செய்திகள்

மோகினியாக ரசிகர்களை அலையவிட்ட நயன்தாரா!

18th Nov 2022 06:10 AM | அ.கு. பார்வதி

ADVERTISEMENT

 

தமிழ்த் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாராவுக்கு யாரடி நீ மோகினி செம  ஹிட் கொடுத்த படம் என்றே சொல்லலாம். 

2008-ல் தனுஷ்-நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் யாரடி நீ மோகினி. துரத்தித் துரத்திக் காதலிக்கும் தனுஷை, நயன்தாரா ஏற்றுக்கொள்வாரா என்பதை நோக்கி நகரும் கதை.

யுவன் சங்கர் ராஜாவின் இசை இப்படத்தை மேலும் அழகாக்கியது. ஆடவாரி மாதாலகு ஆர்தாலு வேருலே என்ற தெலுங்கு படத்தின் மொழிபெயர்ப்பே இப்படம். 

ADVERTISEMENT

நட்பு, காதல், பாசம், நகைச்சுவை, கலாட்டா என்று மொத்த உணர்வுகளையும் கலவையாக ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார் இயக்குநர் ஜவஹர். 

கண்டிப்பான ஆசிரியர் ரகுவரனின் பொறுப்பில்லாத மகன்தான் தனுஷ். வேலைக்காகப் பல நிறுவனங்களை ஏறி இறங்கிய அவருக்கு, இறுதியாக சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நேர்காணலுக்குச் செல்கிறார். அங்குதான் நயன்தாராவைச் சந்திக்கிறார். பார்த்த முதல் சந்திப்பிலேயே காதல்..! ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரியாவிட்டாலும், நேர்முகத்தேர்வில் நயன் கொடுத்த தைரியத்தில் எப்படியோ அதே நிறுவனத்தில் பணிக்குத் தேர்வாகிவிடுகிறார். 

வேலை விஷயமாக ஆஸ்திரேலியா செல்லும் தனுஷ், நயன்தாராவிடம் நெருங்கிப் பழக, தனது விருப்பத்தையும் தெரிவிக்கிறார். தனுசுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி!! தனக்கு ஏற்கனவே நிச்சயமாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் என்றும் கூறுகிறார் நயன். 

காதல் தோல்வியால் அப்செட் ஆன தனுஷை ஆறுதல் கூறித் தேற்றுகிறார் ரகுவரன், மகனுக்காக அலுவலகம் வரை சென்று நயனிடம் பேசுவதும், டென்ஷன் ஆகி நயன்தாராவிடம் அறை வாங்குவதுமாக படத்தை மேலும் விறுவிறுப்புடன் எடுத்துச் செல்கிறது கதை. 

விரக்தியில் மாரடைப்பால் இறந்துவிடுகிறார் தனுஷின் தந்தை. சோகத்தை மறக்க நண்பரின் திருமணத்துக்குச் சென்ற இடத்தில் காத்திருந்தது இன்னொரு அதிர்ச்சி!! தன் காதலிதான் நண்பனை மணக்கவிருக்கும் பெண்  என்பது அது...!

படத்தின் முதல் பாதியில் இடையிடையில் காமெடி, கலாட்டா, பாசம் எனப் படம் அழகாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி கிராமத்தில் செல்கிறது, தனது குடும்பத்தோடு பிணைந்திருக்கும் நயன்தாரா, தனுஷின் காதலை புரிந்து அவரை ஏற்றுக்கொள்வாரா? என்பதே மீதிக் கதை.

இதற்கு நடுவில், குடும்பத்தோடு கல்யாணத்துக்கு துணி எடுக்கச்செல்லும் காட்சிகள் என அனைவரையும் சிரிக்கவைத்த ஒன்று. நயன்தாராவிற்கு ரெட் தான் செட்டாகும் என்று பகிரங்கமாகக் கூறும் தனுஷின் நடிப்பு அட்டகாசம். 

நயன்தாராவின் சகோதரியாக சரண்யா ரசிகர்களைக் கவருகிறார். தன் குறும்புத்தன நடிப்பின் மூலமும், அழகான ரியாக்ஷன்ஸ் மூலமும் நயன்தாராவைவிட அழகாக நடித்திருந்தார். 

சிரிக்கவைக்கும் கருணாஸின் காமெடிகள். அய்யோ!! அபசாரம்.. அபசாரம் என தனுஷை பாசத்தோடு கண்டிக்கும் பாட்டி சுகுமாரி இப்படத்தின் பிளஸ். 

படத்தின் மற்றொரு சிறப்பம்சம் கதாபாத்திரம். சிறுவர்கள் முதல் கதாநாயகன் வரை அவரவருக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களையும் காட்சிகளையும் அழகாக நடித்திருப்பது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலுத்திருந்தாலும், கதை நகர்கிறது. ரசிகர்களுக்கு மாடர்ன் பெண்ணாகவும், குடும்பப் பாங்காகவும், ரசிகர்களை கவரும் அழகான மோகினியாகவும்  தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் நயன்தாரா. 

வழக்கம்போல் செல்வ ராகவனின் படங்களின் கிளைமெக்ஸ் சற்று குழப்பம் என்றாலும், தனுஷின் காதல் ஜெயித்ததா, நண்பனின் திருமணம் நடந்ததா? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது இப்படத்தின் கிளைமேக்ஸ்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT