நயன்தாராவின் ‘ஐரா’: திரை விமரிசனம்

பல காட்சிகள் நம்பகத்தன்மையோடு அமையாததால் திரைப்படத்தோடு ஒன்ற முடியவில்லை..
நயன்தாராவின் ‘ஐரா’: திரை விமரிசனம்

தமிழ் சினிமாவில், பேய்ப்படங்களின் அலை ஓய்ந்து விட்டதே என்று மகிழ்ந்து கொண்டிருந்த வேளையில் புதிதாக ஒன்று கிளம்பியிருக்கிறது. ஆனால் இது சமர்த்தான பேய். எல்கேஜி குழந்தையைக் கூட பயமுறுத்தவில்லை. எண்பதுகளில் வெளிவந்திருந்தால் ஒருவேளை கவனத்தைக் கவர்ந்திருக்குமோ, என்னமோ!

‘ஐரா’, மிக மிக சுமாரான முயற்சி. ஆனால் இந்தக் கதையின் அடிப்படையை இன்னமும் நிறைய மெனக்கெட்டு உருப்படியான திரைக்கதையாக வளர்த்தெடுத்திருந்தால் சுவாரசியமான ‘சினிமா’வாக ஆகியிருக்கும். ஆனால் அது நிகழவில்லை

கதாபாத்திரங்களையும் காட்சிகளையும் பார்வையாளர்களுடன் உணர்ச்சிகரமாகவும் அழுத்தமாகவும் பிணைக்காவிட்டால் எப்படிப்பட்ட மெலோடிராமாவும் திகிலும் கேலிக்கூத்தாக ஆகிவிடும் என்பதற்கு நயன்தாரா முதல்முதலாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்தத் திரைப்படமும் ஒர் உதாரணம்.

*

சென்னையில் ஒரு பத்திரிகையாளராகப் பணிபுரிபவர் யமுனா (நயன்தாரா). தன்னுடைய வழக்கமான பணியில் சலிப்புற்று ‘யூடியூப் சானல்’ துவங்கலாம் என்று அவர் சொல்கிற ஆலோசனை நிர்வாகத்தால் நிராகரிக்கப்படுகிறது. இதற்கிடையில் அவருடைய திருமணத்திற்காகப் பெற்றோர் வற்புறுத்துகிறார்கள்.

இதனால் வெறுப்புறும் யமுனா, பொள்ளாச்சியில் உள்ள தன் பாட்டி வீட்டுக்குச் செல்கிறார். பேய் தோன்றுவது போன்ற செயற்கையான காட்சிகளை உருவாக்கி ‘யூடியூபில்’ வெளியிட்டு அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் அந்த வீட்டில் உண்மையாகவே பேய் இருப்பதற்கான அடையாளங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

இதற்கிடையில், சென்னையில் இருக்கும் அமுதன் (கலையரசன்) என்பவர், ஒரே மாதிரியாக நிகழும் சில விநோதமான மரணச் செய்திகளை அறிகிறார். அந்த வரிசையில் அடுத்துக் கொல்லப்படவிருக்கிறவர் யமுனா என்பதை அறிகிறார்.

அந்த மரணங்கள் ஏன் நிகழ்கின்றன, அப்பாவியான யமுனா அந்த வரிசையில் எப்படிச் சேர்ந்தார் என்பதையெல்லாம் இன்னொரு நயன்தாராவின் (பவானி) மூலம் இரண்டாவது பகுதியில் விவரித்திருக்கிறார்கள்.

*

படத்தின் முற்பாதியில் ‘பயமுறுத்துகிறேன் பேர்வழி’ என்று நம்மைப் படுத்தியெடுத்திருக்கிறார் இயக்குநர். அனைத்துமே பல அபத்தமான பேய்ப்படங்களில் பார்த்த தேய்வழக்கு உத்திகள். இரண்டாம் பகுதியில் ‘கருப்பு’ நயன்தாரா அறிமுகமானவுடன் சுவாரசியமாக இருக்குமோ என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அதில் எழுபதுகளின் திரைப்படங்களைப் போல அழுது பிழிய வைக்கும் செயற்கையான சோகக்காட்சிகள்!

அதற்குப் பிறகு.. ‘சாரே.. என்டே காதலி உங்களுக்கு மனைவியாயிட்டு வரும். ஆனா உங்க மனைவி எனக்கு காதலியாயிட்டு வராது’ என்கிற மாதிரி இழுவையான, குழப்பமான கிளைமாக்ஸ்.

யமுனாவாக வழக்கமான நயன்தாரா. வயதின் களைப்பு முகத்தில் தெரிகிறது. இன்னொரு நயன்தாராவான ‘பவானி’தான் சிறப்பு. ‘அழகான முகத்தைக் கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவன்தான் சிறந்த நடிகன்’ என்று கமல்ஹாசனைப் பற்றிய ஒரு கருத்தை சொன்னார் சிவாஜி கணேசன். இந்த நோக்கில், நயன்தாராவின் இந்தத் துணிச்சலையும் முயற்சியையும் நிச்சயம் பாராட்டலாம். பவானி என்கிற இந்தப் பாத்திரத்திற்கு தன்னால் இயன்ற நியாயத்தை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் வலுவான காட்சியமைப்புகள் இல்லாததால் அனைத்தும் வீண். போலவே கலையரசனும் தன் பங்கைச் சிறப்பாகத் தர முயன்றிருக்கிறார்.

யோகி பாபுவின் எரிச்சலூட்டும் காமெடி எடுபடவில்லை. தான் உயிராக கருதும் பாட்டியை, யோகிபாபு அத்தனை மலினமாகக் கிண்டலடிப்பதையெல்லாம் நயன்தாரா எளிதாக எடுத்துக்கொள்வது அப்பட்டமான சினிமாத்தனம். குலப்புள்ளி லீலா, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன் போன்ற நடிகர்கள் வந்து போகிறார்கள்.

சுதர்சனின் ஒளிப்பதிவு தரமாக இருக்கிறது. பொள்ளாச்சியின் அழகையும், இருட்டு பங்களாவின் திகிலையும் திறமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். பிளாஷ்பேக் பகுதியை கருப்பு –வெள்ளையிலேயே சித்தரித்த விதம் அழகு.

கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒரு கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக மலர்வார் என்பதை உறுதிப்படுத்தும்விதமாக பாடல்கள் அமைந்திருக்கின்றன. அதிலும் ‘மேகதூதம்’ பாடலின் இனிமையும் வரிகளின் அற்புதமும் அத்தனை அழகு. செண்டை மேளம் மற்றும் வயலின் இசையைக் கலந்து திகிலூட்ட முயன்றிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் பின்னணி இசை ஒலித்துக் கொண்டேயிருப்பது எரிச்சல்.

‘லஷ்மி, மா’ ஆகிய இரண்டு குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம். சர்ஜூன். ‘எச்சரிக்கை, இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்கிற திரில்லர் திரைப்படத்தையும் ஏற்கெனவே இயக்கியிருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில், காட்சிகளை அழகியலுடன் உருவாக்குவதில் இவரது  திறமை பளிச்சிடுகிறது. ஆனால் அழுத்தமான திரைக்கதை, சுவாரசியமான நுண்விவரங்கள், உணர்ச்சிகரமாக கதை சொல்லும் திறமை போன்றவற்றில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்.

‘ரன் லோலா ரன்’ என்கிற ஜெர்மன் திரைப்படத்தின் மையத்தை இதில் இணைத்திருக்கும் விதம் சுவாரசியம். சில விநாடிகளின் தாமதத்தில் பல நிகழ்வுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைத் தர்க்கத்தோடு இணைத்திருக்கிறார். ஆனால் பல காட்சிகள் நம்பகத்தன்மையோடு அமையாததால் திரைப்படத்தோடு ஒன்ற முடியவில்லை.

‘ஐரா’ என்பது ஐராவதம் என்கிற யானையாம். பழிவாங்குதலில் இதன் ஞாபகசக்தி அதிகம் என்றெல்லாம் தலைப்பிற்காக அத்தனை மெனக்கெட்டவர்கள், கதை மற்றும் திரைக்கதைக்காகவும் அப்படியே உழைத்திருக்கலாம். பார்வையாளர்களின் ஞாபகத்திலிருந்து உடனே மறையக்கூடிய திரைப்படமாக ‘ஐரா’ ஆகியிருப்பது துரதிர்ஷ்டம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com