திரை விமரிசனம்

ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கரின் ஓ மணப்பெண்ணே ! - திரைப்பட விமர்சனம்

21st Oct 2021 04:02 PM | கார்த்திகேயன் எஸ்

ADVERTISEMENT

 

ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஓ மணப்பெண்ணே. இந்தப் படம்  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்  அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகிறது.

பிரியா பவானி ஷங்கரைப் பெண் பார்க்க வருகிறார் ஹரிஷ் கல்யாண். எதிர்பாராதவிதமாக ஒரு அறையில் ஹரிஷ் கல்யாணும், பிரியா பவானி ஷங்கரும் மாட்டிக்கொள்கின்றனர். அந்த நேரத்தில் சமையல் கலைஞராக வேண்டும் என்ற தன் கனவை ஹரிஷ் கல்யாணும், வாகனத்தில் உணவு விற்கும் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்ற தன் கனவை பிரியா பவானி ஷங்கரும் தெரிவித்துக்கொள்கின்றனர். கிட்டத்தட்ட ஒரே கனவில் இருக்கும் இருவரின் கனவும் பலித்ததா என்பதே ஓ மணப்பெண்ணே படத்தின் கதை. 

தெலுங்கில் தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா நடித்திருந்த பெல்லி சூப்புலுவை முடிந்தவரை அப்படியே  தமிழாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுந்தர். கார்த்திக்காக ஹரிஷ் கல்யாண். தமிழ் சினிமாவின் வழக்கமான, என்ஜினியரிங் முடித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாத இளைஞராக ஹரிஷ் கல்யாண் இந்த வேடத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். 

ADVERTISEMENT

வழக்கத்துக்கு மாறாக கதாநாயகனைவிட நடிப்பதற்கு மிக முக்கியமான வேடம் பிரியா பவானி ஷங்கருக்கு. சொல்லப்போனால் ஹரிஷ் கல்யாண் வேடத்தைவிட பிரியா பவானி ஷங்கர் வேடம் தான் வலுவாக எழுதப்பட்டிருக்கிறது. அதனை அவர் நன்றாகவே கையாண்டிருக்கிறார். 

ஹரிஷ் கல்யாணின் அப்பாவாக வேணு அரவிந்த். தனது யதார்த்தமான நடிப்பால் நம் குடும்பத்து அப்பாக்களைக் கண்முன் கொண்டுவந்துவிடுகிறார். ஹரிஷ் கல்யாணின் நண்பர்களாக அன்புதாசன் மற்றும் அபிஷேக் குமார் ஆங்காங்கே சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். அதில் அன்புதாசன் ஓரளவுக்கு வெற்றிபெற்றுவிடுகிறார். 

குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த அஸ்வின் குமார் இந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்னும்கூட அவர் நடிக்க  முயன்றிருக்கலாம். இந்தப் படம் கரோனா ஊரடங்கிற்கு முன் படமாக்கப்பட்டது. ஒருவேளை குக் வித் கோமாளிக்குப் பிறகு அவர் இந்த மாதிரியான வேடத்தை அவர் ஒப்புக்கொண்டிருப்பாரா என்பதே சந்தேகம்தான். 

தமிழ் சினிமாவில் நாம் இதுவரை பார்க்காத புதுமையான விதத்தில் கதை சொல்லப்பட்டிருக்கும் விதம்தான் படத்துக்கு பலம். இடைவேளை வரை ஹரிஷ் கல்யாணும் பிரியா பவானி ஷங்கரும் தங்கள் கதைகளை மாறிமாறி சொல்லிக்கொள்ளும் விதம், ஒருவர் விட்ட இடத்தில் மற்றவர் தொடங்குவது என சுவாரசியமாகவே நகர்கிறது. இடைவேளையில் வரும் திருப்பமும் நன்றாகவே இருந்தது. ஆனால் அந்த சுவாரசியம் இடைவேளைக்குப் பிறகு நிறைய இடங்களில் காணாமல்போகிறது. 

அதுமட்டுமல்லாமல், வேணு அரவிந்திடம் ஒரு காட்சியில் ஹரிஷ் கல்யாண் நீங்கள் செல்வி சீரியலில் வருகிறவர்தானே எனக் கேட்பார் அது ரசிக்கும்படி இருந்தது. ஆனாலும் படத்தில் ஆங்காங்கே ஹரிஷ் கல்யாணைப் பார்த்து தாராளப் பிரபு, இஸ்பேட் ராஜா, பியார் பிரேமா காதல் என அவரது முந்தைய படங்களை நினைவு-படுத்தும் வசனங்களை வைத்திருப்பதை ரசிக்க முடியவில்லை.

தன்னைப் பெண் பார்க்க வரும்போது ஹரிஷ் கல்யாணிடம், ஆண் குழந்தை எதிர்பார்த்த அப்பாவுக்கு, தான் பெண் குழந்தையாக பிறந்துவிட்டதால் தன்னைப் பிடிக்காது என பிரியா பவானி ஷங்கர் வருத்தமாக சொல்வார். பின்னர் இரண்டாம் பாதியில் பிரியா பவானி ஷங்கரின் அப்பாவிடம் , மகனைவிட உங்கள் மகள் ஒரு படி மேல் என ஹரிஷ் கல்யாண் விளக்கும் காட்சி சிறப்பாக இருந்தது. 

ஹரிஷ் கல்யாண் சமையல் கலையில் ஆர்வம் மிக்கவராக காட்டப்படுகிறார். ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை நிறுவுவதற்கு மெனக்கெடாததுபோல் தெரிகிறது. திடீர் சமையற்கலை நிபுணர் எனும் ஹரீஷ் கல்யாணுக்கு நியாயம் சொல்லும் வகையில் அழுத்தமாக காட்சிகள் இல்லை.

தனது பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். அனிருத் மற்றும் ஷாஷா திருப்பதி பாடிய போதை  கணமே பாடல் நன்றாக இருந்தது. காட்சிகளை மிக நேர்த்தியாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த். அவரது ஒளிப்பதிவில் காட்சிகள் மிக அழகாக இருக்கின்றன. 

முதல் பாதியில் இருக்கும் அழுத்தமான காட்சிகள் இரண்டாம் பாதியில் இல்லை. மேலும், இரண்டாம் பாதிக்கு மேல் படத்தில் காட்சிகள் வலுவில்லாமல் நகர்கின்றன. குறிப்பாக ஒரே ஒரு காட்சியாக மட்டுமல்லாமல் ஹரிஷ் கல்யாணும் பிரியா பவானி ஷங்கரும் நேசிப்பதற்கான காரணங்களை காட்சிகளாக இன்னும் அதிகம் சேர்த்திருந்தால் இறுதியில் அவர்கள் சேர வேண்டும் என்ற பதற்றம் நமக்கு உருவாகியிருக்கும். அல்லது அவர்கள் வியாபாரத்தில் வெற்றி  தோல்விகளுடன் படிப்படியாக உயர்வதாக காட்டியிருந்தால் ஒரு இன்ஸ்பிரேஷனல் கதையாக ஈர்த்திருக்கும். ஆனால் இரண்டுமே பெரிதாகக் கைகொடுக்கவில்லை. 

இருப்பினும் சுவாரசியமான முதல் பாதி, சுமாரான இரண்டாம் பாதி என குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய படமாகவே அமைந்திருக்கிறது இந்த ஓ  மணப்பெண்ணே. சிறிய கதையாக ஓடிடிக்கான படமாக இருப்பதால் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டிருப்பது தயாரிப்பாளர்களின் நல்ல முடிவு.

Tags : review Oh Manapenne movie review Priya Bhavani Shankar Harish Kalyan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT