திரை விமரிசனம்

வெற்றிப் படங்களுடன் இணைந்ததா மாமனிதன்? திரை விமர்சனம்

கி.ராம்குமார்

தேனி பண்ணைபுரத்தில் வாழும் ஆட்டோ ஓட்டுநரான விஜய் சேதுபதி தன்னுடைய குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்து நில விற்பனை தரகராக ஈடுபடுகிறார்.

எதிர்பாராத விதமாக மக்களின் பணத்தை மோசடி செய்து நில உரிமையாளர் தப்பிக்க சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. அந்த சிக்கலில் இருந்து அவர் மீண்டு வந்தாரா? அவரது குடும்பம் என்ன ஆனது? என்பதே மாமனிதன். 

சராசரி மனிதன் தன்னுடைய வாழ்க்கை சிக்கலில் மாட்டிக் கொள்ளும்போது எப்படி தன்னை மாமனிதனாக மாற்றிக் கொள்கிறான் என்பதைப் பேசுகிறது இத்திரைப்படம். 

இதையும் படிக்க | ரோபோ வந்தாலும் மாறாதா சாதிய மனநிலை?: புழு | திரைவிமர்சனம்தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்த இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 இத்திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.

மிகச்சிறிய அளவிலான கதாபாத்திரங்களே உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, காயத்ரி, குருசோமசுந்தரம், சாஜி சென், ஜெவெல் மேரி, கே.பி.ஏ.சி. லலிதா மற்றும் அனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காட்சிக்கேற்ற வகையில் சரியான நடிப்பை படக்குழுவினர் தந்துள்ளனர். குறிப்பாக வாப்பாவாக வரும் குருசோமசுந்தரம், காயத்ரி, ஜெவெல் மேரி உள்ளிட்டோர் தங்களது பாத்திரமறிந்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

தேனி பண்ணைபுரத்தை சரியாக கண்முன் கொண்டுவந்துள்ளார் சுகுமார். கிராமப் பின்னணியை படத்திற்கு ஏற்றாற்போல் காட்சிகளாக நிறுத்தியதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். கேரளம், வாரணாசி என கடக்கும் காட்சிகளுக்கு ஏற்றவகையில் தனது பணியை வெளிப்படுத்தியுள்ள அவரைப் பாராட்டலாம். 

இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். எனினும் அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாத அளவு பின்னணி இசை உள்ளதை மறுக்க முடியாது. காட்சிகளின் வீரியத்தைக் கடத்தும் வகையில் பின்னணி இசை அமையவில்லை என்பதை ஒப்புக்கொண்டாகத்தான் வேண்டும். ‘தட்டிப்புட்டா’, ‘என்ன நடக்குது சாமி’ உள்ளிட்ட பாடல்கள் மனதில் நிற்கின்றன. 

“தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்”,  “அப்பன் தோத்த ஊருல, புள்ளைங்க ஜெயிக்கறது கஷ்டம்” உள்ளிட்ட வசனங்கள் காட்சிக்கு பலமாக உள்ளன.

கிராமம் என்றாலே வன்முறை, ரத்தம், அரிவாள் எனப் பழக்கப்பட்ட சினிமாவிற்கு மத்தியில் ஒரு சராசரி குடும்பத்தின் ஆசைகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் காட்ட முயற்சித்து அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.

அதேசமயம் இதற்கென மெதுவாக நகரும் திரைக்கதையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. குறிப்பாக விஜய்சேதிபதி கேரளா தப்பியோடுவது, அதன்பின் அங்கிருந்து தனது குடும்பத்திற்கு உதவுவது போன்றவை இன்னும் அழுத்தமாக படைக்கப்பட்டிருக்கலாம். 

கேரளத்திலிருந்து காசி எனப் பயணப்படும் திரைக்கதை ரசிகர்களுக்கு ஒருவித குழப்பத்தைத் தரலாம். மனித மன ஓட்டங்களை தெரிவிக்க முயன்று இடம்பெற்றுள்ள இந்தக் காட்சிகள் ரசிகர்களை எப்படி சென்றடையப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது. 

படத்தில் சரியாக புரிந்துகொள்ளப்பட வேண்டிய கருவை கடத்துவதில் உள்ள தொய்வைக் கடந்து குடும்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நல்லப் படைப்பாக இப்படம் வெளியாகியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT