிய, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷைப் பாராட்டலாம். திரைக்கதைக்கேற்ற நடிப்பை வழங்கி ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அவருடன் படம் முழுக்க பயணிக்கும் செல்வராகவன் யதார்த்தமான தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

இயக்குநருக்குள் ஒளிந்திருக்கும் நடிப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன். இவர்களைத் தவிர படத்தில் சிறிது நேரமே வரும் கண்ணா ரவி, சிறுமி, வில்லன்கள் என அனைவரும் தங்களுக்கான பாத்திரங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். ஒருத்தன் நம்ம வாழ்க்கையையே அழிச்சிட்டா, அவனை தூக்கி ஜெயிலுல போட்டுட்டா அதுக்கு பேர் பழி வாங்கறதா? எனும் வசனமே ஒட்டுமொத்த படத்தின் சாராம்சம்.

சாம் சி.எஸ். இசை படத்தின் திரைக்கதைக்கு உதவியாக உள்ளது. படத்தின் மற்றுமொரு பலம் யாமினியின் ஒளிப்பதிவு. காட்சிகளைப் பார்வையாளர்களுக்கு கடத்துவதில் யாமினியின் ஒளிப்பதிவு பெரும்பலமாக அமைந்துள்ளது. 

இதையும் படிக்க | இன்று எத்தனை தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன?

படம் வழக்கமான கதையாக இருப்பதால் எளிதில் யூகிக்கக் கூடிய காட்சிகளே பெரும்பாலும் நிறைந்துள்ளன. ஊரிலிருந்து விலகித் தனித்தீவில் நடக்கும் கதையாகவே இறுதி வரை திரைக்கதை பயணிக்கிறது. சாதியின் கொடூரங்களைக் காட்சிப்படுத்த பல சிறப்பான வாய்ப்புகள் இருந்தும் இயக்குநர் தடுமாறியுள்ளார் என்றே சொல்லலாம். வாய்ப்புள்ள பல இடங்களை த் தவறவிட்ட திரைக்கதையில் வன்முறைக் காட்சிகளே பிரதான இடங்களைப் பிடித்துள்ளன. கதைக்காக வன்முறைக் காட்சிகள் என்பதைத் தாண்டி வன்முறைக் காட்சிகளுக்காக கதையோ என எண்ணத் தோன்றுகிறது. 

பிரபல இயக்குநர்கள் கடைப்பிடிக்கும் தனிப்பட்ட பாணியிலான திரைப்படம் என்னும் வகையறாவிற்குள் அருண் மாதேஸ்வரன் இடம்பெறலாம். ஆனால் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கினால் பார்வையாளர்களைத் தக்கவைப்பதில் இயக்குநர் வெற்றி வாய்ப்புள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT