செய்திகள்

மிகையான ‘ஹீரோயிசக்’ காட்சிகளைத் தேடித்தேடி அகற்றினார் மணி ரத்னம்: ஜெயமோகன்

DIN

பொன்னியின் செல்வன் படத்தை மணி ரத்னம் எவ்வாறு படமாக்க விரும்பினார் என்பது பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னம், ஜெயமோகன், குமரவேல் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியானது. 

பொன்னியின் செல்வன் படம் முதல் நாளன்று உலகளவில் ரூ. 80 கோடியை வசூலித்துள்ளதாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் ஒரு படத்துக்குக் கிடைத்த அதிகபட்ச வசூல் என இதுகுறித்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் படம் பற்றி இப்படத்தின் திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான ஜெயமோகன், தனது இணையத்தளத்தில் கூறியுள்ளதாவது:

பொன்னியின் செல்வன் திட்டமிடப்படும்போதே ஒரு செயற்கையான தொழில்நுட்பப் படமாக அமையக்கூடாது, முழுக்க முழுக்க யதார்த்தமாகவே இருந்தாகவேண்டும் என வரையறை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. வரைகலைத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் படங்கள் முதல்பார்வைக்கு ஒரு பிரமிப்பை உருவாக்கினாலும் ஓராண்டிலேயே கேலிப்பொருளாக ஆகிவிடும். இது வரலாறு, இது அப்படி ஆவது என்பது நமக்கே நாம் இழிவு தேடிக்கொள்வது.

வரைகலை நுட்பம் (special effects) சில ஆண்டுகளில் பழையதாகிவிடும். மிகையாக இருந்தால் வேடிக்கையாக மாறிவிடும். இந்தப்படம் இருபதாண்டுகளாவது outdate ஆகக்கூடாது, அடுத்த தலைமுறை பார்க்கவேண்டும் என்றார் மணி ரத்னம். ஆகவே யதார்த்தத்தை உருவாக்குவதற்காக மட்டுமே வரைகலை பயன்படுத்தப்பட்டுள்ளதே ஒழிய மிகையாகக் காட்டுவதற்காக அல்ல. போர் உட்பட எதுவுமே மிகையாக்கப்படவில்லை.

காட்சிகளில் மிகைநாடகத் தன்மை, மிகைசாகசத் தன்மை வந்துவிடவே கூடாது என உறுதியாக இருந்தார். நான் எழுதியதிலேயே இருந்த சற்று மிகையான ‘ஹீரோயிசக்’ காட்சிகள் ஒவ்வொன்றாக தேடித்தேடி அகற்றினார். இதில் கூஸ்பம்ப்ஸ் எல்லாம் இருக்காது. இது ஒரு சீரான ஒழுக்கு மட்டுமே.

இது மணி ரத்னத்தின் கனவு. அது காலத்தில் நீடித்து நிற்கவேண்டும் என்றார். இன்று பார்ப்பவர்களில் எளிமையான ஒரு சாரார் வழக்கமான வரைகலை உத்திகளில் செய்யப்படும் நம்பமுடியாத சாகசங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடையலாம். ஆனால் மறுபடியும் பார்ப்பவர்களால் படம் காலத்தை கடக்கவேண்டும் என்று எண்ணினார். அது நிகழ்கிறது. குறிப்பாக பெண்களின் திரளால் என்று எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT