செய்திகள்

நாட்டைக் காக்க வரும் 'பதான்', ரசிகர்களை காப்பாற்றுவாரா? - திரை விமர்சனம்

கௌதம்


சமகாலத்துக்கேற்ப புதிய அச்சுறுத்தல்களிடமிருந்து நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இன்றைய ஆக்ஷன் காட்சிகளின் உதவியுடன் நாட்டைக் காப்பாற்றும் ஒரு வாய்ப்பு விஜயகாந்த் மற்றும் அர்ஜுனுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?

நாட்டுக்காகத் தீயாய் பணியாற்றிய ஒரு ராணுவ வீரரை, இக்கட்டான சூழ்நிலையில் நாடு கைவிடுகிறது. இதில் ஏமாற்றமடைந்த அந்த ராணுவ வீரர், நாட்டை அழிக்க நினைக்கிறார். இவர்தான் ஜிம் (ஜான் ஆபிரஹாம்).

நாட்டுக்காகத் தீயாய் பணியாற்றிய ஒரு உளவாளி, பாதுகாப்புத் துறையிலேயே 'ஜோக்கர்' (JOCR) எனும் புதிய பிரிவு உருவாவதற்கான காரணியாக இருக்கிறார். இவரும் இந்தப் பிரிவும் ஜிம்மின் சதித் திட்டத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். இதுதான் பதான் (ஷாருக்கான்).

ஜிம் மற்றும் பதான் இடையிலான போர்தான் பதான் திரைப்படத்தின் கதை.

படத்தில் ஷாருக்கான் சண்டைக் காட்சிகளில் மிரட்டுகிறார். 57 வயது என்றால் நம்ப முடியாத அளவுக்கு உடற்தகுதியை சரியாகக் கட்டமைத்து, முழு உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பெரும்பாலான சண்டைகள் கிராஃபிக்ஸாக இருந்தாலும், காட்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். லேசான நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் அவர் ஆங்காங்கே மிளிர்கிறார்.

கதையில் சில திருப்புமுனைகளுக்குக் காரணமாகத் திகழும் ருபெய் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் தீபிகா படுகோன். இவரும் ஷாருக்கானுடன் கைகோர்த்து ஆக்ஷனில் மாஸ் காட்டியிருக்கிறார். பாடல் காட்சியில் தீபிகா படுகோனின் ஆடை ஒன்று வடஇந்தியாவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. படத்துக்கு எதிராகப் போராட்டம் அறிவிக்கும் அளவுக்கு பூதாகரமானது அந்தக் காட்சி. ஆனால், அது நீக்கப்படவில்லை.

வில்லன் கதாபாத்திரத்துக்கு ஜாம் ஆபிரஹாம் சரியானத் தேர்வாகத் தெரிகிறார். அவரும் உடல் கட்டமைப்பில் ஷாருக்கானுக்குப் போட்டியாக இருக்கிறார். அவரால் முடிந்தளவுக்கு கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ராணுவம், உளவுப் பிரிவு குறித்த படங்களைத் தொடர்ச்சியாக எடுத்து வருபவர். இவற்றை ஒரு கதை உலகமாகவே உருவாக்கியிருக்கும் அவர், டைகர் படத்தையும் இதில் இணைத்துள்ளார். இதுதான் சல்மான் கானின் (டைகர்) சிறப்புத் தோற்றம். படம் முடியும்போது, அடுத்த மிஷனில், நாட்டைக் காக்க பதான் (ஷாருக்கான்), டைகர் (சல்மான் கான்) என அனைவரும் இணைய வேண்டும் என வசனம் வருகிறது. ஒருவேளை இருக்குமோ.. 

இந்த முயற்சிக்காக இயக்குநருக்குப் பாராட்டுகள்.

ராணுவ வீரர்கள் எதையும் எதிர்பாராமல் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்வதைப் பெருமையாக உணர்வார்கள் என்பதை உணர்த்தும் காட்சிகள் உள்ளன. ஷாருக்கான் இறுதியில் பேசும் பஞ்ச் வசனமும் இதுதான். இதுவே இயக்குநரின் நோக்கமாகவும் உள்ளது. அந்த நோக்கம் சரியாகக் கடத்தப்பட்டதில் இயக்குநர் வென்றிருக்கிறார்.  

திரைக்கதையைப் பொருத்தவரை, பெரும்பாலும் சண்டைகளே நிரம்பியுள்ளன. ஆக்ஷன் கமர்ஷியல் படங்களில் 'லாஜிக்' எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காக இப்படி எடுக்கக் கூடாது என்கிற உணர்வைப் பதான் தருகிறது.

ஜிம் கதாபாத்திரத்தின் பலத்தை, அவரது சூழ்ச்சிகள் மற்றும் திட்டங்களில் காண்பிக்கப்பட்டிருந்தால், பதான் கதாபாத்திரமும் தன்னைப்போல, மாஸாக உருவெடுத்திருக்கும். ஆனால், வெறுமன துப்பாக்கியில் ஸ்டன்ட் காண்பிப்பதும், ஹெலிகாப்டர், ஜெட்டில் பறப்பதும் விறுவிறுப்பு உணர்வைத் தந்திராது. அதேசமயம், பெரும்பாலான காட்சிகள் கிராஃபிக்ஸாகவே இருப்பதால், சற்று அந்நியமாகவும் உள்ளது.

மெனக்கெடல் இல்லாமல், இவர் வில்லன், இவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்கிற அளவுக்கு வில்லன் கதாபாத்திரம் உள்ளது. இவர் ஹீரோ. அதனால், வில்லன் என்ன செய்தாலும் அதை முறியடித்துவிட முடியும் என்பதுபோலவே ஹீரோ கதாபாத்திரமும் எழுதப்பட்டிருக்கிறது.

தீபிகா படுகோனும், ஒரு நிலைப்பாட்டிலிருந்து திடீரென அந்தர் பல்டி அடிக்கிறார். 'ஹே எப்புட்றா..?' இதற்கான காரணத்துக்காகவாவது மெனக்கெட்டிருக்கலாம்.

பிறகு, பொதுமனநிலை உணர்வைப் பூர்த்தி செய்யும் வகையில் பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீர், சட்டப்பிரிவு 370 நீக்கம் உள்ளிட்டவை படங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது பெரும் வரலாற்றைக் கொண்ட முக்கியமான உரிமைப் பிரச்னை. கமர்ஷியல் கற்பனைக்காக, அதைப் பயன்படுத்தியிருக்க வேண்டுமா என்கிற எண்ணம் எழாமல் இல்லை. 

பின்னணி இசை பெரிதும் குறை சொல்லக்கூடிய அளவுக்கு இல்லையென்றாலும், ஷாருக்கான், ஜான் ஆபிரஹாம் மற்றும் தீபிகா படுகோன் காட்சிகளுக்கு இன்னும் நிறைய ஸ்கோர்களை கொடுத்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

திரைக்கதை விறுவிறுப்புக்கும், கதாபாத்திரத்துக்கும் மெனக்கெடல்கள் இல்லாமல், மேம்போக்காக ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் மட்டும் நிரம்பியிருந்தாலேபோதும், அதுவே நல்ல திரை அனுபவத்தைத் தரும் என்று நினைப்பவராக இருந்தால், இந்தப் படம் உங்களுக்கானது. நிச்சயம் திரையரங்குகளில் முயற்சி செய்து பார்க்கலாம். பதான் நாட்டுடன் சேர்ந்து உங்களையும் நிச்சயம் காப்பாற்றுவார். இதுபோதாது என்றால், பதான் நாட்டை மட்டுமே காப்பாற்றுவார். நீங்கள் கைவிடப்படுவீர்கள்.

படம் முடிந்தவுடன் ஷாருக்கான், சல்மான் கான் இடையிலான சிறிய உரையாடல் காட்சி ஒன்று உள்ளது. அதைத் தவறவிட வேண்டாம். உதட்டோர சிரிப்புக்கு நாங்கள் கேரண்டி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT