திரை விமரிசனம்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' - எப்படி இருக்கிறது ? - திரை விமர்சனம்

10th Mar 2022 09:29 AM | கார்த்திகேயன் எஸ்

ADVERTISEMENT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

'ஜெய் பீம்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சூர்யா வழக்கறிஞராக வருகிறார். படத்தின் துவக்கத்தில் காவல்துறை கண்காணிப்பாளர், கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரை சூர்யா கொலை செய்கிறார். அவர் ஏன் அப்படி செய்கிறார், உண்மையில் என்ன நடந்தது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கும் படம்தான் எதற்கும் துணிந்தவன். 

கண்ணபிரான் என்ற வழக்கறிஞராக சூர்யா. ஜெய் பீம்  உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால் சூர்யா யதார்த்தமான நடிப்பை வழங்கியிருந்தார். ஆனால் இது ஒரு கமர்ஷியல் படம் என்பதால் இறங்கி அடிக்கிறார். பாடல்காட்சிகள், சண்டைக்காட்சிகள், ஆக்ரோசமாக வசனமாக பேசுவது என ஒரு கலக்கு கலக்குகிறார்

காதல் காட்சிகளில் சூர்யா நடிப்பதை ஏற்றுக்கொள்ள சற்று சிரமமாக இருந்தாலும், தனது நடிப்பின் மூலம் அந்தக் குறையை சரிகட்டிவிடுகிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன். வழக்கமான பாண்டிராஜ் பட கதாநாயகிகளைப் போல இல்லாமல், கொஞ்சம் முக்கியமான வேடம். சூர்யாவுடன் காதல் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நன்றாகவே நடித்துள்ளார். 

ADVERTISEMENT

சூர்யாவின் அப்பா அம்மாவாக சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார்கள். தங்களின் அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர். வினய்க்கு வழக்கமான வில்லன் வேடம். கனமான குரலில் மிரட்டுவது, புகைப்படிப்பது, மது அருந்துவது என வழக்கமாக வில்லன்கள் செய்வதை இவரும் செய்கிறார். கூடவே பியானோவும் வாசிக்கிறார். 

நகைச்சுவை நடிகர்களான சூரி, புகழ், விஜய் டிவி ராமர், தங்கதுரை ஆங்காங்கே படத்தை கலகலப்பாக்குகிறார்கள். இளவரசு, தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், திவ்யா துரைசாமி, சூப்பர் குட் சுப்பிரமணியன், சரண் சக்தி உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேடங்களை நன்றாக செய்துள்ளனர்.

டி.இமான் இசையில் பாடல்கள் படத்துக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும், பின்னணி இசையின் மூலம் சுவாரஸியப்படுத்துகிறார். குறிப்பாக படத்தின் தீம் இசை நன்றாக இருந்தது. மாஸான சண்டைக்காட்சிகள், வண்ணமயமான பாடல்கள் என ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை வழங்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. 

சண்டைக்காட்சிகளில் சண்டைபயிற்சி இயக்குநர் ராம் லட்சுமணனின் பணிகள் நன்றாக உள்ளது. குறிப்பாக இடைவேளைக்கு முந்தய சண்டைக்காட்சி சுவாரசியத்தை அதிகரிக்கிறது. முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என ஓரளவுக்கு கலகலப்பாக செல்கிறது.

சமீபக காலமாக சூர்யாவின் படங்களில் முக்கிய சமூக பிரச்னைகள் கதை களமாக இருந்து வருகிறது. இந்தப் படத்திலும் பொள்ளாச்சி சம்பவம் உள்ளிட்ட தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்ற செயல்களை நினைவுபடுத்தும் விதமாக கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதனை முழுமையாக கமர்ஷியல் முறையில் சொல்லியிருக்கிறார்.

பெண்களை ஏமாற்றி பயன்படுத்திக்கொள்ளும் இளைஞர்கள் குறித்து இந்தப் படத்தில் பேசுகிறார்கள்.  அவைதான் அந்தப் படத்தின் அடிப்படை. ஆனால் அந்தக் காட்சிகள் மேலோட்டமாகவே உள்ளன. வில்லனான வினய், அமைச்சரின் மகன் என்பது புரிகிறது. ஆனால் அவர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இப்படிப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட முடிகிறது என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக காட்டியிருக்கலாம். 

பெண்களை பாதிக்கப்படும் விவாகரத்தை நீதிமன்றம் எடுத்துசெல்கிறார் சூர்யா. ஆனால் பின்னர் ஆக்கப்பூர்வமாக, புத்திசாலித்தனமாக இல்லாமல், சண்டைபோட்டே வில்லனை வெல்ல முடிவெடுப்பது சுவாரசியமாக இல்லை. தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இறுதிக்காட்சியில் சூர்யாவின் முடிவும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. பெண்களின் பிரச்னைகளை பேசியிருக்கும் படத்தில் இறுதிக்காட்சியில் சூர்யாவின் முடிவு பிற்போக்குத்தனமாக தோன்றியது.

இருப்பினும் வழக்கமான பாண்டிராஜ் படத்தை எதிர்பார்ப்பவர்களின் ஆவலை இந்தப் படம் நிறைவு செய்யுமா? என்பது தெரியவில்லை. அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படத்தை எதிர்பார்ப்பவர்கள் எதற்கும் துணிந்தவன் படத்தை ரசிக்கலாம். 

ADVERTISEMENT
ADVERTISEMENT