செய்திகள்

மனிதத்தை உயர்த்திப் பிடிக்கும் அயோத்தி: திரை விமர்சனம்

கி.ராம்குமார்

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வெளியாகும் திரைப்படம் அயோத்தி. 

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சசிகுமாருடன் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட்,ப்ரீத்தி அஸ்ரானி, அஞ்சு அஸ்ரானி மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

அயோத்தி என்றதும் என்னென்ன நினைவுக்கு வரக் கூடுமோ அவற்றையொட்டியே, ஆனால், மாறாக, அற்புதமான கதையொன்றைக் கட்டியெழுப்பியிருக்கிறார்கள்.

அயோத்தியிலிருந்து ஒரு தீவிரமான ஹிந்து குடும்பம் ராமேஸ்வரத்திற்கு தீபாவளிக்குப் புனித யாத்திரைக்கு வருகின்றனர். வந்த இடத்தில் ஏற்படும் திடீர் விபத்தில் குடும்பத்தில் ஒருவர் இறக்கிறார். ஊர்பேர் தெரியாத இடத்தில் தவிக்கும் அவர்கள் இறந்த சடலத்துடன் எப்படி மீண்டும் அயோத்திக்குச் சென்றனர் என்பதுதான் திரைப்படத்தின் கதை.

இயக்குநர் சசிகுமார் இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் திரைப்படமாக வந்திருக்கிறது அயோத்தி.

மனித வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பல்வேறு வேறுபாடுகள், கட்டுப்பாடுகள், சடங்கு சம்பிரதாயங்கள் என அனைத்தையும் கடந்து மனிதமும் விழுமியங்களும் எந்தளவு முக்கியமானவை என்பதைப் பேசியிருக்கிறது இத்திரைப்படம்.

விபத்தில் சிக்கிக் கொண்ட தனது நண்பனுக்கு உதவ வரும் வழக்கமான அதே கதாபாத்திரம்தான் என்றாலும் தனது அற்புதமான நடிப்பால் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறார் சசிகுமார். உதவச் சென்று தவிப்பதாகட்டும், சிக்கலில் சிக்கிக் கொள்வதாகட்டும், இறுதிவரை உடன் நிற்பதாகட்டும் அனைத்து இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பிரச்னையிலிருந்து வெளியேறிய பிறகும் மீண்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக வந்து நிற்கும் இடங்களிலெல்லாம் பாராட்டைப் பெறுகிறார். அரசு அலுவலகங்கள், காவல்நிலையம், விமான நிலையம் என மனிதர் ஓடும் இடங்களிலெல்லாம் நாமும் உடன் ஓடுவது போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது. 

கொஞ்சம் பிசகினாலும் சீரியல் வடிவத்திற்கு மாறிவிடும் திரைக்கதையை மிகச்  சரியாக கையாண்டிருக்கிறார் இயக்குநர். முதல் திரைப்படம் என்றாலும் கதாபாத்திரங்களை அவற்றின் முக்கியத்துவத்துடன் பயன்படுத்தியது, நேர்த்தியான கதை சொல்லல் முறை என இயக்குநர் வென்றிருக்கிறார். தமிழ் சினிமாவின் மனிதத்தை பேசும் திரைப்படங்களின் வரிசையில் அயோத்தி கட்டாயம் இடம்பெறும். 

சசிகுமாருக்கு எந்தளவு காட்சிகள் வந்திருக்கின்றனவோ அதேஅளவு திரையை கைப்பற்றியிருக்கின்றன மற்ற கதாபாத்திரங்கள். நாயகியாக வரும் ப்ரீத்திக்கு இது தமிழில் முதல்படம். ஆனால் அதனை நம்ப முடியாத வகையில் தன்னை நடிப்பில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். குடும்பத்திற்குள் தனது தந்தையிடம் அஞ்சி நிற்பதிலிருந்து, ஒருகட்டத்தில் அவரிடம் வெடித்து சிதறுவது வரை சிறப்பாக நடித்துள்ளார் ப்ரீத்தி. குறிப்பாக மருத்துவமனையில் தனது குடும்பத்திற்கு உதவக் கோரி சசிகுமாரிடம் கெஞ்சும் இடங்களில் ஒட்டுமொத்த திரைக்கதையையும் சுமக்கிறார்.

தமிழ் சினிமா இவரை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாயகியின் தந்தையாக வரும் யாஷ்பால் சர்மா தீவிர மதப் பற்றாளர் என்ற கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு. படத்தில் கதாபாத்திர மனமாற்றம் உண்டென்றால் அது இவருக்கு மட்டும்தான். அதனை புரிந்து சரியாக செய்திருக்கிறார். மனைவியைக் கொடுமைப்படுத்தும் இடம் தொடங்கி அவருக்காக உடைந்து அழுவது வரை யாஷ்பால் சர்மா மிரட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் நமக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்துவதில் அடங்கியிருக்கிறது அவரது நடிப்புத்திறன். 

இவர்கள் தவிர நடிகர்கள் புகழ், போஸ் வெங்கட் என பலர் நடித்துள்ளனர்.நடிகர் புகழுக்கு காமெடி செய்வதற்கான வாய்ப்பு குறைவு. எனினும் சில இடங்களில் துருத்தல் இல்லாமல் செய்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் தொழில்நுட்பம். ஆம்புலன்ஸ் நகர நகர அந்த சடலத்துடன் நம்மை அழைத்துக் கொண்டு போகிறது மாதேஸ் மாணிக்கத்தின் கேமரா. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பல இடங்களில் கண்களில் கண்ணீரைக் கொண்டு வருவதற்கு உதவியிருக்கிறது ரகுநந்தனின் இசை. உண்டியல் உடைபடும் இடம், விமான நிலையத்தின் இறுதிக் காட்சிகள் ஆகிய இடங்களில் அழுகை நிச்சயம். 

மதத்தைக் கடந்து மனிதர்கள் ஏன் முக்கியமானவர்கள்? ஒரு சிறு உதவி ஒருவருக்கு எந்தளவு வாழ்நாள் நன்றியாக மாறும்? ஒருவருக்கொருவர் உதவ முன்வருவது சமூகத்தில் எத்தகைய மாற்றத்தைக் உண்டாக்கும் என்பதையெல்லாம் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது திரைக்கதை. அதேசமயம் அரசு அமைப்புமுறை எந்தளவு விதிகளின் பெயரால் எளியவர்களை துரத்துகிறது என்பதையும் படம் பேசியிருக்கிறது. இறுதிக் காட்சியில் நாயகி நாயகனுக்கு காதலைத் தெரிவித்திருந்தால் இது வழக்கமான படமாகியிருக்கும். அதிலும்கூட இயக்குநர் கவனம் செலுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. 

படத்தில் சில நம்ப முடியாத காட்சிகள் இருக்கின்றன. லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. அவை படத்தை பாதிக்கவில்லை. காவல்நிலையத்தில் வரும் பாடலைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல் சசிகுமாரின் பிளாஸ்பேக் காட்சிகளும் திரைக்கதைக்கு அவசியப்பட்டதாகத் தெரியவில்லை. எனினும் இந்தக் குறைகள் படத்தின் கருவை கடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தாமல் இருப்பதால் அயோத்தி சிறப்பாக வந்திருக்கிறது. 

மனிதம்தான் முக்கியம். நாம் கட்டிவைத்திருக்கும் விதிகளும், மதங்களும் அதனைத் தொக்கிக் கொண்டு வரும் அனைத்தும் அதற்குப் பிறகுதான் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்துச் சொல்லியிருக்கிறது அயோத்தி.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT