பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்

‘ஆஹா.. ஓஹோ..’ என்று எதிர்பார்க்கப்பட்ட ‘சாஹோ’வில் வெற்று பிரம்மாண்டத்தைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை என்பதுதான் உண்மை... 
பிரபாஸின் சாஹோ: திரை விமரிசனம்

பிராந்திய, தேச எல்லையைத் தாண்டி சர்வதேச சந்தையைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இன்னொரு பிரம்மாண்ட திரைப்படம் இது. ஆனால், ஒரு மோசமான வீடியோ கேமின் இடையே சிக்கிக் கொண்ட உணர்வைத் தரும் இந்தத் திரைப்படத்தை 350 கோடியில் உருவான குப்பை எனலாம்.

பணத்தை வாரி இறைப்பதினால் மட்டுமே ஒரு நல்ல திரைப்படம் உருவாகி விடாது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும்தான் எந்நாளும் ராஜா என்கிற அதிமுக்கியமான விஷயத்தை இந்த மோசமான ஆக்கமும் உறுதி செய்கிறது.

‘பாகுபலி’யின் அட்டகாசமான வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. ஆனால் அத்தனையையும் ஒரே அடியால் கீழே வீழ்த்தி விட்டார் இயக்குநர் சுஜீத். இந்த வகையில் ஹீரோவை விட இவரே பலசாலி எனலாம்.

ஷங்கர், ராஜ்மெளலி போன்றவர்கள் எத்தனை புத்திசாலிகள் என்பதையும் இந்தத் திரைப்படம் மெய்ப்பிக்கிறது.

*

சர்வதேச அளவில் இயங்கும் ஒரு மாஃபியா குழுவின் தலைவர் ராய் (ஜாக்கி ஷெஃராப்). பாதுகாப்பு கருதி தன் தொழிலைச் சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்காக இந்தியா வருகிறார். அமைச்சரை மிரட்டிக் கையெழுத்து வாங்குகிறார். ஆனால் ஒரு கார் விபத்தின் வழியாகக் கொல்லப்படுகிறார்.

ராயின் தலைமைப்பதவியில் அமர இதர கேங்க்ஸ்டர்கள் இடையே அதிகாரப் போட்டி நடக்கிறது. ராயின் மகன் (அருண்குமார்) வாரிசாக நுழைய இந்த மோதல் இன்னமும் சூடு பிடிக்கிறது. கொள்ளையர்களின் பெரும் நிதி ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் சிக்கிக் கொள்கிறது. அதை வெளியே எடுக்க ‘பிளாக் பாக்ஸ்’ வேண்டும். அதைக் கைப்பற்றுவதற்கான சதித்திட்டங்களும் நடக்கின்றன.

இன்னொரு புறம் வேறொரு விஷயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டத்தின் வழியாக மும்பையில் பெருங்கொள்ளை ஒன்று நிகழ்கிறது. இதைக் கண்டுபிடிப்பதற்காக அண்டர்கவர் காவல்துறை அதிகாரியான அசோக் (பிரபாஸ்) நியமிக்கப்படுகிறார்.

இந்தப் பாதைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து பயணிப்பதே இதன் திரைக்கதை. இதில் அசலான காவல்அதிகாரி , திருடன், வாரிசு யார் என்பதையும் இடையே கலந்து கட்டி அடிக்கிறார்கள். வாய்ப்பாடு ஒப்பிக்கும் சிறுவன் போல கடகடவென்று ‘வாய்ஸ் ஓவரில்’ ஆரம்பிக்கும் துவக்கம் முதற்கொண்டு படம் நெடுக என்ன நடக்கிறதென்றே பெரும்பாலும் புரியவில்லை.

பண்டிகை சமயத்தில் தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் முட்டி வலியுடன் மாட்டிக் கொண்ட அவஸ்தை. அத்தனை பாத்திரங்கள். அத்தனை நெரிசல்.

*

நல்ல உயரமும் திடகாத்திரமுமாக இருக்கிறார் பிரபாஸ். இவர் ஐந்து பேரை அடித்துத் துவம்சம் செய்கிறார் என்றால் கூட நம்பலாம். ஆனால் குக்கரில் ஐந்து விசில் வருவதற்குள் ஐநூறு கிங்கிரர்களை அநாவசியமாக அடித்து வீழ்த்துவதெல்லாம் காதில் பூச்சுற்றல். சாகசமெல்லாம் சரி. ஆனால் பிரபாஸின் முகத்தில் நடிப்பு என்பது பெரும்பாலும் வராமல் பிடிவாதம் பிடிக்கிறது.

ஹிந்தி வடிவமும் இருக்கிறது என்கிற காரணத்தினால் ஷ்ரத்தா கபூரை நாயகியாகப் போட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆந்திராவின் கோங்குரா சட்டினியையும் ரசகுல்லாவையும் ஒன்றாகக் கலந்தது போல் நாயகன் – நாயகி சேர்க்கை ஒட்டவேயில்லை.

நீல் நிதின் முகேஷ், சங்க்கி பாண்டே, முரளி சர்மா, மந்திரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், டினு ஆனந்த், வெண்ணிலா கிஷோர் என்று இந்திய மேப்பில் தற்செயலாக கை வைத்து தேர்ந்தெடுத்தது போல ஏராளமான பாத்திரங்கள். ஆனால் ஒருவரும் மனத்தில் நிற்கவில்லை. அட்டகாசமான தோற்றத்தில் வரும் அருண் விஜய்யும் காவல்துறை அதிகாரியாக வரும் பிரகாஷ் பெலவாடியும் மட்டுமே சற்று தனித்துத் தெரிகிறார்கள்.

ஒவ்வொரு பிரேமிலும் ஆடம்பரம் தெறிக்கிறது. விலையுயர்ந்த ஆடைகள், குளிர்க்கண்ணாடிகள், கச்சிதமாக இருக்கும் சிக்கன உடை வசீகர அழகிகள், வாயில் புகையும் சுருட்டு, அந்தரத்தில் பறந்து சிதறும் கார்கள், அட்டகாசமான செட்கள் (சாபு சிரிலுக்கு ஒரு சபாஷ்) என்று எல்லாவற்றிலும் பணக்காரத்தனம். சாகசக் காட்சிகள் முதற்கொண்டு பல இடங்களில் நுட்பம் ஏராளமாக இறைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், ஆடம்பரமான உணவில் உப்பு இல்லாதது போல சுவாரசியமான திரைக்கதை என்கிற ஆதாரமான வஸ்து இதில் இல்லாததால் அனைத்துமே வீண்.

ஹாலிவுட் முதற்கொண்டு உலகெங்கும் தயாரிக்கப்படும் சாகசத் திரைப்படங்களைக் கவனித்தால் கதை என்பது ஒரு துளியாக இருக்கும். உதாரணத்திற்கு, கடத்தப்பட்ட தன் மகளை மீட்கப் புறப்படும் ராணுவ அதிகாரி என்பது போல. ஆனால் அதைப் பரபரப்பான திரைக்கதையின் மூலம் வளர்த்தெடுப்பார்கள். நாயகன் மீளவே முடியாதோ என்கிற அளவில் சிக்கல்கள், சவால்கள், திகைப்புகள் அவற்றில் அமைந்திருக்கும். நாயகன்தான் இறுதியில் வெல்வான் என்பது நமக்குத் தெரிந்தாலும் அந்த நேரத்தின் சூழ்நிலையில் நாமும் ஆட்படுவோம். பாத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்ச்சிகரமான பிணைப்பையும் இதில் உருவாக்கி விடுவார்கள். அவன் வெற்றி பெற வேண்டுமே என்று பார்வையாளர்களின் மனதில் ஒரு தவிப்பும் ஆவலும் உருவாகி விடும்.

இந்த அடிப்படையான விஷயங்கள் அனைத்துமே இந்தத் திரைப்படத்தில் இல்லை. யாருக்கோ, என்னவோ நடக்கிறது என்பது போல் ஒட்ட முடியாமல் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது.  மழை போல் பொழியும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இடையில் நாயகன் ரொமான்ஸ் செய்யும்போது கொலைவெறி ஏறுகிறது.

பாடல்கள் ஒன்றும் தேறவில்லை. அசந்தர்ப்பமான இடங்களில் வந்து கடுப்பேற்றுகிறது. ஆறுதலாக பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியிருக்கிறார்.

ஒரு காட்சியில் பாராசூட்டைத் தூக்கிக் கடாசி விட்டு ஆபத்தான முறையில் பள்ளத்தாக்கை நோக்கிப் பாய்கிறார் நாயகன். ஏறத்தாழ தற்கொலை முயற்சிக்கு நிகரான சாகசம். எனக்கென்னமோ அந்த இடத்தில் தயாரிப்பாளர்தான் நினைவிற்கு வந்தார். நாயகன் மீண்டு விடுகிறான். ஆனால் தயாரிப்பாளரின் நிலைமைதான் என்னவாகுமோ?

‘ஆஹா.. ஓஹோ..’ என்று எதிர்பார்க்கப்பட்ட ‘சாஹோ’வில் வெற்று பிரம்மாண்டத்தைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை என்பதுதான் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com