திரை விமரிசனம்

எப்படி இருக்கிறது துல்கர் சல்மானின் 'ஹே சினாமிகா' : திரை விமர்சனம்

3rd Mar 2022 04:55 PM | கார்த்திகேயன் எஸ்

ADVERTISEMENT

 

நடன இயக்குநர் பிருந்தா முதன்முறையாக இயக்குநராக அவதாரமெடுத்திருக்கும் படம்தான் 'ஹே சினாமிகா'.

துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் முதன்மை  வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பாடலாசிரியர் மதன் கார்க்கி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். குளோபல் ஒன் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. 

யாழன், மௌனா, மலர்விழி ஆகிய மூன்று வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள், நிகழ்வுகளுக்கு அவர்கள் எவ்வாறு தங்களை வெளிப்படுத்துகிறார்கள் எனத் திரைக்கதை அமைத்திருக்கிறார் மதன் கார்க்கி. 

ADVERTISEMENT

யாழனும், மௌனாவும் முதன்முறையாக சந்தித்துக்கொள்ளும்போது புயல் காற்று அடிக்கிறது, வான், காற்று என மணிரத்னம் பட பாணியில் கவிதை நடையில் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் பெயர்களும் தூய தமிழில்  இருக்கிறது. ஆனால் அவர்களது உடை மட்டும் இந்தக் காலத்துக்கேற்றார்போல இருக்கிறது.

ஒருவேளை நாம் மாய,  கற்பனை உலகத்தை  அடிப்படையாகக் கொண்ட படத்துக்கு வந்துவிட்டோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது துவக்க காட்சிகள். நல்லவேளையாக விரைவிலேயே இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

இரண்டு எதிரெதிர் குணாதிசயங்கள் கொண்ட யாழனும், மௌனாவும் காதல் திருமணம் செய்கிறார்கள். ஒருகட்டத்தில் யாழன் தன் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக எண்ணி அவரைப் பிரிய முயற்சிக்கிறார் மௌனா. அப்போது அவர்கள் வாழ்வில் மனநல மருத்துவர் மலர்விழி குறுக்கிட, பிறகு நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் ஹே சினாமிகா படத்தின் கதை. 

இதுபோன்ற கதைகளை அவ்வப்போது தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனால் திரைக்கதையில் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறார் கார்க்கி. யாழனாக துல்கர் சல்மான். அவருக்கு வழக்கம்போல ஒரு மாடர்னான, அதிகம் பேசும் துறுதுறு இளைஞர் வேடம்தான்.

அவரது முந்தைய தமிழ்ப் படங்களான வாயை மூடிப் பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்களை அவரது கதாபாத்திரம் நினைவுபடுத்துகிறது. இந்தப் படத்தில் தனியாகக் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவுமில்லையென்றாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். 

மௌனாவாக அதிதி ராவ் ஹைதாரி. மிகவும் யதார்த்தமாகவும், சிறப்பாகவும் நடித்திருக்கிறார். அவரது நடிப்பு மட்டுமே படத்தை சுவாரசியப்படுத்துகிறது. சின்ன சின்ன ரியாக்சன்களில் கவனம் ஈர்க்கிறார்.

மலர்விழியாக காஜல் அகர்வால். நடிக்க நிறையவே திணறுகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங்கும் லிப் சிங்க்கும் பொருந்தவில்லை. 

இதையும் படிக்க | அஜித்தின் 'வலிமை' - ரசிகர்கள் காத்திருப்புக்கு பலன் கிடைக்குமா? திரை விமர்சனம்

நீ கேட்குறதுக்கெல்லாம் கோபப்படாம, பதில் மட்டும் சொல்றதுக்கு நான் கூகுள் இல்ல என ஆங்காங்கே வசனங்கள் படத்தை சுவாரசியப்படுத்துகிறது. கோவிந்த் வசந்தாவின் பாடல்களும் பின்னணி இசையும் ப்ரீத்தா ஜெயராமின் ஒளிப்பதிவும் சிறப்பான காட்சி அனுபவத்தைக் கொடுக்கின்றன. தனது பாடல்களைப் படமாக்குவது போல, படத்தையும் வண்ணமயமாக படமாக்கயிருக்கிறார் இயக்குநர் பிருந்தா. 

அதிதிக்கு தனது செயல்கள் பிடிக்காதது கூடவா துல்கருக்கு தெரியாது? என கேள்வி எழாமல் இல்லை. இருப்பினும் முதல் பாதி முழுக்க துல்கர் சல்மானை பிரிய அதிதி எடுக்கும் முயற்சிகள், அதனை துல்கர் கண்டுகொள்ளாமல் இருப்பது என ஓரளவு சுவாரசியமாக நகர்கிறது.

இரண்டாம் பாதியில் காஜல் கதாபாத்திர வடிவமைப்பும் அவரது நடிப்பும் படத்துக்கு தொய்வை ஏற்படுத்துகிறது. ஒருகட்டத்துக்கு மேல் கதை நகராமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. துல்கர், அதிதி, காஜல் கதாபாத்திரங்களைத் தவிர வேறு எந்த  கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படாததே சலிப்புக்கு காரணம். துல்கர், அதிதி குடும்பத்தினர் காட்டப்படவேயில்லை.  அவர்கள் குறித்து வசனங்கள் கூட இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.

அதிதி ராவ் மற்றும் துல்கரின் நண்பர்களாக வரும் நட்சத்திரா, மிர்ச்சி விஜய், அபிஷேக் குமார் உள்ளிட்டோர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

 இரண்டாம் பாதியில் நிறைய செயற்கையான காட்சிகளும் சுவாரசியத்தை குறைக்கின்றன. உதாரணமாக யோகி பாபு வரும் காட்சி. படத்துக்கு  சம்பந்தமில்லாத அந்தக் காட்சியைத் தயங்காமல் படத்தொகுப்பாளர் ராதா ஸ்ரீதர் கத்தரித்திருக்கலாம். 

சிறிய காரணங்களுக்கு விவாகரத்து செய்வது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நோக்கமாக இருக்கிறது. ஆனால் அது  அழுத்தமாக சொல்லப்படவேயில்லை என்பதுதான் குறை. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT