தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரை விமரிசனம்

தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரை விமரிசனம்

காமம், கடவுள் நம்பிக்கை, ஆண்-பெண் உறவுச்சிக்கல், பாலின அடையாளக் குழப்பம், இருப்பு (existence) போன்ற மானுடக்குலத்தின் ஆதாரமான சில பிரச்னைகளைப் பேசும் படம்

காமம், கடவுள் நம்பிக்கை, ஆண்-பெண் உறவுச்சிக்கல், பாலின அடையாளக் குழப்பம், இருப்பு (existence) போன்ற மானுடக்குலத்தின் ஆதாரமான சில பிரச்னைகளைப் பற்றி எள்ளலும் தீவிரமும் கலந்த அவல நகைச்சுவையுடன் மூன்று மணி நேரத்திற்கு உரையாட முடியுமா? ஆம் என்று நிரூபித்திருக்கிறது, சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தில் பிரதானமாக நான்கு கதைகள் பயணிக்கின்றன. கூடவே சில துணைக் கதைகளும். ஒன்றுக்கொன்று பெரிதாக அதிகம் சம்பந்தமில்லை. அரிதாக சில புள்ளிகளில் மட்டுமே இணைகிறது. 

இயற்கையால் கட்டமைக்கப்பட்ட விதிகளால் பிரபஞ்சத்தின் தன்னிச்சையான இயக்கம் எத்தனையோ நூற்றாண்டுகளாக தொடர்ந்து  இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் மிகச் சிறிய பரிமாணத்தை மட்டும் உணர முயலும் மனித குலம் அதைக் கொண்டு பல கற்பிதங்களை உருவாக்கிக் கொள்கிறது. தற்செயலான விளைவுகளுக்கு காரணங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. கடவுள், மதம் என்று பல்வேறு நம்பிக்கைகளாக இவை உருக்கொள்கின்றன. மானிடத்தின் இந்த ஆதாரமான நம்பிக்கைகளை எள்ளலான சிரிப்புடன் அசைத்துப் பார்க்க முயல்கிறது, இந்த திரைப்படம். 

சில வருடங்களுக்குப் பிறகு வீடு திரும்பும் தந்தையைக் காண மிக மிக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அவனுடைய தாயும் கூட. அவனின் குடும்பமும் கூட. ஆனால் வருபவனைக் கண்டு அனைவரும் அதிரச்சியடைகிறார்கள். ஏன்?

அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள தன்னுடைய மகனை அலறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறார் ஒரு தாய். செல்லும் வழியில் கண் விழித்துப் பார்க்கும் மகன், தாயை நோக்கி ஓர் ஆபாச வசையை வீசுகிறான். ஏன்?

வாழ்க்கையில் வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள செல்கிறான் ஒருவன். ஆயிரக்கணக்கானவர்களை சாகடித்த சுனாமி அலை அவனை மட்டும் காப்பாற்றுகிறது. இதனால் தான் கண்டுபிடித்த கடவுளின் மீது அதிநம்பிக்கையோடு அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொள்கிறான். எனினும் சந்தேக அலை ஒரமாக அவனுள் அடித்துக் கொண்டே இருக்கிறது. ஏன்?

மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளம் தம்பதியினர், ஒரு சடலத்தை வைத்துக் கொண்டு ஊர் முழுக்கச் சுற்றுகின்றனர். அவர்களிடையே இருந்த மனவிலகல்களும் புழுக்கமும் தீர அந்த விநோதமான பயணம் காரணமாக இருக்கிறது. எப்படி?

நான்கு விடலை இளைஞர்கள் தங்களின் வயதுக்கேயுரிய விவகாரமான தேடலில் ஈடுபட்டு பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். ஏன்?

ஒரு சிக்கலான நூற்கண்டின் வெவ்வேறு நுனிகள் மெல்ல மெல்ல அவிழ்கின்றன. இறுதி முடிச்சு முற்றிலும் எதிர்பாராததொரு தத்துவக் கோணத்தில் இணைக்கப்படுகிறது. மனிதத்தின் விகாரங்களும் புனிதங்களும் நம்பிக்கைகளின் அபத்தங்களும் இந்தப் பயணங்களில் பல்வேறு வழியாக வெளிப்படுகின்றன. 

தியாகராஜன் குமாரராஜாவின் முதல் திரைப்படமான ‘ஆரண்ய காண்டம்’ வெளிவந்து ஏறத்தாழ எட்டு ஆண்டுகளாகிறது. ஆனால் அவரின் அடுத்த திரைப்படத்திற்கான ஆவல் இன்னமும் கூட ரசிகர்களிடம் குறையாமல் இருந்தது. இது வேறெந்த தமிழ் இயக்குநருக்கும் நிகழாத ஒரு சாதனை எனலாம். அந்தளவிற்கான அழுத்தமான தடத்தை முதல் திரைப்படம் உருவாக்கியிருந்தது. அந்த ஆவலை ‘சூப்பர் டீலக்ஸின்’ மூலம் சேதமடையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர். 

இந்தத் திரைப்படத்தில் எவருக்கும் பிரதான பாத்திரமில்லை. அனைவருமே சிறுசிறு பாத்திரங்கள்தான். ஆனால் பல முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் ஆர்வமாக வந்து பணி புரிந்திருக்கிறார்கள். திரைக்கதையின் மீதும் இயக்குநரின் மீதும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இதன் வழியாக உணர முடிகிறது. 

விஜய் சேதுபதியை நினைத்தால் மிக ஆச்சரியமாக இருக்கிறது. சாதாரண துணை நடிகராக இருந்து சமகாலத்தின் நாயகனாக முன்னேறியவர் அவர். பொதுவாக எந்தவொரு முன்னணி நடிகரும் தங்களின் ஊதப்பட்ட பிம்பத்தை தானே கலைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால் தன் பிம்பத்தை தானே கலைத்துக் கொள்ளும் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுகிறார் விஜய்சேதுபதி. இந்த திரைப்படத்தில் எந்தவொரு இடத்திலும் அவரைக் காண முடியவில்லை. ஷில்பா என்னும் திருநங்கையாகவும் மாணிக்கம் என்கிற பாசமிகு தந்தையாகவும் மாறி மாறி அவர் காட்டும் ஜாலங்கள் வியக்கவும் பிரமிக்கவும் வைக்கின்றன. 

இந்த திரைப்படத்தின் இன்னொரு பிரம்மாண்ட ஆச்சரியம் சமந்தா. விஜய் சேதுபதியைப் போலவே துணிச்சலானதொரு பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். சந்தர்ப்ப சூழல் ரணமாக இல்லற துரோகத்தில் இவர் வீழ்கிறார். தன் சறுக்கலை ஒப்புக் கொண்ட பிறகும் குத்திக் காட்டிக் கொண்டேயிருக்கும் ஆணாதிக்க மனோபாவமுள்ள கணவனை இவர் கையாளும் விதம் அத்தனை அழகு. 

ஏறத்தாழ சமந்தாவிற்கு ஈடான பாத்திரத்தை ஃபஹத் பாசில் ஏற்றிருக்கிறார். ஒரு சராசரியான கணவனின் அற்பத்தனத்தையும் கோழைத்தனத்தையும் மிக அநாயசமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். ‘சமூகம் சரியில்லை’ என்று பல்வேறு புரட்சிகர வசனங்களை பேசிக் கொண்டேயிருக்கும் இவர், ஓர் அசந்தர்ப்பமான சூழலில் தன் மனைவியையே இன்னொருவருக்கு விட்டுத்தரும் அற்பமான பேரத்தை அச்சத்துடன் ஏற்கிறார். சராசரிகளின் இரட்டை மனநிலையையும் கோழைத்தனங்களையும் இந்தப் பாத்திரம் கச்சிதமாக வெளிப்படுத்துகிறது. 

பகவதி பெருமாள் என்கிற பக்ஸின் பாத்திரம் எதிர்பாராத ஆச்சரியத்துடன் அமைந்திருக்கிறது. மனவிகாரமும் காமப்பித்தும் கொண்ட ஒரு bisexual ஆசாமியை அதன் கொடூரம் குறையாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகராக அறியப்பட்டவரின் இன்னொரு பரிமாணத்தைக் காண சுவாரசியமாக இருக்கிறது. 

ஒரு தீவிரமான மதவிசுவாசியின் மூர்க்கத்தனத்தையும் மனத்தத்தளிப்பையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் மிஷ்கின். ‘பையன் உயிரைக் காப்பாத்த பணம் கேட்டேன். கடவுள் தரலை. சிலையை உடைச்சேன். உள்ளே வைரம் இருக்கு. இதை நான் எப்படி எடுத்துக்கறது’ என்று இவர் குழம்பும் காட்சி அற்புதமானது. இதற்கு ரம்யா கிருஷ்ணன் அளிக்கும் பதில் அதனினும் அற்புதம். பாலியல் திரைப்பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருக்கும் பாத்திரம் துணிச்சலானது. அது குறித்து மகனிடம் விளக்கம் அளிக்கும் காட்சி அபாரமானது. இந்தப் பாத்திரத்தை அதிக கொச்சையின்றி கையாண்டிருக்கும் இயக்குநருக்கு ஒரு பிரத்யேகமான பாராட்டு. 

எந்தவொரு நண்பர்கள் குழுவிலும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் இருப்பார்கள். அப்படியொரு சுவாரசியமான நண்பர் குழு இதில் இருக்கிறது. நான்கு விடலை வயதினர். ‘மேட்டருக்காக’ எப்போதும் அலையும் காஜி என்கிற பட்டப்பெயர் கொண்ட இளைஞன் தன் பிரத்யேகமான நடிப்பினால் கவர்கிறான். செருப்படி வாங்கி விட்டு கம்பீரமாக நகரும் காட்சி சுவாரசியமானது.  ‘முட்டை பப்ஸ்’ இளைஞனின் வெள்ளந்தித்தனமும் கவர்கிறது. (‘மேட்டர் படம் இருக்கா மேடம்?’) 

விஜய் சேதுபதியின் மகனாக (அப்படியொரு கற்பிதம்!) ‘ராசுக்குட்டி’ என்னும் பாத்திரத்தில் நடித்திருக்கும் அஷ்வந்த்தின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. தந்தைமையின் மீதான ஏக்கத்தை விதம் விதமாக வெளிப்படுத்தி தீர்க்கிறான் இந்தச் சிறுவன். காயத்ரியின் அடக்கமான நடிப்பினுள் ஆழம் அதிகம். புடவை மாற்றும் விஜய் சேதுபதியை விநோதமான முகபாவத்துடன் இவர் காண்கிற ஒரு காட்சியே நல்ல உதாரணம். 

இது தவிர, ஒரு கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பத்திலுள்ள கிழவிகள், உறவினர்கள், அசந்தர்ப்பமாக உளறும் கிழவர், உயரம் குறைந்த சொந்தக்காரர், ஆட்டோ டிரைவர், உதவி செய்யும் பக்கத்து வீட்டு புஷ்டியான பெண்மணி, சிடி விற்கும் பெண்மணி என்று ஒவ்வொரு சிறு பாத்திரமும் மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மிக குறிப்பாக மிஷ்கினின் உதவி விசுவாசியாக வருபவரின் நடிப்பு தனித்துக் கவர்கிறது. 

**

தியாகராஜன் குமாரராஜாவின் திரைப்படம் என்றாலே யுவன் சங்கர் ராஜாவிற்கு பிரத்யேகமான மனநிலை வாய்த்து விடுகிறது போல. பல காட்சிகளை அர்த்தமுள்ள மெளனங்களால் நிரப்பியிருக்கிறவர், அவசியமான இடங்களில் இதயத் துடிப்பு போன்ற பதற்றமான இசையைக் கொண்டு மனம் உதற வைத்திருக்கிறார். சில இடங்களில் துள்ளலான இசை பின்னியெடுக்கிறது. 

ஆரண்ய காண்டத்திற்கு ஒளிப்பதிவு செய்த பி.எஸ்.வினோத்தோடு நீரவ் ஷாவும் இதில் இணைந்திருக்கிறார். ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியான ஒளியமைப்புகள் கையாளப்பட்டிருக்கின்றன. ஆனால் உறுத்தாமல் ஒன்றிணைந்திருக்கின்றன. சத்யராஜ் நடராஜனின் எடிட்டிங், சாவசாசமான தருணங்களை சேதமுறாமல் ஒன்றிணைத்திருக்கிறது. இறுதிப் பகுதியை மட்டும் சற்று கவனித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். 

எண்பதுகளில் வெளி வந்த தமிழ், இந்தி திரையிசைப் பாடல்களின் மீது இயக்குநருக்குள்ள மோகம், முந்தையை திரைப்படத்தைப் போலவே இதிலும் வெளிப்படுகிறது. பொருத்தமான இடங்களில் இந்தப் பாடல்கள் ஒலித்து பின்னணியின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. காரை பெயர்ந்த அழுக்கான சுவர்கள், குறுகலான சந்துகள், ஒளியும் இருளும் கச்சிதமாக கை கோர்க்கும் வீடுகள், அவற்றில் நிரம்பியிருக்கும் பொருட்கள் என்று இவர் தேர்ந்தெடுக்கும் பின்னணிகளும் பிரதேசங்களும் அத்தனை பிரத்யேகமானதாக இருக்கின்றன. நாம் அன்றாடம் பார்க்கும் இடங்களை முற்றிலும் இன்னொரு பரிமாணத்தில் காட்டுகிறார் இயக்குநர். 

இந்த திரைப்படத்தின் இன்னொரு சிறந்த தொழில்நுட்பம் என்பது ஒலி வடிவமைப்பு. அந்தந்த இடங்களின் பொருத்தமான சப்தங்கள் துல்லியமாக  வெளிப்படுகின்றன. ஒரு பாத்திரம் பேசி முடித்த பிறகு அடுத்த வசனம் என்கிற சம்பிரதாயங்கள் மீறப்பட்டு, வெவ்வேறு மூலைகளில் இருந்து உரையாடப்படும் வசனங்கள் குழப்பமில்லாமல் ஒலிக்கின்றன. 

**
ஆரண்ய காண்டத்தைப் போலவே இந்த திரைப்படத்தின் பாத்திரங்களின் பெயர்களும் அந்தந்த குணாதிசயங்களுக்கேற்ப பொருத்தமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆய்வு செய்வதே சுவாரசியமானதாக இருக்கிறது. அற்புதம் என்னும் பெயருடைய ஒரு மத போதகர், விசுவாசத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் அல்லாடுகிறார். அதே சமயத்தில் அவருடைய உதவியாளர் நம்பிக்கையை பிடிவாதமாக இழக்காமலிருக்கிறார் அவருடைய பெயர் ‘ராமசாமி’ என்பது சுவாரசிய முரண். இப்படியே ஷில்பா, பெர்லின், வேம்பு போன்ற பாத்திரங்களின் பெயர்களையும் ஆராய்ந்து பார்க்கலாம். அனைத்தையும் இணைக்கும் ‘லீலா’ என்கிற ரம்யா கிருஷ்ணனின் பெயர் இவற்றில் முக்கியமானது. 

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும் உயிர் சுழற்சியும் காமம் என்னும் ஆதாரமான உந்துதலின் வழியாக அழுத்தமாக பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைகளின் ஆதாரத்திலும் காமம் என்பது ஆதாரமாக இழையோடுவதைக் கவனிக்கலாம். முன்னாள் காதலனுக்கு கருணையை காமத்தின் வழியாக வெளிப்படுத்தும் ஒருத்தி எதிர்கொள்ளும் சிக்கல், காமத்திற்கான தேடலை நோக்கி ஓடிக் கொண்டேயிருக்கும் விடலை இளைஞர்கள், காமத்தின் வடிகாலுக்கான சித்திரங்களில் தோன்றும் நடுத்தர வயது பெண்மணி, பாலின அடையாளக் குழப்பத்தில் தவிக்கும் நபர், மனைவி பாலியல் நடிகை என்பதை அறிந்து தற்கொலை செய்யச் சென்றவன் மத விசுவாசியாக மாறுவது என்று அனைத்துச் சிக்கல்களும் பிரச்னைகளும் காமத்தை அடிநாதமாகக் கொண்டு பயணிக்கின்றன. 

நாம் அன்றாடம் காணும் உலகங்களின் வழியாக பயணிக்கும் இதன் திரைக்கதை சட்டென்று ஓர் அறிபுனைவிற்குள் ஓர் ஏலியனின் வழியாக நுழைவதும் இருப்பின் புதிர்களை, ரகசியங்களை அவிழ்க்க முயல்வதும் சுவாரசியமானதாக இருக்கிறது. 

இது வயது வந்தோர்க்கான திரைப்படம். சில விவகாரமான வசனங்கள், குறிப்புகள், நகைச்சுவைகள் போன்ற சுவாரசியங்களின் மூலம் அழுத்தமான பல விஷயங்களை உணர்த்தவும் நிறுவவும் முயல்கிறது. ஃபக் என்ற எழுத்தைக் கொண்ட பனியனை அணிந்திருக்கும் சிறுவன் தலைகீழாக தொங்குவது, அதன் ஆங்கில வார்த்தையை பொருள் தெரியாமல் கத்தித் திரியும் ஒரு சிறுவன், சமந்தாவின் கண்டனத்தால் மிரள்வது, அதே வார்த்தையை கோபத்தில் கணவன் சொல்லும் போது சமந்தா தடுக்கத் தெரியாமல் தவிப்பது போன்ற சித்தரிப்புகளை மனப்பக்குவமும் முதிர்ச்சியும் உள்ளவர்கள் ரசிக்கலாம். கலாசார நம்பிக்கைவாதிகள் அதிர்ச்சியும் நெருடலும் கொள்ளக் கூடும்.  என்றாலும் ‘போடுதல்’ என்னும் கொச்சையான பிரயோகம் பல இடங்களில் வருவது மிகையானதாக இருக்கிறது. 

‘டார்க் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையைக் கையாள்வது அத்தனை சுலபமானதில்லை. இதே இயக்குநர்தான் ‘ஆரண்ய காண்டத்தின்’ மூலம் அந்த வகைமையை தமிழ் சினிமாவில் கச்சிதமாக துவங்கி வைத்தார். (கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ இதற்கான முன்னோடி என்றாலும்). அதன் பிறகு நலன் குமாரசாமி போன்றவர்கள் சில அற்புத கணங்களை சித்தரித்தாலும், மறுபடியும் தியாகராஜன் குமாரராஜாவேதான் இந்த வகைமையை மீண்டுமொரு முறை கச்சிதமாகத் தொடர்ந்திருக்கிறார். ‘பெரிய பத்தினி. இவ…கரண்ட் ‘வா’ன்னு சொன்னவுடன் வந்துடும்’ என்கிற காட்சி ஒரு சிறந்த உதாரணம். 

ஒரு பார்வையாளனின் கோணத்தில் என்னால் இந்தப் படத்தில் சில குறைகளையும் போதாமைகளையும் உணர முடிகிறது. ஆரண்ய காண்டத்தைப் போலவே இதிலும் நிலவெளிகளின் கலாசார முரண்கள் நெருடலை ஏற்படுத்துகின்றன. சம்பவங்கள் நிகழ்கின்ற காலக்கட்டத்தையும் இடங்களையும் அரசியல் சுவரொட்டி, செல்போன் போன்ற பின்னணிகளின் மூலம் யூகிக்க முடிகிறது என்றாலும் இவற்றில் ஒருவிதமான மயக்கத்தையும் பூடகத்தையும் தொடர்ந்து கையாள்கிறார் இயக்குநர். தனக்கான பிரத்யேக உலகத்தை இவ்வாறு திட்டமிட்டு படைப்பதுதான் அவரது நோக்கம் என்றால் அதில் வெற்றி பெறுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இவற்றிலுள்ள நடைமுறை சார்ந்த முரண்களையும் களைய முயன்றால் முழுமையை நோக்கி இன்னமும் நகர முடியும். 

பல அற்புதமான நுண்விவரங்களால் காட்சிகளின் நம்பகத்தன்மையை அதன் கூர்மைக்கு இட்டுச் செல்கிறார் இயக்குநர். இவை ஒருபுறம் நிகழ்ந்தாலும் அவற்றின் ஆதாரத்திலேயே சந்தேகம் தோன்றுவதால் நுண்விவரங்களால் கட்டப்பட்ட சுவர் சரியும் ஆபத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும், தொழில்முறை கொலைகாரர்கள் போல் பிணத்தை அப்புறப்படுத்த முயல்வது முரணாக இருக்கிறது. 

சுஜாதாவின் சிறுகதையொன்று நினைவிற்கு வருகிறது. பெரும் பணத்தைக் கொண்ட பெட்டியொன்று ஒரு கீழ்நடுத்தர வர்க்க குடும்பம் வசிக்கும் ஒண்டுக் குடித்தன வாசலில் கேட்பார் இல்லாமல் கிடக்கும். அதைக் கண்டு கணவனும் மனைவியும் பதறிப் போவார்கள். பல்வேறு விதமாக பேசி குழம்பித் தவிப்பார்கள். கடைசியில் அதைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க கிளம்புவான் கணவன். ஆனால் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஆட்டோவிற்கு காசு இருக்காது. ‘பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வருகிறேன்’ என்று கிளம்புவாள் மனைவி. இந்த சுவாரசியமான முரணை அழகாக சித்தரித்திருப்பார் சுஜாதா.

இதுதான் நடுத்தர வர்க்கத்தின் மனோபாவம். அவர்களால் குற்றங்களின் சாகசங்களில் எளிதில் விழ முடியாது. அவர்களின் மனச்சாட்சி அதற்கு அனுமதிக்காது. இது போன்ற நம்பகத்தன்மைகளை இயக்குநர் பரிசீலித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 

ஆனால் – செய்தித்தாள்களில் நாம் வாசிக்கும் குற்றச் செய்திகள் இதன் இன்னொரு விதமான திடுக்கிடும் பரிமாணங்களை நமக்கு அம்பலப்படுத்துகின்றன. இதே சராசரிகள்தான் நம்ப முடியாத குற்றங்களை மிக அநாயசமாக நிகழ்த்துகிறார்கள்.  இந்த அரிய உதாரணங்களால்தான் இயக்குநர் சித்தரிக்கும் உலகம் நிரம்பியிருக்கிறது என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். 

இந்த நான்கு தனித்தனியான திரைக்கதைகளை, தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் கே சேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். (மத விசுவாசியின் பகுதியை மிஷ்கின்தான் எழுதியிருப்பார் என்பது எளிதான யூகம்) இவற்றின் தேவையற்ற பகுதிகளை உதறி விட்டு அவற்றின் மையத்தை மட்டும் சுவாரசியமான காட்சிகளின் வழியாக விவரித்திருக்கிறார் இயக்குநர். இவற்றின் அத்தனை நுனிகளையும் தத்துவ விசாரணையின் வழியாக இணைத்திருப்பது சிறப்பு. ஆனால், ஒரு சராசரி மனிதனின் பல அடிப்படையான எளிய நம்பிக்கைகளை பகுத்தறிவு விசாரணையின் மூலம் களைந்து விட்டால், அவன் எதைப் பற்றிக் கொண்டு தன் சிக்கலான உலகத்தில் வாழ்வான் என்கிற கேள்வியும் எழுகிறது. 

சமீபத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியமான திரைப்படம் இது. ஒரு தடவைக்கு மேல் பார்க்கவும் அவற்றைக் கொண்டு யோசிப்பதற்கான உத்வேகத்தையும் தரும் படைப்பு. ஒரு மலினமான பாலியல் திரைப்படத்தின் முன்னோட்டத்தின் வழியாக இந்தத் தத்துவ விசாரணைகளை இயக்குநர் நிகழ்த்தியிருப்பதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய அவல நகைச்சுவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com