சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற வில்லன் பாத்திரத்தில் நடிக்கவுள்ள நபர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். முன்பு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த நிலையில், இந்தவாரம் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
ஆணாதிக்கம் நிறைந்த வீட்டில் மருமகள்களாக வருபவர்கள் மூலம் பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கும் தொடராக எதிர்நீச்சல் ஒளிபரப்பாகி வருகிறது.
படிக்க | புதிய ஆதி குணசேகரன் அறிமுகம்! எதிர்நீச்சல் ப்ரோமோ விடியோ!!
எதிர்நீச்சல் தொடரில் பல்வேறு பாத்திரங்கள் மக்கள் மனங்களை வென்றுள்ளன. குறிப்பாக ஆதி குணசேகரன் பாத்திரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
நக்கல் நிறைந்த வில்லனாக ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்துவந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த பாத்திரத்தில் வேறு யார் நடிப்பார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்தது.
ஆதி குணசேகரன் பாத்திரம் பலரைக் கவர்ந்ததால், அந்த பாத்திரத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் பலவாறு பகிரப்பட்டன.
ஆதி குணசேகரனாக நடிப்பதாக வேல ராமமூர்த்தி, நடிகர் பசுபதி, இளவரசு, பூவிலங்கு மோகன் உள்ளிட்டோரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.
படிக்க | எதிர்நீச்சல் ஒளிபரப்பு நேரம் மாற்றம்! பிக் பாஸ் -7 காரணமா?
இந்நிலையில் சமீபத்தில் எதிர்நீச்சல் தொடருக்கான முன்னோட்ட (ப்ரோமோ) விடியோ வெளியானது. அதில் புதிய குணசேகரன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவருக்கான அறிமுகமான வெளியான அந்த விடியோவில் காரிலிருந்து இறங்குவது, கம்பீரமாக நடப்பது என காட்டப்படுகிறது. ஆனால், குணசேகரனாக வருவது யார் என்று காட்டவில்லை. இதனால், எதிர்நீச்சல் தொடரின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.
சின்னத்திரை வரலாற்றில் முதல்முறையாக ஒரு வில்லனுக்கு இவ்வளவு எதிர்பார்ப்பு தூண்டியது எதிர்நீச்சல் தொடர்தான் எனப் பலர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
சின்னத்திரையில் நடிகரைக் காட்டாமல், அதிக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது எதிர்நீச்சல்தான் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். எந்த அளவுக்கு எதிர்நீச்சல் தொடர் மக்களால் விரும்பப்படுகிறது என்பதை இதன்மூலம் காணலாம்.
புதிய ஆதி குணசேகரனாக நடிப்பது யார் என்பது இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிஸோடுகளில் தெரியவரும். முன்னோட்ட விடியோவைப் பார்த்தால், வேல ராமமூர்த்தி நடித்திருப்பதாகத் தெரிகிறது.
வேல ராமமூர்த்தியால் எதிர்நீச்சல் டிஆர்பி மேலும் கூடுமா? குறையுமா என்பதை அடுத்தடுத்த வாரங்கள் தெரியப்படுத்தும்.