லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் தரத்தை தீவிரமாக மெறுகேற்றி வருகிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க | முற்றிலும் பொய்யானது: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!
இதற்கிடையே, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.
அதிக டிக்கெட் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுபாடுகளை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு அரசியல் அழுத்தமோ அல்லது வேறு எந்த காரணமும் இல்லை என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.