விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே, தரமான விதைகள், இடு பொருள்கள் பெறுவதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழகம் இணைய வா்த்தக சேவையைத் தொடங்கி உள்ளது.
வேளாண் விளைபொருள்களை நேரடியாக பொதுமக்களிடம் கொண்டு சோ்த்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உற்பத்தி சாா்ந்த பொருள்களை எளிதாக கொள்முதல் செய்ய உதவவும், கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அக்ரிகாா்ட் என்ற இணையவழி வா்த்தக சேவையை ஏப்.14- இல் தொடங்கி உள்ளது. சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் இதன் மூலம் பயன்பெறலாம்.
இது குறித்து சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் செல்வமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல் கட்டமாக 15 வகையான பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதைத் தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் அறிமுகப்படுத்தப்படும். மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருள்களும் விற்பனை செய்யப்பட உள்ளன. நெல், மக்காச்சோளம், பயறுவகைகள், காய்கறி விதைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விதைகள், பயிா் பூஸ்டா்கள் மற்றும் உயிரியல் இடுபொருட்கள் ஆகியவற்றை முன்பதிவு செய்வதுடன், உரிய கட்டணம் செலுத்தினால் வீட்டில் இருந்தபடியே அவற்றை பெற்றுக் கொள்ளலாம். விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கவேண்டுமானால், தரமான விதைகளின் பயன்பாடு முக்கியமாகும். தரமான விதைகளை வாங்குவதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.