விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’: திரை விமரிசனம்

விக்ரம் பெரும்பான்மையான சமயங்களில் தோற்கும் அணியில் இருக்கும் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார்...
விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’: திரை விமரிசனம்

அபத்தமான தேய்வழக்குகளையும்  எரிச்சலூட்டும் கோணங்கித்தனங்களையும் உதறிவிட்டு ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியில் தமிழ் சினிமா நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளில் உருவாகும் சிறந்த திரைப்படங்களைப் பார்த்து வளரும் இளைய தலைமுறை புதிதான, சுவாரசியமான கதைக்களங்களைத் தேடுகிறது. இந்தச் சூழலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ் செல்வா. இதன் குறியீடாக ‘கடாரம் கொண்டான்’அமைந்திருக்கிறது.

இதற்கான பாதையை ‘குருதிப்புனல்’ போன்ற முந்தைய முயற்சிகளின் மூலம் கமல் ஏற்கெனவே அமைத்திருக்கிறார். ‘தூங்காவனம்’ இதைப் போன்று இன்னொரு முன் முயற்சி. அவரது தயாரிப்பில் ‘கடாரம் கொண்டானாக’ இது தொடர்கிறது.

தூங்காவனத்தைப் (Nuit Blanche) போலவே ‘கடாரம் கொண்டானும்’ ஒரு பிரெஞ்சு திரைப்படத்தின் ரீமேக்தான். A bout portant என்கிற 2010-ல் வெளியான பிரெஞ்சு மொழித் திரைப்படத்தின் மறு ஆக்கம் இது.

ஹாலிவுட்டின் கச்சிதமான பாணியைத் தமிழுக்காகக் கொண்டு வந்ததற்காகப் பாராட்டலாம். அதே சமயத்தில் அது எந்த மொழித் திரைப்படமாக இருந்தாலும் அடிப்படையில் சுவாரசியமாகவும் நம்பகத்தன்மையுடனும் இருக்க வேண்டும். வெறும் ஸ்டைலாகப் படமாக்கப்பட்டால் உபயோகமில்லை.

இந்த நோக்கில் முதல் பாதியில் ஓரளவிற்காவது கவனத்தை தக்க வைக்கும் ‘கடாரம் கொண்டான்’, இரண்டாம் பாதியில் முழுக்கவே பொறுமையைச் சோதிக்கிறது.

*

மலேசியாவில் புதிதாகக் குடியேறும் இளம் மருத்துவராக வாசு (அபி ஹாசன்), தன் காதல் மனைவி ஆதிரா (அக்ஷரா ஹாசன்) கருவுற்றிருப்பதால் மகிழ்ச்சியடைகிறார். தம்பதியினர் தங்களின் குழந்தையைப் பற்றிய கனவுகளில் மூழ்குகிறார்கள்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபர் (விக்ரம்) சாலை விபத்தில் சிக்கி, சுயநினைவை இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் வாசு பணிபுரியும் மருத்துவனையில் அனுமதிக்கப்படுகிறார். சில மர்ம நபர்கள் வாசுவின் கர்ப்பிணி மனைவியைக் கடத்திச் செல்கிறார்கள். ‘மருத்துவமனையில் இருக்கும் அந்த ஆசாமியை வெளியே கொண்டு வா. உன் மனைவியை உயிரோடு விட்டுவிடுகிறோம்’ என்று வாசுவிற்கு மிரட்டல் விடுகிறார்கள். இன்னொரு பக்கம், கேகே என்று பூடகமாக அடையாளம் காணப்படும் அந்த மர்ம ஆசாமியைக் கொல்லவும் சதி நடக்கிறது.

மருத்துவமனையில் இருக்கும் மர்ம ஆசாமி யார், அவரை ஏன் சிலர் விடுவிக்கவும் கொல்லவும் நினைக்கிறார்கள், வாசுவிற்கும் அவனது மனைவிக்கும் என்னவானது என்பதையெல்லாம் பரபரப்பான காட்சிகளின் வழியாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

*
திரைக்கதை எத்தனை சுமாராக இருந்தாலும் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தன்னை வருத்திக் கொள்வதிலும் அதற்காக மெனக்கெடுவதிலும் விக்ரம் நூறு சதவீத உழைப்பைத் தருபவர். இதிலும் அப்படியே. வித்தியாசமான சிகையலங்காரம், பிரம்மாண்டமான உடல் அமைப்பு, முகத்தின் தையல், உடம்பின் டாட்டூக்கள், புகையும் சுருட்டு என்று அசர வைக்கும் தோற்றத்தில் வருகிறார். ஆனால் விக்ரமின் இந்த உழைப்பை இயக்குநர் முழுமையாகவும் சிறப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

வாசுவாக, நாசரின் மகன் அபி ஹாசன். முதல் படம் என்று சொல்லவே முடியாத அளவிற்கு மிக இயல்பாக நடித்திருக்கிறார். துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நடுங்கிக்கொண்டே இவர் விக்ரமை மிரட்டும் காட்சிகளில் தன் அசட்டுத்துணிச்சலையும் இயலாமையையும் நன்றாகப் பிரதிபலித்திருக்கிறார்.

ஆதிராவாக அக்ஷரா. படத்தின் தயாரிப்பு கமல் என்பதால் வலுக்கட்டாயமாக இணைத்தது போல் இருக்கிறது. என்றாலும் கணவனின் மீது மெல்லிய கோபத்தைக் காட்டுவதிலும் கிளைமாக்ஸ் போராட்டத்திலும் நன்கு நடித்திருக்கிறார். கணவன்-மனைவி இருவருக்கும் இடையிலான உறவு நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

கமலின் தயாரிப்பு என்னும் போது அதில் நடிகர்களின் தேர்வு எப்போதுமே சிறப்பாக இருக்கும். இதிலும் அப்படியே. சில நிமிடங்கள் வந்தாலும் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக வருகிறார் மலையாள நடிகை லீனா. வில்லனாக வரும் விகாஸ் தனது தோற்றத்திலேயே மிரட்டுகிறார். ‘டெர்மினேட்டர்’ வில்லனுக்கு பெண் வேடம் அணிந்தது போல் கச்சிதமான உடலமைப்புடன் வரும் இளம் காவல் அதிகாரி வரை பாத்திரங்கள் அத்தனை சிறப்பாக அமைந்திருக்கின்றன.

இந்தத் திரைப்படத்தின் பெரிய பலங்களுள் ஒன்று ஜிப்ரானின் பின்னணி இசை. பாடல்கள் அத்தனை கவராவிட்டாலும் அட்டகாசமான பின்னணி இசையில் அசத்தியிருக்கிறார். அதிலும் விக்ரம் தோன்றும் போதெல்லாம் வரும் ஒரு பிரத்யேகமான இசை தனித்துக் கவர்கிறது. போலவே ஸ்ரீனிவாஸ் ஆர் குப்தாவின் ஒளிப்பதிவில் அசாதாரணமான உழைப்பு தெரிகிறது. துரத்தல் காட்சிகளையெல்லாம் ஹாலிவுட் பாணியில் படம் பிடித்திருக்கிறார்கள். இரண்டே மணி நேரத்தில் முடியும்படியாகச் கச்சிதமாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் கே.எல். ப்ரவீன்.

இந்தத் திரைப்படத்தின் சிறப்பம்சங்களாக சிலவற்றைச் சொல்லலாம். விக்ரமின் பின்னணி பெரும்பாலும் பூடகமாகவே சொல்லப்படுகிறது. ஒருவகையில் இதுவே இந்த திரைக்கதையின் பலமும் பலவீனமும். ஓரிடத்தில் ‘டபுள் ஏஜெண்ட்’ என்கிறார்கள். அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை பார்வையாளர்களின் யூகத்திற்கே விட்டிருப்பதும் ஒருவகை சுவாரசியம்தான். ஆனால் இதற்காகவே சிலர் குழம்பலாம். எந்த நிலையில் நின்று படம் பார்ப்பது என்று தத்தளிக்கலாம்.

இதைப் போலவே விக்ரமின் சாகசத்தையும் மிதமாக அமைத்திருக்கிறார்கள். தடாலடி வேலையெல்லாம் இல்லை. அலட்டிக் கொள்ளாமல் தன் கம்பீரத்தைக் காட்டியிருக்கிறார் விக்ரம்.

சாகசம் செய்யும் பாத்திரத்திற்கும் அவருடன் பயணிக்கும் அப்பாவி பாத்திரத்திற்கும் வலுக்கட்டாயமாக ஒரு சென்ட்டிமென்ட்டை உருவாக்கி விடுவார்கள். இதுதான் பொதுவான வழக்கம். ஆனால் இந்த விஷயம் இந்தத் திரைப்படத்தில் அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது. சிக்கித் தவிக்கும் அப்பாவி இளைஞன் அபி ஹாசனை சில சமயங்களில்  ‘அம்போ’ வென்று விட்டு விட்டுச் சென்று விடுகிறார் விக்ரம்.

காவல்துறையும் மாஃபியாவும் பின்னிப் பிணைந்து யார் எந்த கோஷ்டியில் இருக்கிறார்கள் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் காவல்துறை கெட்டுப் போயிருக்கும் பின்னணியை நன்குச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஆனால், ஓர் இளம் மருத்துவர் இத்தனை சாகசங்களை செய்யத் துணிவாரா என்பது முதல் பல கேள்விகள் துவக்கத்திலேயே தோன்றி விடுவதால் இது தொடர்பான நம்பகத்தன்மையற்ற காட்சிகளை எவ்விதப் பிணைப்புமில்லாமல் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டத்தில் காவல்துறையிடம் தஞ்சம் அடைகிற சூழல் அமைந்தாலும் அதைக் கைவிட்டு அபி ஹாசன் ஓடுவதில் நம்பகத்தன்மையே இல்லை.

அதிலும் கிளைமாக்சில் காட்டப்படும் போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸ் சந்தைக்கடை போலவே இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பிரேமிலும் குறைந்தது பத்து பேராவது இருக்கிறார்கள். ஒரு நெரிசலான ‘பப்’பில் ஏறத்தாழ முழுத் திரைப்படமும் நிகழும் தூங்காவனம் எடுத்த ஹேங்க்ஓவரில் இருந்து ராஜேஷ் செல்வா இன்னமும் வெளியே வரவில்லையோ என்று தோன்றுகிறது.

யார் எதற்காக ஒடுகிறார்கள் என்பது சுருக்கமாகச் சொல்லப்பட்டு விட்டாலும் இவற்றின் பின்னணி தெளிவாகவும் கோர்வையாகவும் இல்லை. திரைக்கதையின் பலவீனம் நம்மை சோர்வுறச் செய்கிறது.

விக்ரம் பெரும்பான்மையான சமயங்களில் தோற்கும் அணியில் இருக்கும் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். இந்தத் துரதிர்ஷ்டம் ‘கடாரம் கொண்டானிலும்’ அவரைத் துரத்துகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com