செய்திகள்

விஜய் பட பூஜையில் கார்த்திக் சுப்புராஜ்: காரணம் என்ன?

1st Feb 2023 07:33 PM

ADVERTISEMENT

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையும் திரைப்படத்தின் பட பூஜையில் பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். 

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் விஜய் 67. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன்  தொடங்கியது. இதில் படத்தின் நடிகர்கள், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரவிக்குமார். புஷ்கர் காயத்ரி என பலர் கலந்து கொண்டுள்ளனர். 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பலரும் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய்யின் அடுத்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவாரா என்கிற  கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் நல்ல நட்புடன் உள்ள கார்த்திக் சுப்புராஜ் அவரின் கதை உருவாக்கத்தில் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார். ஒவ்வொரு கதையையும் எழுதிய பிறகு கார்த்திக் சுப்புராஜிடம் வழங்கி அவரின் கருத்தை அறிந்து கொள்வது இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வழக்கம். அதிலிருந்து தனது கதையில் அவர் திருத்தங்கள் மேற்கொள்வார் என சினிமா துறையினர் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

விக்ரம் திரைப்படத்தில்கூட நடிகர் கமல்ஹாசனுக்கு அறிமுக பாடல் வைத்ததும் கார்த்திக் சுப்புராஜின் யோசனை எனக் கூறப்படுகிறது. ஆழ்வார்பேட்டை ஆண்டவா பாணியில் இந்தப் பாடலை உருவாக்கலாம் என்ற கார்த்திக் சுப்புராஜின் யோசனையை லோகேஷ் கனகராஜ் ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தியதாக சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளன. 

எனினும் நட்பின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டதாகவும், விஜய்யுடன் அவர் இணைவது குறித்த எந்த முடிவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT