லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்துகளைக் கூறியிருந்தார். இதையடுத்து நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் அவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மன்சூர் அலிகான், “த்ரிஷா குறித்து எந்தத் தவறான கருத்தையும் நான் சொல்லவில்லை. அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். உண்மையில் அவரைப் பாராட்டிதான் பேசினேன். அதற்காக அவர் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்ட கூடிய ஆள் இல்லை. எரிமலை குமுறினால் சுற்றியிருப்பவர்கள் தெரித்து ஓடுவார்கள். வேண்டுமென்றே இந்தப் பிரச்னையை நடிகர் சங்கத்தினர் பெரிதுபடுத்தி என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். அந்த விடியோவில் நான் பேசியது குறித்து என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை விட்டுள்ளனர். அவர்கள் செய்தது மிகப்பெரிய தவறு. அந்த அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியும். அவர்கள் என் பக்கம் நிற்பார்கள்” எனக் கூறியுள்ளார்.
மேலும், இச்சந்திப்பில் த்ரிஷா குறித்த சில கேள்விகளுக்கு ஆவேசமாகவும் மன்சூர் பேசியுள்ளார்.
இதையும் படிக்க | வசூலில் அசத்தும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!
லியோ திரைப்படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என மன்சூர் வருந்தியதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.