செய்திகள்

ஆர்ஆர்ஆர் படத்தை இருமுறை பார்த்து பாராட்டிய ஜேம்ஸ் கேம்ரூன்!

16th Jan 2023 11:13 AM

ADVERTISEMENT

 


ஆர்ஆர்ஆர் படத்தை உலகப் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் இருமுறை பார்த்து பாராட்டியதாக அப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

தி டெர்மினேட்டர், ட்ரூ லைஸ், டைட்டானில், அவதார், அவதார் 2 போன்ற உலகளவில் வசூலைக் குவித்த படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேம்ரூன். கடந்த வருடம் வெளியான தெலுங்குப் படமான ஆர்ஆர்ஆர்-ஐ ஜேம்ஸ் கேம்ரூன் இருமுறைப் பார்த்து பாராட்டியுள்ளார். இத்தகவலை ட்விட்டரில் தெரிவித்து இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி கூறியதாவது:

ஆர்ஆர்ஆர் படத்தை ஜேம்ஸ் கேம்ரூன் பார்த்துவிட்டார். அவருக்குப் படம் மிகவும் பிடித்ததால் தனது மனைவி சூசியைப் பார்க்கப் பரிந்துரைத்து அவருடனும் இணைந்து மீண்டும் படத்தைப் பார்த்தார். 

ADVERTISEMENT

எங்களுடன் 10 நிமிடங்கள் செலவழித்து எங்கள் படத்தை நீங்கள் அலசியதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை சார். நீங்கள் சொன்னது போல, நான் எல்லையில்லா மகிழ்ச்சியில் உள்ளேன். இருவருக்கும் மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்கிற படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்தது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்தார்கள். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள். ஆர்ஆர்ஆர் படம் 2022 மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. ஆர்ஆர்ஆர் 2-ம் பாகத்தின் கதையைத் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி செய்தார் இயக்குநர் ராஜமெளலி. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT