திரை விமரிசனம்

காத்துவாக்குல ரெண்டு காதல்: கைகொடுக்குமா விக்னேஷ் சிவனுக்கு?

28th Apr 2022 06:34 PM | கௌதம்

ADVERTISEMENT


அடுத்த படத்தில் நடிகர் அஜித் குமாரை இயக்கவுள்ளதாலோ என்னவோ, நடிகர் விஜய்யை நக்கலாகக் கலாய்த்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலிருந்தே அஜித் ரசிகர்களை சாமர்த்தியமாக சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார் போல விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

விஜய் சேதுபதி குடும்பத்தில் யாரையாவது திருமணம் செய்துகொண்டால், அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள் எனும் மூட நம்பிக்கை அவரது கிராமத்தில் இருந்து வருகிறது. இதனால், அவரது குடும்பத்தினர் எவரும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கின்றனர். விஜய் சேதுபதியும் ஒரு துரதிருஷ்டசாலி என அந்தக் கிராமமே சிறுவயதிலிருந்து அவரை நம்பவைக்கிறது. இதனால் தனக்கு எதுவுமே கிடைக்காது என்று எண்ணியே 30 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் ராம்போவுக்கு (விஜய் சேதுபதி) கண்மணி (நயன்தாரா) மற்றும் கதிஜா (சமந்தா) என இரண்டு பெண்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? இருவரையுமே காதலிக்கும் விஜய் சேதுபதி, இறுதியில் என்ன முடிவெடுக்கிறார்? துரதிருஷ்டம், துரதிருஷ்டசாலி எனும் பிற்போக்கான பார்வை இறுதியில் என்னவாகிறது? என்பதுதான் படத்தின் கதை.

இந்தக் கதையை தனது பாணியில் நகைச்சுவையைக் கொண்டே விக்னேஷ் சிவன் கையாண்டிருக்கிறார். ராம்போ, கண்மணி, கதிஜா இடையிலான உரையாடல்களிலும், இரட்டை அர்த்த வசனங்களிலும் விக்னேஷ் சிவனின் நகைச்சுவை ஜெயித்திருக்கிறது. சில இடங்களில் காட்சியின் சூழலே நகைச்சுவையாக வந்துள்ளது படத்தின் சிறப்பம்சமாக உள்ளது. டிரெய்லரில் வெளியான காட்சிகள் வரும் இடங்களில் திரையரங்கில் கை தட்டல்கள் அள்ளுகின்றன. ரெடிங் கிங்ஸ்லி மற்றும் லொள்ளு சபா மாறன் வசனங்களுக்கு நிச்சயம் சிரிப்பொலியை எதிர்பார்க்கலாம். இருந்தபோதிலும், அவர்களுக்குக் கூடுதல் காட்சிகளை வழங்கியிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கிறது. விஜய் சேதுபதி குடும்பத்தினரின் கல்யாணக் கதை நகைச்சுவைக்குப் பலம் சேர்க்கும் என்று விக்னேஷ் சிவன் எதிர்பார்த்திருந்தால், அது ஏமாற்றமே. படத்துக்கு அதுவும் ஒரு பின்னடைவு.

இதையும் படிக்கஇந்தியாவில் அதிகமாக வசூலித்த 3-வது ஹிந்திப் படம்: கேஜிஎஃப் 2 சாதனை

ADVERTISEMENT

டைட்டானிக், பாகுபலி, சத்யா திரைப்படக் காட்சிகளை இந்தக் கதைக்கேற்ப மறுஉருவாக்கம் செய்திருப்பது படத்திலிருந்து நினைவில் நிற்கக்கூடிய தருணங்களாக வந்துள்ளன. அடுத்து அஜித்தை இயக்குவதாலோ என்னவோ இந்தப் படத்தில் விஜய்யை நக்கலாகக் கலாய்க்க, திரையரங்கில் விசில் பறக்கின்றன.

படம் நெடுக லூப் மோடில் (Loop Mode) 'நான் உங்கள் இருவரையுமே காதலிக்கிறேன்' எனத் தொடர்ந்து ராம்போ கூறிவருவதால், இறுதியில் யாரை அவர் கரம்பிடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு படத்தின் இறுதி வரை கடத்தப்பட்டுள்ளது. எனினும், இந்த ஒற்றை விஷயத்தைச் சுற்றியே கதை முழுக்க நகர்வதால், படத்தின் நீளத்தைச் சற்று குறைத்திருக்கலாமோ என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

ஒருகட்டத்தில் இந்த மூவர் காம்போவுக்கு உண்மை தெரியவர, அதன் பிறகான கதைக்கு வலுவான காரணம் எதுவும் கிடைக்கவில்லை. துரதிருஷ்டசாலி என நம்புவது, ஊரே அதைக் கண்டு அஞ்சுவது என்பது போன்ற மிகப் பழைய விஷயங்கள் ராம்போவின் பின்கதையாக (படத்தின் மூலக் கதை) இருப்பது படத்தின் சுவாரஸ்யத்தைக் கொஞ்சமும் தூண்டவில்லை. 

படம் முடிந்தவுடன் ராம்போ, கண்மணி, கதிஜா கதாபாத்திரங்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்களை நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு காட்சிகள் வடிவமைக்கப்படவில்லை. பிரபு, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் போன்றோர், குறிப்பிட்ட கதைப் பயணத்துக்குப் பிறகு காணாமல் போய்விடுகின்றனர். அவர்கள் காணாமல் போவதற்கு கதையிலேயே லாஜிக் வைத்திருந்தாலும், அவை நெருடலாகவே இருக்கின்றன.

ராம்போவின் அம்மா கதாபாத்திரம் வலுவான உணர்வுப்பூர்வமானதாகத் தொடங்கி, இறுதியில் முற்றிலும் நேர்மாறாக நகைச்சுவைக் கதாபாத்திரமாக மாறியிருப்பதால் பார்வையாளர்களால் அந்தக் கதாபாத்திரத்துடன் ஒட்ட முடியவில்லை. ஆனால், அந்தக் கதாபாத்திரம்தான் கதையின் ஆன்மாவாகவே உள்ளது.  கண்மணியின் தம்பி கதாபாத்திரம், கதிஜாவின் தந்தை கதாபாத்திரம் உணர்வுபூர்வமாக விளக்கி அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவை பின்வரும் திரைக்கதையில் பெரிதளவிலான தாக்கத்தை உண்டாக்கவில்லை.

மற்றபடி நடிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் அசத்தியிருக்கின்றனர். அதுவே படத்திற்குப் பெரிய பலம். ஆனால், இதுவரை பார்த்திராத விஜய் சேதுபதியைப் பார்க்கப் போகிறோம் என்று எண்ணினால், இந்தப் படத்திலும் ஏமாற்றமே மிஞ்சும்.

பின்னணி இசையில் அனிருத் வழக்கம்போல் பலம் சேர்த்திருக்கிறார். கண்மணியா, கதிஜாவா என ராம்போ குழப்பமடைவதை நியாயப்படுத்தும் வகையில் இருவரையும் மிகவும் அழகாகக் காட்சிப்படுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். இதற்கு நான் பிழை, டிப்பம் டப்பம் பாடல்களே சிறந்த உதாரணங்கள். 

இப்படியாகப் பல குறைகளுக்கு மத்தியில் சில நகைச்சுவை கலந்த கலவையாக வந்திருக்கிறது காத்துவாக்குல ரெண்டு காதல்!

Tags : KRK Review
ADVERTISEMENT
ADVERTISEMENT