செய்திகள்

பிறந்த நாள்: ‘ஒரு நாளைக்கு ஆறு பேருக்கு கால்ஷீட் கொடுத்து நடித்த நாகேஷ்!’

DIN

என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நான் தமிழில் நாகேஷுடன் தான் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தேன். சுமார் 50-60 படங்களில், நாங்கள் இருவரும் இணைத்து நடித்திருப்போம். நாகேஷைப் பற்றி, இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். எங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் ஜோராக அமைந்து விட்டது என்று எல்லோரும் சொல்லுவார்கள். "காதலிக்க நேரமில்லை'  படத்திற்குப் பிறகு, அவர் எப்படி நடிப்பார், இந்தப் பாத்திரத்திற்கு எப்படி வசனம் பேசுவார், எப்படி உடல் அசைவு இருக்கும் என்று நான் ஒரு வகையில் தெரிந்து கொண்டேன். நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நடித்ததால், நான் நாகேஷுடன் நடிப்பில் பொருந்தி விட்டேன்.  

நாகேஷ் நடிப்பிற்கு ஏற்றார் போல், என்னுடைய நடிப்பை மாற்றி, புது வழியை நானே உருவாக்கிக் கொண்டேன். அது போல, நாகேஷ் அவர்கள் நடிக்கும் போது, அவருக்கு ஏற்றார் போல நான் மாறுவதற்கு நான் தெரிந்து கொண்டேன். நகைச்சுவையில் டைமிங் சென்ஸ் மிகவும் முக்கியம். அதில் நாகேஷ் மன்னர். நான் அவருக்கு ஏற்றார் போல் படங்களில் பேசியதால் மட்டுமே, நிலைத்து நிற்க முடிந்தது.

நாகேஷ் அசராத உழைப்பாளி. என்னதான் கதாசிரியர்கள், வசனகர்த்தாக்கள், எங்களுக்கு எழுதிக் கொடுத்தாலும், நாங்கள் நடிக்கும் போது, எங்களுடைய கற்பனையை சிறிது சேர்த்து கொண்டால் தான் அது சோபிக்கும். அந்த கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர். பல படங்களில், நானும், அவரும், நாங்கள் விரும்பும் வசனங்கள் பேசியே, அந்தக் காட்சியைச் சிறப்பாகச் செய்திருக்கிறோம். அவர் சொல்லும் வசனத்திற்கு நான் பதில் கொடுப்பேன். இயக்குநர் ஒத்துக்கொண்டால் அந்த வசனங்கள் படங்களில் இடம் பெறும்.

நாகேஷ் எங்களோடு இருக்கும் போது "ஜோக்' அடிப்பார். சில சமயம் தத்துவமாகப் பேசுவார்.  அவர் சும்மா இருந்து நான் பார்த்த இல்லை. இந்த நகைச்சுவை நடிகர்களுக்கே எப்பவும் பிரச்னைகள், சோதனைகள் அதிகம் வரும். அதற்கு உதாரணம், நாகேஷ், சந்திரபாபு ஆகியோரை சொல்லலாம். ஆனால் சோதனைகள் உள்ளத்தில் இருந்தாலும், படப்பிடிப்புக்கு வந்து விட்டால், காமிரா முன்னால் நின்று விட்டால், கருமமே கண்ணாக இருந்து, அந்தப் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டுத்தான், செல்வார்கள். 

சோகக் காட்சிகள் வேறு, நகைச்சுவை காட்சிகள் வேறு. சோகக் காட்சிகள் நடிக்கும் போது வீட்டில் நடந்த ஒரு சோகச் சம்பவத்தை நினைத்து, சோக முகத்தை வர வழைத்துக் கொள்ளலாம். ஆனால் நகைச்சுவையை எப்படி  வரவழைக்க முடியும்?



நாகேஷைப் பொருத்தவரை எனக்குப் பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று, தான் எப்படிப் பேசுகிறாரோ, அதே டைமிங்கில் பேசினால், அவர் மிகவும் சந்தோஷப்படுவார். ""நீங்கள் எந்த நிலையிலும் அந்த டைமிங்கை விட்டுக் கொடுக்காதீர்கள். நான் எந்த விதத்தில் பேசுகிறேனோ, அதே அளவில் நீங்களும் பேசினால் தான், நாம் இந்தக் காட்சிக்கு உயிரூட்ட முடியும். மக்களும் சிரிப்பார்கள். அதைப் புரிந்து கொண்டால் நீங்கள் சிறப்பாக நடிப்பீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்''என்றார். எதையும் சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டு போய் விடுவார். 

நாகேஷ் ஒரு சிறந்த நடிகர் என்று கூறுவதை விட, அவர் ஆற்றல் படைத்தவர். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று சொல்வார்களே, அது போல, வசனத்தை மட்டும் வாய் வழியாகப் பேசினால் எப்படி சிரிப்பு வரும். அதற்குரிய பல விஷயங்களை நாங்கள் செய்ய வேண்டும். 

இப்படிப்பட்ட சோதனையான கட்டங்கள் பல, எங்களுக்கும் வந்துள்ளன. நாகேஷ் கவர்ச்சிகரமாக, புதுவிதமாக நாட்டியமாடக்கூடிய நடிகர். அவரை நான் முதலில் பார்த்தது எப்பொழுது என்று நான் யோசிக்கிறேன். பாலாஜி நாடகத்தில் அவர் நடித்திருக்கிறார். அந்த நாடகத்தை மேடையில் பார்த்த போது அவரைப் பார்த்திருக்கிறேன். 

நான் நடித்த "அன்னை' படத்திலும், ஒரு பாடல் காட்சியிலும், அவர் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்ட மனிதர். 

அப்பொழுதே அவர் ஒரு நாளைக்கு, 6 பேருக்கு கால்ஷீட் கொடுத்து, நடித்துக்கொண்டிருந்தார். சினிமா உலகில் சொல்வது என்றால், 6 ஷிப்டுகளில் நடிப்பது. அப்படிப் பார்த்தால் ஒரு ஷிப்ட் என்றால், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தான், அவரால் நடித்துக் கொடுக்க முடியும். அதையும் அவர் செய்து நான் பார்த்திருக்கிறேன். காரணம், அந்த 6 ஷிப்டுகளில், மூன்று அல்லது நான்கு படங்களில்,  கூட நடித்திருக்கிறேன். ஒரு படத்தில் மனோரமா ஆச்சி நடித்து இருப்பார். 

நாகேஷ் கடுமையான உழைப்பாளி. ஆண்டவன் சிரிக்க வைப்பவர்களைத் தான் மிகவும் சோதிப்பான். அதற்கு நான் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஆனால் நடிப்பு என்று வந்து விட்டால் அவருக்கு எந்த சுணக்கமும் ஏற்படாது. இவ்வளவு கடுமையாக உழைத்தாலும், காமிரா முன்னாடி, வந்து நின்று விட்டால், நடிப்பும், அவரது வேகமான வசன உச்சரிப்பு வந்து விடும். வேகம் இருக்கும். அதே சமயம் வசன உச்சரிப்பில் தெளிவு இருக்கும். வேகம் இருந்தால் மக்களுக்குப் புரியாமல் போய் விடக்கூடாது இல்லையா? அதை மனதில் கொண்டு, எப்பொழுதுமே வசனங்களைத் தெளிவாகப் பேசுவார். ஸ்ரீகாந்த் அவருடைய நெருங்கிய நண்பர். 

"காதலிக்க நேரமில்லை' படத்திற்குப் பிறகு, நாங்கள் இருவரும் நடித்தது வெளிவந்தது "ஊட்டிவரை உறவு' தான். நான் முன்பே சொன்னது போன்று "காதலிக்க நேரமில்லை' கடைசிக் கட்ட படப்பிடிப்பு நடக்கும் போதே, இந்தப் படம் முழுமை பெற்றுவிட்டது. அது மட்டுமல்ல, நாங்கள் இருவரும் நடித்து வெளியானது, இந்தப் படம் தான். எங்கள் இருவருக்கும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்ததும் இந்தப் படத்தில் தான். 

அந்தக் காலத்தில் இருந்து,  இந்தக் காலம் வரை, நகைச்சுவை பாத்திரமேற்று நடிக்கும் நடிகர், தொடர்ந்து கதாநாயகருடன் தான் படத்தில் பயணிப்பார்கள் . அந்தக் காலத்தில், அந்த பாத்திரத்திற்கு ஒரு ஜோடி இருந்தது. இந்தக் காலத்தில் அது இல்லை. ஜோடி இருந்தால், கதையில் ஒரு பிடிப்பு இருக்கும். எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நாம் ஏற்று நடிக்கும் பாத்திரம் வலுப்பெறும். 

இயக்குநர் ஸ்ரீதர் திரைக்கதை, வசனம் எழுதும் போதே, எங்கள் இருவரின் பெயரை போட்டு எழுதியுள்ளார் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். நாங்கள் இருவரும், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான சித்ராலயாவின் ஆஸ்தான நடிகர்கள் ஆகிவிட்டோம். கூட்டாகக் கதையைப் பேசும் போதே இயக்குநர் ஸ்ரீதரும், கோபுவும் எங்கள் இருவரின் பாத்திரத்தை பற்றி பேசி முடிவு செய்து விடுவார்கள்.

"ஊட்டி வரை உறவு' படத்தில் நாகேஷ் மருத்துவராகவும் , நான் செவிலியராகவும் நடித்து இருப்போம். கதையோட நகைச்சுவை காட்சிகள் ஒன்றி வரும் படம் இது. இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மருத்துவராக நடிப்பார். அவர் வீட்டுக்கு நடிகை கே.ஆர். விஜயா ஒரு நாள் திடீர் என்று ஒரு பெட்டியை தூக்கிக் கொண்டு வருவார். அதில் ஒரு முக்கியமான விவரம் இருக்கும்.

இதை என் கணவராக நடிக்கும் நாகேஷ் பார்த்து விட்டு, என்னிடம் வந்து காண்பிப்பார். அது மட்டுமல்ல, அந்தப் பெண்ணை சிவாஜிகணேசன் வீட்டில் பார்த்ததாக என்னிடம் தெரிவிப்பார். ரூபாய் பத்தாயிரம் பணத்துக்கு ஆசைப்பட்டு, அந்த விலாசத்திற்கு தகவல் கொடுக்க விரும்புவேன். அதற்குள் அந்தப் பேப்பர் மீது பாட்டிலில் இருந்த பேனா மை கொட்டி விடும். விலாசம் தெரியாமல் போய் விடும். எப்படியாவது அந்த விலாசத்தைக் கண்டு பிடிக்க, அந்தப் பழைய பேப்பரை என் கணவராக நடிக்கும் நாகேஷை தேடச் சொல்வேன். 

இந்தத் தேடும் படலத்தில் தான் நகைச்சுவை மிளிரும். இதில்  நாகேஷ்  செய்யும் சேட்டைகள் மக்களுக்குச் சிரிப்பை வரவழைக்கும். 

மக்கள் வயிறு குலுங்க சிரிக்க, இது போன்று கதையோடு வரும் காமெடி, அந்தக் காலத்தில் நிறையவே இருந்தது. இப்போது எல்லாம் காமெடி டிராக் என்று தனியாகச் சொல்லும் படி நகைச்சுவை காட்சிகள் தான் இருக்கிறது. 

இந்தக் காட்சிகள் படமாகும், அன்று நாங்கள் எல்லாம் தயாராக இருந்தோம். என்னிடமும், நாகேஷுடமும், காட்சி பற்றியும், நாங்கள் பேசவேண்டிய வசனங்கள் பற்றியும், "சித்ராலயா' கோபு சார் விவரமாகச் சொல்லிவிட்டார். இயக்குநர் ஸ்ரீதர் காமிரா கோணத்தை வைக்க, எல்லாம் சரியாக நடந்தது. "ஆக்ஷன்' என்று கூற வேண்டியதுதான் பாக்கி. அதையும் இயக்குநர் கூற, நாங்கள் இருவரும் நடித்துக் கொண்டிருந்தோம்.

திடீர் என்று நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது சிரிப்பலைகள் கேட்டது. யார் சிரித்தது?  எப்பொழுதுமே படப்பிடிப்பு நடக்கும் இடம் பரபரப்பாகக் காணப்படும். வெளியே அந்தக் காட்சிக்கு தேவைப்படாத நடிகர், நடிகையர் அரட்டை கச்சேரி நடத்திக் கொண்டிருப்பார்கள். ஆனால் செட்டின் உள்ளே, பெரிய காட்சியாக இருந்தால், இயக்குநர், அவரைச் சுற்றி உள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள், காட்சி நன்றாக வரவேண்டுமே என்ற ஆதங்கதோடு, உழைத்துக் கொண்டிருப்பார்கள். 

ஆனால் காட்சி எப்படி இருந்தாலும், படப்பிடிப்புத் தளம் அமைதியாக இருக்கும். ஆனால், நகைச்சுவை காட்சிகள் படமாகும் போது மட்டும், இயக்குநர் "ஆக்ஷன்' என்று கூறினால் மட்டும் அமைதியாகி விடும். காட்சி எடுக்கப்படும் முன்னரும், பின்னரும், அதில் நடிகர், நடிகையர், ""இப்படிச் சொல்லலாமா வசனத்தை'' என்று இயக்குநருக்கு பேசிக் காட்டுவார்கள். 

ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கும் போது யூனிட்டில் உள்ளவர்கள் கூட சிரிப்பார்கள். ஆனால் "ஆக்ஷன்' என்று  இயக்குநர் சொல்லி விட்டால், சப்த நாடியும் அடங்கி, அந்த இடமே அமைதியாகி விடும். ஆனால் "ஊட்டிவரை உறவு' படப்பிடிப்பில் நானும், நாகேஷும்  நடித்துக் கொண்டிருந்தோம். இயக்குநர்  "ஆக்ஷன்' சொல்லி விட்ட பிறகு, நாங்கள் மும்ரமாக நடித்துக் கொண்டிருத்த போது திடீரென்று சிரிப்பலைகள் கேட்டது. யார் இந்தக் காட்சியின் நடுவில் இப்படிச் சிரிக்கிறார்கள் என்று பார்க்க ஆசைப்பட்டேன். "கட் கட்' என்றார் இயக்குநர் ஸ்ரீதர். இது மாதிரி ஒரு முறை அல்ல பல முறை "டேக்'கின் போது பிரச்னை ஏற்பட்டது. இதற்குக் காரணம் நாங்கள் அல்ல. நாங்கள் நடிப்பதை நிறுத்தி விட்டு, இயக்குநரைப் பார்த்தோம். அப்புறம் தான் தெரிந்தது சிரித்ததே அவர்தான் என்று. காட்சி எடுக்கப்படும் போது, இப்படி அவரே சிரித்ததால், அவரால் இந்த நகைச்சுவை காட்சியை எடுக்க முடியவில்லை என்பது புரிந்தது. 

அதனால் இயக்குநர் ஸ்ரீதர், சித்ராலயா கோபுவை பார்த்து, ""கோபு நீ எடுப்பா, நான் செட்டிற்கு வெளியே போகிறேன். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை,'' என்று கூறி விட்டு, செட்டிற்கு வெளியே போய் விட்டார். அதனால், அவர் கூறியபடி கோபு சார், எங்கள் காட்சியை இயக்கி முடித்தார். கோபு முதல் தடவையாக அந்தக் காட்சியை இயக்கினார். ஆனால், அதற்குப் பிறகு சித்ராலயா கோபு பல படங்கள் இயக்கினார். அவை பெரும்பாலும் நகைச்சுவை படங்களே!

தேவரின் "துணைவன்' படத்திலும், எங்கள் இருவருக்கும் அருமையான வேடங்கள் கிடைத்தன. என் நகைச்சுவை நடிப்பு வரிசையில் ஒரு மறக்க முடியாத படம் என்று சொன்னால்,  "துணைவன்' படத்தினைச் சொல்லலாம். 

நாகேஷ் "டேக்'கில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. ஒத்திகையில் பல முறை செய்து பார்த்த பின், அவர் "டேக்'கில் அதையே செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. முன்பே சொன்னது போல், அவர் தனது கற்பனையில் தோன்றியதை  ஏதாவது செய்வார். அது 

வசனமாக இருக்கட்டும், உடல் மொழியாக இருக்கட்டும், புதிதாக ஏதாவது செய்வார், இயக்குநருக்குப் பிடித்துப் போய்விட்டால் வைத்துக் கொள்ளச் சொல்வார்.

ஒரு நாள்  வேறொரு படப்பிடிப்பு நடக்கும் போது, அந்தக் காட்சிக்கு ஒரு முறைக்கு இரு முறையாக ஒத்திகைப் பார்த்தோம், நன்றாக வந்தது. இயக்குநருக்கு ரொம்ப சந்தோஷம். "டேக்' என்று சொன்னார். நாகேஷ், டேக்கில் நான் வசனம் பேசிக் கொண்டிருக்கும் போது, இரண்டு முறை என் வாய் மீது தட்டி விட்டார். ஒத்திகையின் போது அவர் இதைச் செய்யவில்லை என்பதால், நானும் இதை எதிர்பார்க்கவில்லை. காட்சி சரியாக வரவேண்டும் என்ற எண்ணத்தில் வலியை பொறுத்துக் கொண்டு  நடித்து விட்டேன். காட்சி முடிந்தவுடன் கோபத்தோடு அவரைப் பார்த்தேன். அதற்குள் என் பல்லின் மேல், அவரது விரல் பட்டதால், என் உதடு கிழிந்து ரத்தம் வரத் தொடங்கியது. நான் அவரிடம் சொன்னேன், "நீங்கள் இப்படி செய்யப் போவதை, எனக்கு முன்பே "சொல்லவில்லை' என்று கேட்டேன். இதெல்லாம் நடந்தது "நம்பிக்கை நட்சத்திரம்' என்ற படத்தில்.

"டேக்' முடிந்ததும் என்னிடம் வந்து அவர்   மன்னிப்பு கேட்டார். "டேக்கில் நான் நடித்துக் கொண்டிருக்கும் போது இதைச் செய்தால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்,  செய்து விட்டேன்' என்று மீண்டும், மன்னிப்பு கேட்டார். "நம்பிக்கை நட்சத்திரம்' படத்தில் நான் வீட்டு வேலைக்காரியாக நடிப்பேன்.

அந்த வீட்டில் உள்ள கார் ஓட்டுநராக நாகேஷ் நடிப்பார். நான் மலையாள மொழி பேசும் வேலைக்காரி, அவர் தமிழ் பேசும் டிரைவர். பின்னர் நாங்கள் இருவரும் காதலித்துக் கல்யாணம் செய்து  கொள்வோம். அந்தப் படத்தின் வசனத்தில் நகைச்சுவை மிளிரும். இன்னும் சொல்லப் போனால் "காதலிக்க நேரமில்லை' படத்தில், எங்கள் நகைச்சுவை காட்சிகள் பேசப்பட்ட அளவிற்கு "ஊட்டிவரை உறவு' காட்சிகளும் பேசப்பட்டன. இன்று வரை அந்தக் காட்சிகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால், அந்தக் காட்சிகள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் ஒரு முறை படப்பிடிப்புத் தளத்திற்குப் பக்கத்தில் மர நிழலில் உட்கார்ந்தேன். அப்பொழுது  ஒருவர் வந்து, "வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது' என்று கூறினார். இன்று போல், அன்று கைபேசி எல்லாம் கிடையாது. மிக முக்கியமான செய்தியாக இருந்தால் மட்டுமே இப்படிக் கூப்பிடுவார்கள், செட்டிக்குள் நுழைந்து விட்டால், வெளியே என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் எல்லாம் காட்சி, வசனம் என்று படப்பிடிப்பே கதி என்று இருப்போம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  செட்டில் இருந்து விட்டால் எல்லோரும் அவரவர் வேலையில் கவனமாக இருப்போம். இயக்குநர் அனுமதித்தால் தான் செட்டை விட்டே வெளியே செல்வார் சிவாஜி.

அன்று எனக்கு உணவு இடைவேளைக்கு முன்னதாகவே, நான் நடிக்கும் காட்சி முடிந்து விட்டது. ஆகையால் நான் செட்டை விட்டு வெளியே வந்து உட்கார்ந்து இருந்தேன். எனக்குத் தொலைபேசி அழைப்பு என்றவுடன், எழுந்து போய் என் அம்மாவிடம் பேசி விட்டு, "மதிய உணவுக்கு எப்பொழுது உணவு கொடுத்து அனுப்புகிறாய்?', என்று கேட்டேன். திடீரென்று என் கையில் உள்ள தொலைபேசியைப் பிடுங்கினார் ஒருவர். 

என் கையில் இருந்த தொலைபேசியை யாரோ பிடுங்கி பேச முற்பட்டார்கள். யாரென்று திரும்பிப் பார்த்தேன். அது நாகேஷ். எதிர் முனையில் நான் பேசிக் கொண்டு இருந்தது என் அம்மா என்று தெரிந்து தான் என் கையில் இருந்த தொலைபேசியைப் பிடுங்கிப் பேசினார். அவர் பேசியது இரண்டு வரி தான். "நீங்கள் உங்கள் பெண்ணுக்குக் கொடுத்து அனுப்பும் சாப்பாட்டை, கொஞ்சம் அதிகம் சேர்த்து அனுப்புங்கள். நாங்கள் எல்லோரும் இருக்கோம், நானும் உங்கள் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டும்', என்றார். எப்பவுமே எனக்கு வீட்டில் இருந்து தான் சாப்பாடு வரும். காரணம், நான் சுத்த சைவம். அது மட்டுமல்லாமல் என் வீட்டில்,  பாட்டி அல்லது அம்மா தான் சமைப்பார்கள், சுவையுடன் இருக்கும். இந்த சுவை பல கலைஞர்களுக்குப் பிடிக்கும். அதனால் என் வீட்டில் இருந்து சாப்பாடு வருகிறது என்றதும், செட்டில் இருக்கும் பல கலைஞர்கள் மதிய இடைவேளையின் போது என்னுடைய அறைக்கு வந்து விடுவார்கள். 

படம் - twitter.com/avmproductions

தொலைபேசியில் அம்மாவிடம் பேசி முடித்தவுடன் நாகேஷிடம் கேட்டேன் "நானோ சுத்த சைவம். நீங்கள் அசைவம் சாப்பிடுபவர். எங்கள் வீட்டு சாப்பாடு உங்களுக்கு  ஒத்து வருமா?' என்றேன். உடனே அவர்  "யார் சொன்னார்கள், நான் சுத்த சைவம்'  என்று நாகேஷ் சொல்ல, என் பாட்டியும் "சரி, அவருக்கும் சேர்த்து சாப்பாடு அனுப்புகிறேன்', என்றார். அன்று பார்த்து எனக்குத் தான் படப்பிடிப்பில் கடைசி ஷாட். எல்லோரும் உணவு இடைவேளைக்குச் சென்று விட்டார்கள். 

எனது அறைக்கு நான் சென்று பார்த்தபோது, சாப்பாடு  வரவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பசி வேறு. திரும்பவும் என் அறையில் ஏதாவது சாப்பாடு கேரியர்  இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். ஒன்றுமே இல்லை என்று உறுதியாகத் தெரிந்து கொண்டு பிறகு, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன். அப்புறம் தான், நாகேஷ் என் அம்மாவிடம் சாப்பாடு கேட்டது எனக்கு நினைக்கு வந்தது. எனக்கு அடுத்த அறையில் இருந்த, நாகேஷை சென்று பார்த்தேன். அங்கு அவர், என் வீட்டில் இருந்து வந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுக்  கொண்டு இருந்தார். அந்த அறையில் இரண்டு சாப்பாடு கேரியர் இருந்தது. அவரிடம், "ஒன்று தான் உங்களுக்கு, ஒன்று எனக்கு', என்று சொல்லிவிட்டு, எனது கேரியரை எடுத்து வந்து மதிய உணவை முடித்தேன். 

நாங்கள் இருவரும் சேர்ந்து பல விழாக்களுக்குச் சென்று இருக்கிறோம். அப்படிப் போகும் போது உருவானது தான், "கலாட்டா கல்யாணம்' என்ற திரைப்
படம். அப்பொழுது நாங்கள் இருவரும், படத்தில் ஆடிய நடனத்தை  ஆட வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள். எங்களுடன் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் குழுவினர் வாத்தியங்களை வாசிக்க வந்திருந்தனர். அது மட்டுமல்ல;  பாடகர்கள் பி. சுசீலா, டி. எம். எஸ். சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி போன்ற பாடகர்களும் வந்து இருந்தார்கள். அவர்கள் பாட, அந்தப் பாடலுக்கு நாங்கள் நடனம் ஆடுவோம். நாங்கள் படத்தில் நடித்திருந்த நகைச்சுவை காட்சிகளை நடித்தும் காட்டுவோம். இப்படி நேரலையாகப் பாடலோ,  நாடகமோ மேடையில் செய்து காட்டி ரசிகர்களை மகிழ்விப்போம். 

படத்தில் ஆடிய நடனத்தை மேடையில் ஆடுவதா? என்று யோசிப்பேன். நாகேஷ் அதை எல்லாம் பார்க்க மாட்டார். ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்றால் சரி ஆடிவிடுவோம் என்று சொல்லி, என்னுடன் ஆடுவார். நாங்கள் இருவரும் ரசிகர்களுக்காக இப்படிப் பல விஷயங்களைச் செய்து இருக்கிறோம்.

- நடிகை குமாரி சச்சு (தினமணி கொண்டாட்டம் - ரோஜா மலரே தொடரில்)

(மறைந்த நாகேஷின் பிறந்த நாள் இன்று.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவானியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.05 கோடி

குழந்தைகளுக்கான நீரிழிவு பாதிப்பைக் கண்டறியும் கருவி: பண்ணாரி அம்மன் கல்லூரிக்குப் பரிசு

ரூ.8.30 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பாமக வேட்பாளா் உள்பட 50 போ் மீது வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT