சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ - திரை விமரிசனம்

By சுரேஷ் கண்ணன்| Published: 28th June 2019 10:39 AM

 

‘கன்னித்தீவு’ கதை பற்றி நமக்குத் தெரியும். இளவரசி லைலாவிற்காக மந்திரவாதி மூசாவைத் தேடி தளபதி சிந்துபாத் மேற்கொள்ளும் நீண்ட பயணமும் அதிலுள்ள சாகசங்களும்தான் அந்தக் கதை.

அப்படியொரு கதையை நவீன வடிவில் தந்திருக்கிறார் அருண்குமார். நாளிதழில் வெளிவந்துக் கொண்டிருக்கும் கதை எப்போது முடியும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த திரைப்படமோ ‘எப்போது முடியும்’ என்கிற சலிப்பை உருவாக்குகிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’ என்கிற இயல்பான திரைப்படத்தையும், ‘சேதுபதி’ என்கிற சகித்துக் கொள்ளக்கூடிய மசாலா திரைப்படத்தையும் தந்த இயக்குநர் அருண்குமார், அவ்விரு படங்களையும் கலந்து தரும் விபரீத முயற்சியை இதில் முயன்றிருக்கிறார். ஆனால் கலவை சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்.  

*

தென்காசியில் பிக்பாக்கெட் திருடனாக இருப்பவர் விஜய் சேதுபதி. அவருடைய தம்பி மாதிரி இருப்பவன் சூர்யா. (விஜய்சேதுபதியின் மகன் – இதில் அறிமுகம்). வழக்கமான ஹீரோ போல, கண்ணில் தென்படும் அஞ்சலியைப் பார்த்த கணத்திலிருந்தே காதலிக்கத் துவங்குகிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்குக் காது கேட்பதில் சிறிது குறைபாடு. மற்றவர்கள் ஆட்சேபிக்கும்படி சத்தமாக பேசும் பழக்கம் உள்ளவர் அஞ்சலி. இந்த எதிர்முரண் அவர்களை இணைக்கிறது. திருமணத்தில் சில இடைஞ்சல்கள் ஏற்படுவதால் ‘திடீர்’ திருமணம் செய்கிறார் விஜய் சேதுபதி.

மலேசியாவில் ரப்பர் தோட்டத் தொழிலாளியாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர் அஞ்சலி. கொத்தடிமை மாதிரி அங்கு உழைப்பை உறிஞ்சுகிறார்கள். அவர் விடுமுறையில் தென்காசிக்கு வந்திருக்கும் போதுதான் இந்தக் காதலும் திடீர் திருமணமும் நிகழ்கிறது. “ஊருக்குப் போய் பணத்தை வாங்கி விட்டு திரும்ப வருகிறேன்” என்று மலேசியா செல்கிறார் அஞ்சலி. ஆனால் திரும்பவில்லை. அவர் ஒரு பயங்கரமான சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை விஜய் சேதுபதி அறிகிறார்.

அஞ்சலியை மீட்பதற்காக விஜய் சேதுபதி மேற்கொள்ளும் பயணமும் சாகசங்களும்தான் மீதிப்படம்.

*

விஜய்சேதுபதி வழக்கம் போல் தன் பிரத்யேகப் பாணியில் அநாயசமாக நடித்திருக்கிறார். அனைத்தையும் அலட்சியமாகவும் நக்கலாகவும் அணுகும் பாணி. இது இன்னமும் சலித்துப் போகாததால் மக்கள் ரசிக்கிறார்கள். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி முகத்தை விநோதமான கோணத்தில் வைத்துக் கொண்டு அவர் அஞ்சலியை சைட் அடிப்பது ரசிக்க வைக்கிறது.

விஜய் சேதுபதியின் உடன்பிறவா தம்பி மாதிரியான பாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சூர்யா விஜய் சேதுபதி. முதல் படத்திலேயே ‘பாஸ் மார்க்’ வாங்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தந்தையைப் போலவே இயல்பான நடிப்பு. ‘சினிமாத்தனமான’ முந்திரிக்கொட்டை சிறுவனாக இவர் பாத்திரத்தை சித்தரிக்காததற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சிலபல இடங்களில் என்ன மாதிரியான எதிர்வினையைத் தருவது என்று புரியாமல் இவர் குழம்பி நிற்பது தெரிகிறது.

‘எங்கேயும் எப்போதும்’ திரைப்படத்தில் வரும் துடுக்குத்தனமான இளம்பெண் பாத்திரத்தை இதிலும் தொடர்கிறார் அஞ்சலி. என்றாலும் ரசிக்க முடிகிறது. விஜய் சேதுபதியை முதலில் பிடிக்காமல் துரத்தியடிப்பது, பிறகு காதலில் வீழ்வது, சிக்கலில் மாட்டிக் கொண்ட பிறகு ஏற்படும் பரிதவிப்பு என்று தன் பங்களிப்பைச் சரியாகத் தந்திருக்கிறார்.

விஜய் சேதுபதியும் சூர்யாவும் மாறி மாறி அள்ளி விடும் பொய்களை நம்பி ஏமாறும் அப்பாவி ‘மாமா’ பாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார் ஜார்ஜ் மரியான். அதிலும், ‘என் மூஞ்சைப் பார்த்து ராஜஸ்தான் –ன்னு நம்பினே பாரு” என்று சூர்யா இவரைக் கலாய்ப்பது ரகளையான நகைச்சுவை.

விவேக் பிரசன்னாவின் பாத்திரம் எதற்கென்றே தெரியவில்லை. பட்டுப்புடவையின் சரிகை மாதிரி ஓரமாக வந்து போகிறார். லிங்கா வழக்கமான வில்லத்தனம். புதிதாக ஒன்றுமில்லை.

காஸ்மெட்டிக் உலகின் கள்ளச்சந்தைக்காக மனிதர்களின் தோல் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. படத்தின் இந்த ஆதாரமான விஷயத்தைத் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டுச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். நிலப்பரப்பின் பின்னணி எது என்பது பல சமயங்களில் குழப்புகிறது. தென்தமிழகம் என்று டைட்டில் போடுகிறார்கள். இரண்டாம் பாகத்தில் அது மலேசியாவா, தாய்லாந்தா, கம்போடியாவா என்று தலையைச் சுற்றுகிறது.

இயல்பாகப் பயணிக்கும் முதல் பாதியை ஓரளவிற்குச் சகித்துக் கொள்ள முடிகிறது. ஆனால் நம்பகத்தன்மையும் சுவாரசியமும் அற்ற இரண்டாம் பாதியில் அஞ்சலிக்குப் பதிலாக நாம்தான் சிக்கலில் மாட்டிக் கொண்டோமோ என்று அயர்ச்சி ஏற்படுகிறது.

அந்நிய தேசத்தில் நிகழும் அத்தனை பெரிய மாஃபியா கும்பலை எதிர்த்து தனிநபர் செய்யும் சாகசங்கள் நம்பும்படியாக இல்லை. அதிலும் ஒரு கட்டத்தில் காவல்துறை உதவி செய்வதாகக் கூறும் போது அதையும் மறுத்து விடுகிறார் நாயகன்.

இத்தனை நம்பகத்தன்மையற்ற காட்சிகளுக்கு இடையில் சில இடங்களில் இயல்புத்தன்மை எட்டிப் பார்ப்பது ஆச்சரியம். வில்லனும் அவரது ஆட்களும் துரத்தும் போது மலையுச்சியில் மாட்டிக் கொள்கிறார்கள் விஜய் சேதுபதியும் சூர்யாவும். ‘ஓட முடியலை. சுடப் போறாங்க’ என்று மூச்சு வாங்கச் சொல்கிறான் சூர்யா. அதற்கு மேல் எங்கே ஓடுவது என்கிற களைப்பில் விஜய் சேதுபதி சொல்கிறார். ‘சுட்டா செத்துப் போயிடலாம்டா.. ஓடு’. ஒரு வணிகத் திரைப்படத்தின் சாகச நாயகன், தன் இயலாமையை யதார்த்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் காட்சி அது.

விஜய் சேதுபதியின் காதுகேளாக் குறைபாடே அவருக்குச் சில சமயங்களில் பலமாக இருப்பதை உணர்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த விஷயம் சரியாகப் பதிவாகவில்லை. ஒரு கட்டடத்தின் உச்சியிலிருந்து இன்னொரு கட்டடத்திற்கு சூர்யாவை தாவச் சொல்லும் காட்சியும் விஜய் சேபதி அதற்குத் தரும் பயிற்சியும் அதன் பதைபதைப்பும் நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

**

படத்தின் பலங்களுள் ஒன்று ஒளிப்பதிவு. தென்காசியின் நிதானமான பின்னணியாகட்டும், தாய்லாந்து சாகசங்களின் பரபரப்பாகட்டும், தனது கடுமையான உழைப்பைத் தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் ஒன்றும் தேறவில்லை. ஆனால் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். எடிட்டர் ரூபன் இன்னமும் சீராகச் செயல்பட்டு படத்தை ஒழுங்குப் படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

படத்தின் இறுதி டைட்டிலில் Apocalypto உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்கள். அநாவசியம். அவற்றின் சுவாரசியங்களுக்கும் இதற்கும் தொடர்பேயில்லை.

படத்தில் வரும் கதாபாத்திரத்தின்படி விஜய் சேதுபதிக்குக் காது கேட்பதில் குறைபாடு இருக்கிறது. ஆனால் அவசியமான விஷயங்கள் சரியாகக் கேட்கும். அவர் இந்தத் திரைப்படத்தின் கதையையும் சரியாகக் காது கொடுத்துக் கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. விஜய் சேதுபதியின் திரைப்பட வரிசையில் வைரங்கள் சமயங்களில் தோன்றுகின்றன. ‘சிந்துபாத்’ போன்ற கவரிங் நகைகளும் வருகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Sindhubaadh movie review

More from the section

அக்‌ஷய் குமார் நடித்த மிஷன் மங்கள்: திரை விமரிசனம்
இது ஆணாதிக்க மனோபாவத்துக்கு எதிரான படம்! நேர்கொண்ட பார்வை
அஜித்தின் நேர்கொண்ட பார்வை: திரை விமரிசனம்
தி லயன் கிங் - திரை விமர்சனம்!
விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’: திரை விமரிசனம்