பிரபல கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் நடித்த ‘போட்டா போட்டி’ படத்தினை இயக்கியவர் யுவராஜ் தயாளன். பின்னர் வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி மக்களிடையே கவனம் பெற்ற யுவ்ராஜ் தயாளன் இறுகப்பற்று படத்தினை இயக்கியுள்ளார்.
நடிகர்கள் விக்ரம் பிரபு, மாநகரம் புகழ் ஸ்ரீ, விதார்த் ஆகியோர் நாயகர்களாகவும் நடிகைகள் ஷரத்தா ஸ்ரீநாத், அபர்ணா நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த 3 ஜோடிகளின் காதல் கதையை படமாக எடுத்துள்ளார் இயக்குநர் யுவராஜ் தயாளன்.
எஸ் ஆர்பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு, பி கோபிநாத், தங்கபிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தினை பொடென்சியல் ஸ்டூடியோஸ் எல்எல்பி வழங்குகிறது. இந்தப்படத்திற்கு ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்கள் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: விஜய்யின் அரசியல் வருகை... ரத்தான லியோ இசைவெளியீட்டு விழா.. என்ன நடக்கிறது?
இப்படத்தின் ப்ரோமோ விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை எதிர்படுத்திய நிலையில், தற்போது டிரைலர் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் யுவராஜ் தயாளன், “எலி படத்தின் பத்திரிகையாளர் திரையிடலின்போது பிரசாத் ஸ்டூடியோக்கு வெளியே நின்றிருந்தேன். அப்படம் முடிந்ததும் வடிவேலு அண்ணனுடன் மேடைக்குச் சென்றேன். படம் எப்படியிருக்கிறது என பத்திரிகையாளர்களிடம் கேட்டேன். யாரும் ஒன்றும் சொல்லாமல் இருந்தனர். அந்த அரங்கம் முழுவதும் மயான அமைதியாக இருந்தது. பரதேசி, பருத்திவீரன், அஞ்சாதே ஆகிய படங்களின் திரையிடலின்போதும் இதே அமைதியை பார்த்திருந்தேன். ஒரு படம் முடிந்தும் பார்வையாளர்களை அமைதியாக இருக்க வைத்தால் ஒன்று அது உலகின் சிறந்த படமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் மோசமானதாக இருக்க வேண்டும். எலி படத்திற்காக கிடைத்த அமைதி தோல்விக்கானது. அன்று நிலவிய அமைதியை நினைத்து என் நிம்மதியை இழந்தேன். உங்களின் (பத்திரிகையாளர்கள்) 3 மணி நேரத்தை வீணாக்கிவிட்டேன் என நினைத்து சினிமாவை விட்டு வெளியேறி 8 ஆண்டுகளை இழந்தேன். எப்படியாவது நல்ல படத்தை எடுத்து விட வேண்டும் என நினைத்துதான் இறுகப்பற்று படத்தை எடுத்திருக்கிறேன்.” என உருக்கமாகக் கூறினார்.