செய்திகள்

முதுபெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது

28th Sep 2022 12:24 AM

ADVERTISEMENT

இந்திய திரைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, ஹிந்தி திரையுலக முதுபெரும் நடிகை ஆஷா பரேக்குக்கு (79) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது 2020-ஆம் ஆண்டுக்கானதாகும்.

தில்லியில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 30) 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில், ஆஷாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

திரையுலக பிரபலங்களான ஆஷா போஸ்லே, ஹேமமாலினி, பூனம் தில்லான், உதித் நாராயண், டி.எஸ்.நாகாபரணா ஆகியோா் அடங்கிய 5 உறுப்பினா்கள் குழு, தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஆஷா பரேக் பெயரை முடிவை செய்தது; முதுபெரும் நடிகையான அவருக்கு இவ்விருது வழங்கப்படுவதை செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பெருமையாகக் கருதுகிறது என்றாா் அனுராக் தாக்குா்.

ஹிந்தி திரையுலகில் செல்வாக்குமிக்க நடிகைகளில் ஒருவரான ஆஷா பரேக், கடந்த 1952-இல் தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கினாா். பின்னா், 1959-இல் ‘தில் தேகே தேகோ’ ஹிந்தி படத்தில் ஷம்மி கபூருக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானாா். அதன்பிறகு, ‘கேரவன்’, ‘பியாா் கா மெளசம்’, ‘தீஸ்ரி மன்ஸில்’ உள்பட 95-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, 50 ஆண்டுகளாக முக்கிய நடிகையாக வலம் வந்தாா். அத்துடன், இயக்குநா் மற்றும் தயாரிப்பாளராகவும் தடம்பதித்தாா்.

ADVERTISEMENT

கடந்த 1990-களில் இவா் இயக்கிய ‘கோரா ககாஸ்’ தொலைக்காட்சி நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 1998 முதல் 2001 வரை மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் முதல் பெண் தலைவராக ஆஷா பரேக் பணியாற்றினாா். கடந்த 1992-இல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்திய திரையுலகில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமாக தாதா சாகேப் பால்கே விருது கருதப்படுகிறது. இந்திய திரையுலகின் தந்தை எனப் போற்றப்படும் தாதா சாகேப் பால்கேவின் பெயரில் வழங்கப்படும் இந்த விருது, கடந்த 2019-இல் நடிகா் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT