செழியனின் ‘டு லெட்’ - திரை விமரிசனம்

இந்தத் திரைப்படத்தில் காட்சிகளின் பின்னணிகளில் பல அருமையான நுண்விவரங்கள் பதிவாகியிருக்கின்றன..
செழியனின் ‘டு லெட்’ - திரை விமரிசனம்

எளிய வர்க்கத்தினர், ஒரு பெருநகரத்திற்குள் வாடகைக்காக வீடு தேடுவது என்பது ஏறத்தாழ காட்டிற்குள் வேட்டையாடச் செல்லும் அனுபவத்திற்கு இணையானது. இரை கண்ணில் தென்படாமலேயே சில நாட்கள் கழியக்கூடும். தென்பட்டவுடன் மூச்சிறைக்க ஓடி பல தோல்விகளுக்குப் பிறகு இறுதியாக ஒன்றைத் துரத்திப் பிடித்து அடைவதென்பது அசுர சாதனைதான். ஆனால் இதிலுள்ள வித்தியாசம் என்னவெனில், மான்கள் ஓடி சிங்கத்தை வேட்டையாட முயல்வது போன்ற, கற்பனைக்கும் எட்டாத விசித்திரமான கதையாக அந்த அனுபவம் இருக்கும்.

வாடகை வீட்டின் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டவர்களால்தான் அவற்றின் பிரத்யேகச் சிக்கல்களை அழுத்தமாக உணர முடியும். அப்படியொரு கசப்பான அனுபவத்தை தனது அபாரமான, இயல்பான திரைமொழியின் மூலம் பார்வையாளர்களுக்குக் கச்சிதமாக கடத்தியிருக்கிறது, ‘டு லெட்’ திரைப்படம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உருவாகக்கூடிய அடிப்படையான கனவுகளுள் ஒன்று, ‘எப்பாடு பட்டாவது ஒரு சொந்த வீட்டை அடைய வேண்டும்’ என்பது. ஏறத்தாழ ஒருவரின் முழு ஆயுளையும் பலியாகக் கேட்கக்கூடிய கனவு அது. அப்படி எட்டிய ஒரு கனவு, எப்படி நிராசையாக முடிகிறது என்பதை யதார்த்தமான காட்சிகளுடன் பதிவு செய்தது ‘பாலுமகேந்திரா’வின் வீடு திரைப்படம். வீடு தேடும் படலத்தைத் தொடர்ந்து, தனக்கான சிறு கூட்டை கட்டிப் பார்க்க முயலும் ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளையும் பிரச்னைகளையும் விவரிக்கும் போக்கில் இரண்டாம் அடுக்கிற்கு நகர்ந்தது அந்தத் திரைப்படம். ஆனால் வீடு தேடும் படலத்திலேயே இன்னமும் சொல்லப்பட வேண்டிய எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது ‘டு லெட்’.

மனிதனின் பிரதான கனவுகளுள் ஒன்றான வீடு என்பதை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு மட்டுமான பிரச்னையாகச் சுருக்கிப் பார்க்கமுடியாது. இதுவொரு சர்வதேச பிரச்னை. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தச் சிக்கல்களின் பரிமாணங்கள்  வெவ்வேறு வடிவங்களில் கூர்மையடைந்திருக்கின்றன. எனவேதான் இந்தத் திரைப்படம், சர்வதேசப் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றதோடு தேசிய விருது உள்பட பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் அடைந்திருக்கிறது.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பாலோனோர் தங்களையும் இந்த அனுபவங்களுக்குள்ளாக பொருத்திப் பார்க்க முடியும். இதைத் திரைப்படம் என்பதை விடவும் ஓர் அசலான வாழ்க்கையின் துண்டு எனலாம். நம்மை நாமே திரையில் பார்ப்பதைப் போன்ற மிக மிக இயல்பான காட்சிகள். நாடகத்தனங்களை முற்றிலும் நிராகரிக்கும் திரைக்கதை. ஒரு யதார்த்தமான கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பம். அவர்களின் துயரமான, மகிழ்ச்சியான, உளைச்சலான தருணங்கள் என அனைத்தும் மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்கின்றன.


*

தன்னுடைய சினிமா கனவுகளுடன், உதவி இயக்குநராகப் பணியாற்றும் இளங்கோ (சந்தோஷ் நம்பிராஜன்), அவருடைய மனைவியாக, ஒரு சராசரியான குடும்பத்தலைவியாக அமுதா (ஷீலா ராஜ்குமார்), இவர்களுடைய மகன் சித்தார்த் (தருண்). ஒரு சிறிய, அழகான கூடு இந்தக் குடும்பம். ‘வெளில கூட்டிப் போயிட்டு வந்ததுக்கு தாங்க்ஸ்’ என்று வெட்கப் புன்னகையுடன் மனைவி சொல்லும் நன்றியோடு இவர்களின் ஒரு அன்றாட நாள் முடியப் போகும் தருணம் அது. ஆனால் அந்த இரவு அவர்களுக்கு சந்தோஷமாக முடியவில்லை. “வீட்டைக் காலி செய்யுங்கள்” என்கிற உத்தரவு அதன் வீட்டு உரிமையாளர் பெண்மணியிடமிருந்து (ஆதிரா பாண்டியலஷ்மி) வருகிறது.

இவர்களின் உறக்கமும் நிம்மதியும் கலைகிறது. ஒரு மாதம் கெடு. வீடு தேடுகிறார்கள். தேடுகிறார்கள். தேடிக்கொண்டேயிருக்கிறார்கள். எத்தனை விதமான அனுபவங்கள்! கண்டடைந்தார்களா என்பதை நோக்கி இறுதிப்பகுதி நகர்கிறது.


*

இந்தத் திரைப்படத்தில் காட்சிகளின் பின்னணிகளில் பல அருமையான நுண்விவரங்கள் பதிவாகியிருக்கின்றன. ஆச்சரியம் என்னவெனில், இயக்குநர் எதையும் வலிந்து சொல்வதில்லை. பார்வையாளர்களின் மூளையில் திணிப்பதில்லை. ‘பார்வையாளர்களின் நுண்ணுணர்வையும் புத்திசாலித்தனத்தையும் நம்பும் இயக்குநர்’ என்பதே அத்தனை மகிழ்ச்சியானதாக இருக்கிறது. வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கலப்பு திருமணம், அவை சார்ந்த சிக்கல்கள், வீட்டு உரிமையாளருடன் இருக்கின்ற முன் உரசல்கள், கசப்புகள் என்று எதுவுமே நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. காட்சிகள் நகர்கிற போக்கில் நாமாகப் பலவற்றை உணர முடிகிறது. போலவே எவ்வித இரக்கத்தையும் பரிதாபத்தையும் பார்வையாளர்களிடமிருந்து இந்தத் திரைப்படம் கோருவதில்லை என்பது முக்கியமான விஷயம்.

இதன் சிறப்பான அம்சங்களுள் ஒன்று, ஒளிப்பதிவு. எவ்விதச் சமரசங்களும் இல்லாமல் இயற்கை ஒளியிலேயே முழு சினிமாவையும் செழியன் பதிவு செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அத்தனை அபாரமான காட்சிகள்! ஒண்டுக்குடித்தன வீடுகளின் கும்மிருட்டுச் சந்துகள், வெளிச்சமும் காற்றும் போதாத புழுக்கமான அறைகள், பாழடைந்த சமையல் அறை, மின்தடை ஏற்பட்ட இரவின் மெழுகுவர்த்தி வெளிச்சம் என்று ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டின் பின்னணியை அசலாகப் பதிவு செய்திருக்கிறார்.

பின்னணி இசை பயன்படுத்தப்படாத இரண்டாவது தமிழ்த் திரைப்படம் இது. (முதலாவது ‘நடுநிசி நாய்கள்’). இதன் திரைக்கதைக்கு அது தேவைப்படவில்லை என்று உணர்ந்திருக்கிற இயக்குநரின் நம்பிக்கை ஆச்சரியப்படுத்துகிறது. இயற்கையான சப்தங்களே பின்னணி இசையாக துணை நிற்கின்றன. அடக்கமான ஒலியுடன் ரீங்காரமிடும் ரேடியோ, அதிலிருந்து வழிந்து கொண்டேயிருக்கும் எம்.எஸ்.வி, இளையராஜா பாடல்கள், மின்விசிறி மெல்ல சுழலும் ஓசை, திடுக்கிட வைக்கும் அழைப்பு மணியின் சத்தம் என்று இந்தத் திரைப்படத்தின் அபாரமான விஷயங்களுள் ஒன்றாக ஒலிப்பதிவைச் சொல்லலாம். காதருகே கொசு பறந்து போகும் ஒலி கூட மிகத் துல்லியமாகப் பதிவாகியிருந்தது.

சந்தோஷும் ஷீலாவும் இணைந்து இந்தத் திரைப்படத்தை பிரமாதமாக்கியிருக்கிறார்கள். ஓர் இளம் தம்பதியினருக்கான கூடலும் ஊடலும் மிக இயல்பாகப் பதிவாகியிருக்கின்றன. நான்காம் வகுப்பு படிக்கும் மகனின் எதிர்காலத்தைப் பற்றி பேசும் காட்சியில் ஓர் இயல்பான குடும்பத்தலைவியின் சித்திரத்தை ஷீலா கொண்டுவந்து விடுகிறார். பொறுக்க முடியாததொரு கணத்தில் வீட்டு ஓனரம்மாவை எதிர்த்துப் பேசும் காட்சியில் ஒரு சராசரி ஆணின் மனோபாவம் சந்தோஷின் வழியாக வந்து விழுகிறது. புதுமுகங்களைப் பிரதான பாத்திரங்களாக உலவ விட்டிருப்பது இந்தத் திரைப்படத்தின் பலங்களுள் ஒன்று.

பொதுவாக இந்திய சினிமாக்களில் குழந்தை நடிகர்கள் பொருத்தமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. வயதுக்கு மீறிய பேச்சு, மிகையான உடல்மொழி, துறுதுறுவென சுற்றுவது போன்றவையே குழந்தைகளுக்கான சிறந்த நடிப்பாகக் கருதப்படுகிறது. மிக அரிதாகவே இயல்பான குழந்தைகள் சினிமாவில் வருகிறார்கள். தருண் அப்படியொரு சிறுவன். காரில் பயணிக்கும் ஒரு பணக்காரச் சிறுமியின் முக சேஷ்டைகளைக் கண்டு மென் கோபத்துடன் தன் முகத்தை திருப்பிக் கொள்வதும், பிறகு குழந்தைகளுக்கே இருக்கக்கூடிய களங்கமின்மையுடன் அவளைத் திரும்பிப் பார்த்துச் சிரிப்பதும் என... அந்த ஒரு காட்சியே போதும், குழந்தை நடிகர்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று பாடம் கற்பிக்கிறார் இயக்குநர்.

பெரியவர்களின் உலகத்தின் நிகழும் சிக்கல்கள், ஓர் இளம் மனதை எவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என்பதை மிக நுட்பமான காட்சிகள் விவரிக்கின்றன. தான் வரைந்த வீட்டின் ஓவியத்தில் TOLET என்கிற வார்த்தையைப் புதிதாகச் சேர்க்கிறான் சிறுவன். ‘வாங்க.. சார்... இதுதான் கிச்சன் பாருங்க…’ என்று அவனுடைய விளையாட்டில் கூட வீடு தேடும் படலத்தின் துயரங்கள் தன்னிச்சையாகப் படர்கின்றன. சுவற்றில் தான் வரைந்த படங்களையும் ஆசையாக ஒட்டிய ஸ்டிக்கர்களையும் அந்தக் குழந்தையே பிய்த்தெடுப்பதான சூழல் எத்தனை பெரிய கொடுமை! அந்தச் சுவர் ஓவியங்களை வீடியோவில் பதிவு செய்து கொள்ளும் தந்தைமையின் பேரன்பு நெகிழ வைக்கிறது.

வீட்டுக்காரம்மாவாக நடித்திருக்கும் ஆதிராவின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் அதில் சற்று நாடகத்தனம் ஊடுருவியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அவரின் அடக்கமான கணவராக எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான ரவி சுப்பிரமணியன், வெறுமனே சில காட்சிகளில் வந்து போகிறார். ஆனால் அவற்றிலும் என்னவொரு இயல்பு! என்னவொரு நேர்த்தி! இயக்குநரை மறுபடி மறுபடி வியக்கத் தோன்றுகிறது. வீடு தேடிப் பிடித்து தருபவராக வரும் அருள் எழிலன். சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் மிக இயல்பான, லாகவமான நடிப்பைத் தந்திருக்கிறார். சாதிய மனங்கள் எத்தனை வலுவானவை என்பது அந்தக் காட்சியின் உரையாடலில் போகிற போக்கில் அழுத்தமாகக் காட்டப்படுகிறது.

ஒரு காட்சி. ‘இவங்க காலி பண்ணிட்டப்புறம் நீங்க வரலாம்” என்கிறார்கள் ஒரு வீட்டில். இளங்கோவும் அமுதாவும் ஜன்னலின் வழியாக எட்டிப் பார்க்கிறார்கள். ஒரு முதிய தம்பதி. வயதான கணவருக்கு மனைவி உணவு ஊட்டிக்கொண்டிருக்கிறார். இவர்களின் அப்போதைய தலை போகிற பிரச்னையே ஒரு வீட்டைப் பிடிப்பதுதான். ஆனால் இதைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் நகர்ந்து விடுகிறார்கள். இப்படிச் சீட்டுக்கட்டுகள் மாதிரி பல நுட்பமான காட்சிகளை அழுத்தமும் திணிப்பும் தராமல் இயல்பாக உலவ வைத்திருக்கிறார் செழியன்.

இருட்டின் நடுவே மெழுகுவர்த்தியின் வெளிச்சம் போல, மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை என்கிற நேர்மறையான விஷயமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘எதுனா பிரச்சினைன்னா கேளுங்க இளங்கோ’ என்று காசோலையைக் கிழித்துத் தந்த படி சொல்லும் விளம்பரப்பட இயக்குநர் (எம்.கே.மணி) ‘நடிக்கறவங்க கிட்ட நாட்டையே ஒப்படைக்கறாங்க.. ஆனா சினிமாக்காரனுக்கு வீடு கிடைக்காது” என்கிற பகடியுடன் அவ்வப்போது ஆறுதலான வார்த்தைகளைப் பகிரும் தோழர் என்று சில பாத்திரங்கள் நம்பிக்கை வெளிச்சத்தை உருவாக்குகின்றன.

ஐ.டி துறையில் ஏற்படும் திடீர் வீக்கம், எப்படி எளிய வர்க்கத்து மனிதர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கிறது என்கிற நில அரசியலும் இந்தத் திரைப்படத்தில் உறுத்தாதவாறு இணைக்கப்பட்டிருக்கிறது. உணவுப்பழக்கம் கூட ஒரு வீடு வாடகைக்கு கிடைப்பதற்குத் தடையாக இருக்கும் என்கிற அவல நகைச்சுவையும் பதிவாகியிருக்கிறது.

கணிசமான வாடகையைத் தருவதற்குத் தயாராக இருந்தாலும் இஸ்லாமிய சமூகத்தினருக்கு வீடு கிடைப்பதில் உள்ள சிக்கல், எடிட் செய்யப்பட்ட ஒரு வார்த்தையில் பளிச்சென விளங்குகிறது. இதைப் போலவே திருநங்கைகள் உள்ளிட்ட விளிம்புநிலை சமூகத்தினர், மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பம், செல்லப் பிராணிகளை வளர்ப்போர் போன்றவர்களுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இந்த விஷயங்கள் இந்த திரைப்படத்தில் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும் நூற்கண்டின் சிக்கல்கள் போல நாமாகப் பலவற்றை உணர்ந்து கொள்வதற்கான நுனிகளை இந்தத் திரைப்படம் அடையாளம் காட்டுகிறது.

பின்னணி இசை இல்லாத சிறப்பு அம்சத்தைப் போன்று, ஒன்றரை மணி நேரத்திலேயே இந்த திரைப்படம் முடிந்து விடுவதும் நன்று. வீடு தேடுவது என்கிற மையத்தைத் தாண்டி அநாவசியமான காட்சிகள், திணிப்புகள் என்று எதுவுமில்லை.

ஆனால் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. ஏன் இந்தத் திரைப்படம் இத்தனை இறுக்கமானதாக, பதற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்பது புரியவில்லை. வாடகைக்கு வீடு தேடுவது என்பது ஒரு சராசரி நபரின் லெளகீக வாழ்வின் பல சிக்கல்களுள் ஒன்று. அதை இன்னமும் இயல்பான காட்சிகளின் பின்னணியில் சொல்லியிருக்கலாம். இளம் தம்பதியினரின் மெல்லிய கொண்டாட்டங்களும் ஆங்காங்கே இருக்கிறதுதான். ஆனால் பதற்றமும் இறுக்கமும் ஒரு பெரிய போர்வையைப் போல இந்த திரைப்படத்தைச் சூழ்ந்து கொண்டு அநாவசியமான துயர பிம்பத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு காட்சி. புதிய குடித்தனக்காரர்கள் வந்து பார்க்கவேண்டும் என்பதற்காக இளங்கோவின் வீட்டுச்சாவியை, வீட்டின் சொந்தக்கார அம்மணி வாங்கி வைத்துக் கொள்கிறார். ஆனால் அமுதா தன் மகனுடன் வீடு திரும்பும்போது வீட்டம்மணி குடும்பத்துடன் வெளியே போயிருக்கிறார். எனவே தன் வீட்டின் வெளியே பரிதாபமாக அமர்ந்திருக்கிறார் அமுதா. வீட்டு உரிமையாளர் ஆட்டோவில் திரும்புகிறார். அவர்களின் வீட்டுப் பெண் இவர்களிடம் வந்து மெளனமாக சாவியைத் தந்துவிட்டுச் செல்கிறார். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாவது ஏன் எவருமே எந்தவொரு ஆறுதல் வார்த்தையும் சொல்வதில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. ஏன் அப்படியொரு இறுக்கம்?

போலவே இறுதிக்காட்சியில், ஒரு திடுக்கிடும் தகவலை இளங்கோ சொல்லும் போது, ஏன் அமுதா நாடகத்தனமாக உறைந்த நிலையில் இருக்கிறார் என்பதும் புரியவில்லை. வீட்டின் உரிமையாளர்கள், வீடு பார்க்க வருபவர்கள் உள்ளே வரும் போது, குடியிருப்பவர்கள் ஏதோ தவறு செய்து விட்டதைப் போன்று கூனிக்குறுகி நிற்க வேண்டிய அவசியமும் இல்லை. இவையெல்லாம் புறந்தள்ளக்கூடிய மெல்லிய பிசிறுகளாகத் தெரிந்தாலும், இவற்றையும் கடந்திருந்தால் ‘டு லெட்’ அதன் முழுமையை நோக்கி நகர்ந்திருக்கிருக்கும் என்று தோன்றுகிறது. அதேபோல, பொருத்தமானது தான் என்றாலும், ஆங்கிலத் தலைப்பை தவிர்த்திருக்கலாமோ?

*

வாடகை வீட்டில் இருப்பவர்கள், வீடு தேடி அலைந்தவர்கள், அப்படி அலைந்து அரும்பாடு பட்டு சொந்த வீட்டை அடைந்தவர்கள் என்று பலரும் தங்களின் துயரங்களை மீள்நினைவு செய்து கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்தத் திரைப்படம் அமைந்திருக்கிறது. ஆனால் முன்னர் வாடகை வீட்டின் சிரமங்களை அனுபவித்தவர்கள், வீட்டின் உரிமையாளர்களாக மாறிய பிறகு, அதற்கான முகமூடிகளை அணிந்து கொள்வது விசித்திரமான முரண்.

வெகுஜனத் திரைப்படங்களின் சம்பிரதாயங்கள், அதன் கோணங்கித்தனங்கள், வணிகச் சமரசங்கள் என்று எதுவும் இல்லாமல் ஓர் அற்புதமான சினிமாவை உருவாக்கியிருக்கும் செழியனை எத்தனை பாராட்டினாலும் தகும். அவரே இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருப்பதால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் இது போன்ற திரைப்படங்களின் வரவேற்பும், அங்கீகாரமும் பல புதிய இயக்குநர்களுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை தரும். அதன் முன்னோடிகளில் ஒருவராக மாறியிருக்கும் செழியனுக்குப் பாராட்டு.

தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ‘டு லெட்’ ஒரு மகத்தான அனுபவத்தைத் தந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com