செய்திகள்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா பொன்னியின் செல்வன்? திரை விமர்சனம்

30th Sep 2022 09:30 AM | கி.ராம்குமார், சுவாமிநாதன்

ADVERTISEMENT

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கிறது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான நாவலாக அறியப்படும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் திரைப்படமாக்க நடைபெற்று வந்த முயற்சிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் விதமாக இந்தத் திரைப்படம் அமைந்திருப்பதாகப் படக் குழுவினர் தெரிவித்து வந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பொன்னியின் செல்வன் நிறைவேற்றியதா?

இதையும் படிக்க | ‘ரொம்ப பயமா இருக்கு...’ பொன்னியின் செல்வன் குறித்து நடிகர் விக்ரம்

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, வந்தியத் தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டையராக சரத் குமார் என பலர் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

தங்களது மன்னர்களைக் கொன்றதால் சோழர்களைப் பழிவாங்கத் துடிக்கும் பாண்டியர்கள் ஒருபுறம், அதிகாரப் போட்டியின் காரணமாக தங்களுக்குள் மோதிக் கொள்ளும் சோழ வம்சம் மறுபுறம் என நகர்வதே இத்திரைப்படம். மன்னர்கள் காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த நிலப் பரப்பை காட்சியாகக் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன். 

ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது சந்திக்கும் பல சிக்கல்களை பொன்னியின் செல்வன் திரைப்படமும் சந்தித்துள்ளது. நாவலுக்கென்று இல்லாத வர்ணனைக் கட்டுப்பாடு காட்சி மொழிக்குப் பொருந்தாததால் முக்கியமான காட்சிகளை சொல்லியே ஆக வேண்டும் எனும் கட்டாயம் இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கிறது. அவை சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதா என்கிற கேள்வி திரைப்படத்தைப் பார்க்கும்போது எழுகிறது.

இதையும் படிக்க | எனக்குப் பொறாமையாக இருக்கிறது: நடிகை மீனா

பல தரப்பட்ட கதாபாத்திரங்கள் கொண்ட கதைக்களத்தில் யார் யாருக்கு என்னென்ன பாத்திரம்? எதற்காகக் குறிப்பிட்ட கதாபாத்திரம் இப்படி நடந்து கொள்கிறது? இதற்கும் அந்த கதாபாத்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? என்கிற கேள்விகள் முதல் பாதியில் ஆங்காங்கே ரசிகர்களுக்கு தொக்கி நிற்கின்றன. ஏனெனில் இளம் ரசிகர்களில் பெரும்பாலானோர் பொன்னியின் செல்வனைப் படித்திருக்க வாய்ப்பில்லை.

 

திரைப்படத்தின் கதைக் கருவிற்குள் நுழைவதற்கு முன் கதாபாத்திரங்கள் யார்? எதற்காக? என்கிற எந்த விளக்கமும் பார்வையாளர்களுக்கு த் தெளிவாகக் கடத்தும்படியாக அமையாதது திரைப்படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது.

பழிவாங்கல், நயவஞ்சகம் என அரசியல் சதுரங்கத்தில் நிகழும் சம்பவங்கள் போன்றவற்றை ரசிகர்களுக்கு உணர்வுரீதியாக நெருக்கத்தை மேலும் ஏற்படுத்தித் தர படக்குழு முயன்றிருக்கலாம். 

நாவல் என்கிற வகையிலிருந்து வெளிவந்து திரைக்கதையை ரசிக்க முயற்சித்தாலும் வழக்கமான காட்சியமைப்புகள் ஏற்கெனவே பார்த்த காட்சிகளை நினைவுபடுத்துகின்றன. குறிப்பாக, சண்டைக் காட்சிகள் மீண்டும் மீண்டும் தமிழ் சினிமா பார்த்த, பழகிப்போன வகைகளிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதையும் படிக்க |  நானே வருவேன் - பார்க்கலாமா? - திரை விமர்சனம்

படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்து உதவியிருப்பவை இசையும், கேமிராவும். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு பெருமளவு உதவியுள்ளது. பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் திரையில் அவற்றிற்கு ரசிகர்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறது. பொன்னி நதி, சோழா சோழா பாடல்கள் ரசிகர்களை ஆரவாரத்திற்குள்ளாக்குகின்றன.

ரவிவர்மாவின் கைவண்ணம் கூடுமானவரை காட்சிகளை அழகாக காட்ட மெனக்கெட்டுள்ளது. குறிப்பாக நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய் ஆகட்டும், குந்தவையாக வரும் த்ரிஷாவாகட்டும் இருவரையும் அவ்வளவு அழகாக காட்சிக்குக் காட்சி காட்டியிருக்கிறார் ரவிவர்மா. ஐஸ்வர்யா ராய் நிஜத்திலேயே ஒரு ராணியைப் போல மின்னுகிறார். இவை தவிர அரண்மனைக் காட்சிகள் படத்திற்குப் பக்கபலமாக உள்ளன.

இதையும் படிக்க | வெளியானது பொன்னியின் செல்வன்: ரசிகர்கள் கொண்டாட்டம்

வந்தியத் தேவனாக வரும் நடிகர் கார்த்தி படத்திற்கு நல்ல பலம். துறுதுறுவென அவர் ஓடுகிறார், பாடுகிறார், சண்டை செய்கிறார். பெண்களிடம் காதல் பாடுவதாகட்டும், நகைச்சுவை செய்வதாகட்டும், சண்டைக் காட்சிகளில் சீறுவதாகட்டும் வந்தியத் தேவன் கதாபாத்திரத்திற்கு கார்த்தி நல்ல தேர்வு.

நடிகர்கள் ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன் ஆகியோர் அளவான நடிப்பை வழங்கியுள்ளனர். ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் காதலில் உருகுவது அழகாக உள்ள அதேசமயத்தில் ராவணன் திரைப்படத்தையும் நினைவுபடுத்துகிறது என்பது மறுப்பதற்கில்லை.

நாவலில் இடம்பெறும் காட்சிகளைக் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டியிருந்ததால் முக்கியமான பல இடங்கள் அழுத்தமாக அமையவில்லை. குறிப்பாக நந்தினியும் குந்தவையும் நேருக்குநேர் சந்தித்துக் கொள்ளும் இடம் திரைப்படத்தின் டிரைலர் தொடங்கி வெளியீட்டுக்கு முன்பு வரை விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் திரையில் அந்தக் காட்சி வரும்போது ரசிகர்களுக்கு பெரியளவில் எந்தவித ஆர்வத்தையும் ஏற்படுத்தாது ஏமாற்றமானது. 

இதையும் படிக்க | சோழ தேசத்தில் பொன்னியின் செல்வன்: நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி

இவை தவிர தொழில்நுட்பரீதியாக கலை வடிவமைப்பு, ஆடை அலங்காரம், படத்தொகுப்பு  போன்றவற்றில் கூடுமானவரை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. கடலில் வரும் கப்பல்கள் காட்சிகளில் கிராபிக்ஸ் பணிகளுக்குக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருந்தாலும் சரி, படித்திருக்காவிட்டாலும் சரி எதிர்பார்ப்பின்றி இத்திரைப்படத்திற்கு சென்று வருவதே படத்தை ரசிக்க உதவும்.

மிகப்பெரும் நாவலை திரைப்படத்தில் கொண்டு வருவது சவாலான பணி. அந்த சவாலை முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் இனிவரும் (நாவல்களைத் திரைப்படமாக்கும்) திரை முயற்சிகளுக்கு தூண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT