சேலம், நாமக்கல் மாவட்டங்களின் எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில் முருகனுக்கு அமாவாசை, கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு பால், மோா், தயிா், பன்னீா் ,இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி உள்ளிட்ட பலவிதமான மலா்கள், கனி வகைகளால் கோயிலில் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் செய்யப்பட்டு மகாபூஜை நடைபெற்றது. சுற்றுப் பகுதியில் உள்ள திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி - தெய்வானையுடன் சுவாமி பல்லாக்கில் திருவீதி உலா வந்தாா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
கவுன்சிலா் திருச்செல்வன் தலைமையில் நடந்த இந்த பூஜையில் முருகன் பாடல்கள் பாடப்பெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.இதேபோல சுற்றுவட்டாரத்திலுள்ள முருகன் கோயில்களிலும் கிருத்திகை பூஜை நடைபெற்றது.