செய்திகள்

விக்ரம் சாதனையைத் தகர்க்குமா?: தமிழகத்தில் பொன்னியின் செல்வன் காய்ச்சல்!

எழில்

ஃபேஸ்புக், வாட்சப், ட்விட்டரில் ஒரு படத்தை மட்டும் ஓயாது விவாதிக்கிறார்கள்...

பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன்!

வீடுகளில், அக்கம்பக்கத்தில், பொது இடங்களில் இந்தப் படத்தை எண்ணி உருகுகிறார்கள்... 

பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன்!

தொலைக்காட்சி, ஃபேஸ்புக், யூடியூப்களில் இப்போது இந்தப் படம் பற்றி தான் பேச்சு....

பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன்!

தமிழ்நாட்டுக் காற்றில் ஒரு பெயர் மட்டும் உலவிக்கொண்டிருக்கிறது...

பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன்!

மணி ரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வெள்ளிக்கிழமையன்று வெளிவருகிற நிலையில் தமிழகத்தில் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. 

பொன்னியின் செல்வன் படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். எஃப்.டி.எஃப்.எஸ். (முதல் காட்சி) டிக்கெட்டுகள் கிடைக்காதவர்கள் முதல் நாளன்று இதர காட்சிகளிலாவது படத்தைப் பார்த்து விட வேண்டும் எனத் துடியாய் துடிக்கிறார்கள். இதனால் முதல் நாள் டிக்கெட்டுகளைப் பெற ரசிகர்கள் பலவழிகளிலும் முயற்சி செய்து வருகிறார்கள். இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர வார இறுதி நாள்களிலும் குடும்பம் குடும்பமாகப் படம் பார்க்க ரசிகர்கள் தயாராகி விட்டார்கள். பெரும்பாலான திரையரங்குகளில் வார இறுதி நாள்களுக்கான டிக்கெட்டுகளும் இப்போதே விற்றுத் தீர்ந்து விட்டன. மேலும் முதல் நான்கு நாள்களுக்கான டிக்கெட்டுகள் பல இடங்களில் கிடைக்காததால் ஐந்தாவது நாள் டிக்கெட்டுகளும் வேகவேகமாக விற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல பெரிய திரையரங்குகளில் நான்காவது நாளுக்குத்தான் டிக்கெட்டுகள் கிடைப்பதாக ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள். 

சென்னை சத்யம் திரையரங்கில் சத்யம், செரீன், சீசன்ஸ் என மூன்று திரையரங்குகளிலும் நான்குக் காட்சிகளாகப் பொன்னியின் செல்வன் திரையிடப்படுகிறது. உதயம் வளாகத்தில் உதயம், சந்திரன், மினி உதயம் என மூன்று திரையரங்குகளிலும் நான்குக் காட்சிகளுக்குத் திரையிடப்படுகிறது. இதுபோல தமிழ்நாட்டிலுள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் பெரும்பாலான காட்சிகள் பொன்னியின் செல்வன் படத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் வசூலில் சமீபத்தில் கமலின் விக்ரம் நிகழ்த்திய சாதனையை பொன்னியின் செல்வன் தகர்த்து விடும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.  

இதுதவிர சமூகவலைத்தளங்களிலும் பொன்னியின் செல்வன் படம் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விளம்பர  நிகழ்ச்சிகளில் த்ரிஷா உடையணிந்த விதம், அவருடைய அழகு எனப் பொன்னியின் செல்வன் பட நடிகர்களில் ஐஸ்வர்யா ராயை விடவும் பலவிதமாக த்ரிஷாவே அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறார். இந்தப் படமும் கதாபாத்திரமும் த்ரிஷாவுக்குப் புதிய திருப்பமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீபத்தில் பூங்குழலி கதாபாத்திரமும் ரசிகர்களிடையே விவாதமாக மாறியுள்ளது. கல்கியின் கதையை மணி ரத்னம் எப்படிக் காண்பிக்கப் போகிறார், ராஜராஜ சோழனின் பெருமைகள், சோழர்களின் வரலாறு என நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படம் பற்றிய பதிவுகளே சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இதுதவிர பொன்னியின்  செல்வன் நாவலைப் படிப்பதில் 2கே கிட்ஸ் திடீரென அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். படம் பார்ப்பதற்குள் நாவலைப் படித்து விட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்கள் தமிழகத்தில் லட்சக்கணக்கில் உள்ளார்கள். மணி ரத்னம் இந்தக் கதையை கல்கியின் கதையோட்டத்தின்படி எடுத்திருப்பாரா என்கிற ஆவலுடன் அவர்கள் ஒரு பக்கம் தங்களுடைய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்ட ரஹ்மானின் பாடல்கள் தற்போது மெல்ல மெல்ல ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. படமாகப் பார்க்கும்போது இசை இன்னும் பிரமாண்டமாக இருக்கும் என்பதே பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 

இன்னும் இரு நாள்களில் படம் வந்துவிடும். ரசிகர்களுக்குப் பொன்னியின் செல்வன் படம் மீதான காய்ச்சல் அடங்கி விடுமா அல்லது செப்டம்பர் 30-க்குப் பிறகு இன்னும் அனலடிக்குமா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT