செய்திகள்

விஜய்க்கு வாய்ப்பளிக்க பாரதிராஜா மறுத்துவிட்டார்: எஸ்.ஏ.சந்திரசேகர்

8th May 2023 12:05 PM

ADVERTISEMENT

 

பாரதிராஜா உள்பட பல முன்னணி இயக்குநர்கள், ஆரம்பகாலத்தில் விஜய்க்கு நடிக்க வாய்ப்பளிக்கவில்லை என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'கருமேகங்கள் கலைகின்றன' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ், லோகேஷ் கணகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர்,

இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு முதல்முதலில் வந்த போது, பாரதிராஜாவிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். ஆனால், அவர் ‘நாம் நண்பராக இருக்கலாம்’ எனக் கூறிவிட்டார். அதன்பிறகு இயக்குநராக மாறி பல திரைப்படங்களை எடுத்தேன்.

பிறகு, விஜய்யை வைத்து படம் எடுக்க நினைத்தபோது, விஜய்யின் ஆல்பத்தோடு சென்று பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார். 'நீயே பெரிய இயக்குநர்' என்று சொல்லிவிட்டார்.

இதையும் படிக்க | லால் சலாம் படத்தில் ரஜினியின் தோற்றம்: புதிய போஸ்டர் வெளியானது

நான் பாரதிராஜாவிடம் 'நான் உங்களிடம் உதவி இயக்குநராக வேண்டும்' என்றும், 'விஜய்யை உங்கள் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும்' என்றும் இரண்டு விஷயங்களை கேட்டிருக்கிறேன். இரண்டுமே கிடைக்கவில்லை.

ஆனால், தங்கர்பச்சான் எங்கள் இருவரையும் சேர்ந்து நடிக்க வைத்துவிட்டார். இதேபோன்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் விஜய்யை வைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் அப்போது விஜய்யை வைத்து படம் எடுக்கவில்லை.

ஆரம்ப காலத்தில் நல்ல இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. அதுவும் நல்லதுக்குதான். விஜய் என் கையில் வந்ததால்தான் கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார். அதனால் தான் கடவுள் அப்படி செய்து இருப்பார் என்றார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த வெளிப்படையான பேச்சு, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT