செய்திகள்

காதலின் பேரலை! ஏழு கடல் தாண்டி - திரை விமர்சனம்

18th Nov 2023 11:09 PM | சிவசங்கர்

ADVERTISEMENT

 

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ படத்தின் இரண்டாம் பாகமான  சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் பி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் நாயகன் மனு (ரக்‌ஷித் ஷெட்டி) தன் காதலியின் எதிர்கால வாழ்க்கைக்காக செய்யாத குற்றத்தை பணத்திற்காக ஒப்புக்கொண்டு சிறை செல்கிறார். அங்கு, தான் ஏமாற்றப்பட்டோம் என வருந்தும் மனுவைக் காதலியான பிரியா சந்தித்து ஆறுதல் கூறி, எப்படியாவது மனுவை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர போராடுகிறார். ஆனால், 10 ஆண்டுகள் தண்டனையைப் பெற்ற மனு ஒருகட்டத்தில் நம்மால் இங்கிருந்து செல்ல முடியாது என்பதை உணர்ந்து, தன் காதலியின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரை உதாசீனம் செய்யத் தொடங்குகிறார்.

இருவரது காதலிலும் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்கும் வலியைக் கூறும் கதையில் கிளைமேக்ஸில் பிரியா வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். இந்த வேதனையில் இருக்கும் மனுவும் சிறையில் அடிதடியில் ஈடுபடுவதுடன் முதல் பாகத்தை முடிந்திருந்தனர். கன்னடத்தில்,  ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ என்கிற பெயரில் உருவான இப்படம் அமேசான் பிரைம் தளத்தில் பிற மொழிகளில் வெளியான பிறகு  தென்னிந்திய ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ADVERTISEMENT

தற்போது, தமிழில் ஏழு கடல் தாண்டி எனப் பெயரிட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகமான சைட் - பி வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: வெளியானது சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’ டிரைலர்!

இந்தப் பாகத்தில், பத்து ஆண்டுகளைச் சிறையில் கழித்து புதிய வாழ்க்கையை அமைக்க வெளியே வரும் மனுவுக்கு முன்னாள் காதலியின் நினைவுகள் வலியைக் கொடுக்கிறது. ஒருகட்டத்தில், பிரியா என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்கிற தவிப்பில் அவளைத் தேடி செல்லும் மனு, அவள் வாழ்வில் சிரமப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து வேதனையில் அலைக்கழிகிறான். இதனால், அவளுக்குத் தெரியாமல் அவளைக் கண்காணிக்கும் மனு, பிரியாவின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக மறைமுகமாக உதவிகளைச் செய்யத் துவங்குகிறான். இத்தனை ஆண்டுகள் கழித்து தன் காதலியைப் பார்க்க வந்த மனு அவளை நேரில் சந்திக்கிறானா? தன் முன்னாள் காதலனை பிரியா நினைத்துக் கொண்டிருக்கிறாளா? என்கிற கேள்விகளை முன்வைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர். 

சாதாரண காதல் கதைதான் என்றாலும் இரண்டு பாகமாக எடுக்கும் அளவிற்கு தைரியமாகக் கதையில் மிகுந்த கவனத்தைச் செலுத்திருக்கிறார் இயக்குநர் ஹேமந்த் ராவ். இருவர் காதலிக்கிறார்கள், பிரிகிறார்கள், கடந்து செல்கிறார்கள் என்பதே காதல் தோல்விப் படங்களுக்கான முடிவு. ஆனால், கடந்து சென்ற நினைவுகளைக் கைவிடாத நாயகன், அதேநேரம் பிரியாவை மறக்க பாலியல் தொழிலாளியான சுரபியிடம் (சைத்ரா) சென்று அவள் மேல் அன்பு செலுத்தும் மனு என தூய காதலுக்கும் எதார்த்துக்குமான இடைவெளியைக் கச்சிதமாக எழுதியிருக்கிறார்கள். தன் முன்னாள் காதலியிடம் செல்லக் கூடிய தொலைவில் நாயகன் இருந்தாலும் ஒரு வார்த்தையைக் கூட பகிராமல் இழப்பின் தவிப்பை உணரச் செய்திருக்கிறார்.

முன்னாள் காதலியை நாயகன் மறக்கப் போராடுவதும் சுரபியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இரண்டிற்கும் இடையேயான தடுமாற்றங்களைச் சந்திப்பதுமாக சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் ரக்‌ஷித் ஷெட்டி. முதல் பாகத்தில் அழகான காதலான வருபவர், இரண்டாம் பாகத்தில் சிறையில் வாடி கடந்த காலத்தைத் தேடி வருபவராக அட்டகாசமாக திரையில் ஒன்றியிருக்கிறார்.

பிரியாவாக நடித்த ருக்மணி வசந்த், இனி தமிழ், தெலுங்கு படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார். அந்த அளவிற்குக் காதலியாகவும் மனைவியாகவும் இரண்டு தோற்றங்களுக்கும் சரியான கதாபாத்திரத் தேர்வாக மிளிர்கிறார். அதிக வசனங்கள் இல்லையென்றாலும் முக பாவனைகளில் வெறுமையுடன் அவர் அன்றாடத்தைக் கடத்துவது பார்வையாளருக்குக் கதையின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சுரபியாக நடித்த சைத்ராவும் தேர்ந்த நடிகையாக வருவார்.

இதையும் படிக்க: சப்த சாகரதாச்சே எல்லோ: ரசிகர்களின் ஆதரவில் கூடுதல் காட்சிகள் !

வில்லனாக நடித்த ரமேஷ் இந்திரா, மனுவின் நண்பராக நடித்த கோபால் கிருஷ்ணா தேஷ்பாண்டே ஆகியோர் நல்ல தேர்வு. இருவரின் கதாபாத்திரத்தையும் நன்றாக எழுதியிருக்கிறார்கள்.

சரண் ராஜின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. கன்னட மூலத்தில் பிரபலமடைந்த பாடல்களும் காட்சிகளுடன் தமிழ் வரிகளில் கேட்க மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. ஆர்ப்பாட்டமில்லாத ஒளிப்பதிவு, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிக்கான எடிட்டிங் போன்ற பணிகளும் பக்கபலமாக அமைந்துள்ளன.

முதல் பாகத்தில்  அடுத்தடுத்த காட்சிகளுக்கான பரபரப்பு இருந்தது. ஆனால், சைட் - பி இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் வலுவை இழப்பதும், முடிவை ஊகிக்கக் கூடிய வகையில் இருப்பதிலும் இயக்குநர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. 

காதலில் வென்றவர்கள், அதை இழந்தவர்கள், முன்னாள் காதலின் நினைவில் வாடுபவர்கள் என அனைவர் வாழ்க்கையையும் தொட்டுச் செல்கிறது இந்த ஏழு கடல்!

ADVERTISEMENT
ADVERTISEMENT