செய்திகள்

துணிவு வெறும் ஆக்ஷன் படம் மட்டும்தானா..? - திரை விமர்சனம்

11th Jan 2023 08:26 PM | சுவாமிநாதன்

ADVERTISEMENT


வங்கியில் கடன் வாங்கியிருக்கிறீர்களா..? கிரெடிட் கார்ட் பயன்படுத்துகிறீர்களா..? மாதந்தோறும் இஎம்ஐ கட்டுகிறீர்களா..? அப்படியென்றால், அஜித்தை வைத்து உங்களுடன் உரையாட முயற்சித்திருக்கிறார் ஹெச். வினோத்.

யுவர் வங்கி எனும் தனியார் வங்கியைக் கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. ஆனால், ஏற்கெனவே வங்கியினுள் உள்ள அஜித்குமார், அவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தன்னுடைய கொள்ளை திட்டத்தை செயல்படுத்தச் சொல்லி மிரட்டுகிறார்.

முதலில் கொள்ளையடிக்க வந்த கும்பலின் நோக்கம் என்ன, அந்தத் திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் உள்ளிட்டவற்றை வெளிக்கொண்டு வரும் அஜித், இறுதியில் வங்கியைக் கொள்ளையடித்தாரா, இல்லையா? அவர் கொள்ளையடிப்பதற்கான பின்னணி என்ன? என்பதுதான் துணிவு படத்தின் கதை.

வங்கியைக் கொள்ளையடிக்க வந்த கும்பலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த விதத்திலிருந்து மாஸ் காட்டத் தொடங்கிய அஜித், இறுதிவரை மாஸ்தான். 

ADVERTISEMENT

பொதுவாக தொடக்கத்தில் காவல் துறையைவிட கொள்ளைக் கும்பல் புத்திசாலியாகவே காண்பிக்கப்படும். இதிலும் அப்படிதான். ஆனால், இந்த வெற்றிக் காட்சிகளில் எல்லாம், அஜித் ஆடும் நடனம் தியேட்டரில் விசிலைத் தெறிக்க வைக்கிறது. வெறுமன நடனம் என்பதைக் காட்டிலும், இந்த நடனத்துக்கு இயக்குநர் வினோத் ஒரு காரணத்தை உருவாக்கியிருக்கிறார். அதுதான் அஜித்தின் நடனத்துக்குப் பலம் சேர்க்கிறது.

இதையும் படிக்க | குடும்பங்களை ஈர்க்கிறதா வாரிசு - திரை விமர்சனம்

இந்தப் பக்கம் மஞ்சு வாரியர். வினோத்தின் முந்தைய படமான வலிமையில் ஹீமா குரேஷிக்கு எப்படி மாஸான காட்சிகள் இருந்ததோ, இந்தப் படத்தில் அப்படிதான் மஞ்சு வாரியருக்கு. மஞ்சு வாரியர் கதாபாத்திரத்துக்கு கூடுதல் இடமே படத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மஞ்சு வாரியரும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப மாஸ் காட்டியிருக்கிறார். 

துணிவில் பட்டிமன்றப் பேச்சாளர் மோகனசுந்தரம் இருப்பதாக, படக் குழு அறிவித்தபோது, சமூக ஊடகங்களில் லேசான கலாய்ப்பு தென்பட்டது. ஆனால், இந்த கதாபாத்திரம் பல இடங்களில் சிரிப்பலையை உண்டாக்குகிறது. மோகனசுந்தரம் நியாயம் கற்பித்திருக்கிறார். காவல் ஆணையராக வரும் சமுத்திரகனியும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

வழக்கம்போல், வினோத்தின் இந்தப் படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் அற்புதமாக வந்துள்ளன. வினோத்துக்கு நிரவ் ஷா பக்கபலமாக இருந்துள்ளார் என்பது படத்தின் தரத்தில் தெரிகிறது.

வாரிசு உடன் வந்ததால், வெளியீட்டுக்கு முன்பு ஒப்பீட்டளவில் துணிவு பாடல்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால், படத்தில் ஜிப்ரான் பின்னணி இசை மூலம் மிரட்டியிருக்கிறார். மாஸ் என்பதற்காக அதீத சப்தமுமாக இல்லாமல், காட்சிக்கேற்ப பின்னணியில் பலம் சேர்த்திருக்கிறார்.

முதல் பாதி, இரண்டாம் பாதி என படம் தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவே நகருகிறது.

அஜித் கொள்ளை முயற்சிக்குப் பின் உள்ள பிளாஷ் பேக் கதை தொய்வில்லாமல் இருந்தாலும், சற்று கூடுதல் சிறப்பாக எடுத்திருக்கலாமோ என்கிற எண்ணத்தை எழுப்புகிறது. க்ளைமாக்ஸ் இறுதிக் காட்சிகளில் வழக்கமான கமர்ஷியல் படங்களில் எழும் லாஜிக் கேள்விகள் எழுகின்றன.

மொத்தத்தில்.. நீண்ட நாள்களாக இப்படியொரு அஜித்தைதானே தேடிக்கொண்டிருந்தோம் என்பதற்கு ஏற்ப, இதில் அஜித்தை மிகச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் வினோத். 

படம் எப்படியென்றால்.. வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள் என்கிற செய்தி நம்மை உலுக்கியிருக்கும் அல்லவா. அப்படியொரு செய்தி ஹெச். வினோத்தை பாதித்து, அந்த பாதிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு முழு நீள ஆக்ஷன் கமர்ஷியல் படமாக துணிவு வந்துள்ளது. இதில் வினோத்தின் சமூகப் பார்வையும் உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT