செய்திகள்

இயக்குநர் மனோபாலா மறைவு: சினிமா பிரபலங்கள் இரங்கல்!

3rd May 2023 02:07 PM

ADVERTISEMENT

இயக்குநர் மனோபாலா மறைவுக்கு சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

பிரபல திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 69. மனோபாலா கல்லீரல் பிரச்னை காரணமாக 15 நாள்களக சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சென்னையில் உள்ள வீட்டில் அவர் காலமானார்.

மனோபாலா இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆகாய கங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். மேலும் ஊர்க்காவலன், சிறைப்பறவை, பிள்ளை நிலா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். பிதாமகன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, தனுஷின் மாப்பிள்ளை போன்ற படங்களில் நகைச்சுவையில் கலக்கி இருப்பார்.

ADVERTISEMENT

மனோபாலா இதுவரை 40 திரைப்படம், 16 தொலைக்காட்சித் தொடர், 3 தொலைக்காட்சி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்.

 தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர்  மனோபாலா.

இயக்குநர் மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கொளதம் கார்த்திக், வெங்கட் பிரபு, பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள், அரசியர் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "என் மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் எங்கள் தமிழ் திரை உலகிற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT