திரை விமரிசனம்

பார்த்திபனின் 'இரவின் நிழல்' - படம் எப்படி இருக்கிறது?

எஸ். கார்த்திகேயன்

பார்த்திபன் இயக்கத்தில் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது இரவின் நிழல்.

கேமரா ஆன் செய்யப்பட்டதிலிருந்து ஆஃப் செய்யப்படும் வரை பதிவு செய்யப்படும் காட்சியை ஒரு ஷாட் என்பர். அப்படி முழுப் படத்தையும் எந்த கட்டும் இல்லாமல் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் உலக மொழிகளில் வெளியாகியிருக்கின்றன.

ஆனால், இந்தப் படம் நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் திரைப்படம். நான் லீனியர் என்றால் ஒரு கதை அடுத்தடுத்து ஒரே நேர்க்கோட்டில் சொல்லப்படாமல் வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பனவற்றை முன்னும் பின்னுமாக இணைத்துச் சொல்வது. இதனை ஒரே ஷாட்டில் சொல்வது மிகவும் சவாலான வேலை. 

ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் வேறு வேறு இடங்களில் காட்சிகளைப் படமாக்காமல் ஒரே இடத்தில் அரங்குகளை அமைத்துப் படமாக்க வேண்டும். 90 நிமிடமும் தொடர்ச்சியாக ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும். 

நினைத்துப் பார்க்கவே கடினமாக இருக்கும் இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு 90 நிமிட படத்தை வெற்றிகரமாக இயக்கியிருக்கிறார் பார்த்திபன். கலை இயக்குநர் விஜய் முருகன், ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன் துணையோடு இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் அவர். 

படத்தின் துவக்கத்தில் 30 நிமிடங்களுக்கு படமாக்கப்பட்ட விதம் (மேக்கிங்) காட்டப்படுகிறது. 90 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தில் 89-வது நிமிடத்தில் ஏதாவது தவறு நேர்ந்தாலும் மீண்டும் முதலில் இருந்து படமாக்க வேண்டும். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என யாராவது ஒருவர் தவறு செய்ய, 22 முறைகளுக்கும் மேலாக இந்தப் படம் மீண்டும் மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது. படமாக்கப்பட்ட விதத்தை நடிகர் பார்த்திபன் தனக்கே உரிய முறையில் விவரிப்பது சுவாரசியமாக இருக்கிறது. 

இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் திரைப்பட ஃபைனான்சியர் தனது வாழ்நாளில் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதுதான் இரவின் நிழல் படத்தின் கதை. கிட்டத்தட்ட தனுஷின் புதுப்பேட்டை பாணியிலான கதை. 

படத்தில் சில காட்சிகள் மற்றும் வசனங்களால் கட்டாயம் இது வயது வந்தோருக்கான படம்.  வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரோபோ ஷங்கர், சாய் பிரியங்கா என பல நடிகர்கள் இருந்தாலும் பார்த்திபன் கதாபாத்திரமே பிரதானமாக இருக்கிறது.

தமிழ்நாடு, ஆந்திரம் என நகரும் கதையில் அந்தந்த இடத்தைத் தனது கலை வடிவமைப்பின் மூலம் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் கலை இயக்குநர் விஜய் முருகன். மேலும் ஒரு காட்சியிலிருந்து இன்னொரு காட்சிக்கு மாறும்போது, அதனைப் பார்வையாளர்களுக்கு வசனம் மூலம் புரிய வைக்கும் உத்தி சிறப்பு. 

அடிக்கடி மாறும் அரங்குகள், வசனங்கள் மூலம் கதை சொல்வது என நாடக பாணியில் நகரும் படத்தில் ஏ. ஆர்.ரஹ்மானின் பாடல்களும்  பின்னணியின் இசையும் விறுவிறுப்பு சேர்த்திருக்கின்றன. 

படத்தின் திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும் நான் லீனியர் சிங்கிள் ஷாட் முறையில் ஒரு படத்தை வெற்றிகரமாக திரையில் கொண்டுவந்த பார்த்திபன் மற்றும் குழுவினரின் அசாத்தியமான உழைப்புக்காக இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT