செய்திகள்

ஒற்றைச் செங்கல்லும் நயன்தாராவும்

18th Nov 2022 07:00 AM | தி. நந்தகுமார்

ADVERTISEMENT

ஒற்றைச் செங்கல்லைச் சுமந்து திரையுலகில் அறிமுகமான நயன்தாரா, இன்று கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருப்பது அதிசயம்தான்.

2005-இல் வெளியான ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, 17 ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா.  இந்தப் படத்தில் அவர் ஒற்றை செங்கல்லைத் தேடி,  நடிகர் சரத்குமாரை அணுகும் காட்சி லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நிழலாடும்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் அந்தக் காலகட்டத்தில் பெரிய பிரபல நடிகர்தான். இவருக்கு ஹீரோயினாக அறிமுகமாகும் நயன்தாரா, எதிர்காலத்தில் இவ்வளவு பெரிய பிரபலமான ஹீரோயினாக இருப்பார் என்று திரைப்பட ரசிகர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

இருப்பினும்,  தனது முதல் திரைப்படத்திலேயே சரத்குமாருக்கு இணையாக, தனது நடிப்புத் திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் நயன்தாரா. 
தந்தை - மகன் என இரு வேடங்களில் சரத் குமார் நடித்திருப்பார். இவருக்கு உற்ற தோழன் நடிகர் நெப்போலியன். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பல ஆண்டுகளாக இருவரும் நட்போடு இருப்பார்கள். நெப்போலியனின் ஆதரவில் சரத்குமார் தொடர்ந்து அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பார்.

வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ். இவரது குடும்பத்தினர்தான் சரத்குமாருக்கு எதிராகத் தேர்தல் களம் காண்பார்கள். பிரகாஷ்ராஜ் தனது உறவினர் என்றாலும் நெப்போலியனின் ஆதரவு சரத்குமாருக்குதான்.

இந்த நேரத்தில்தான் சரத்குமாரின் (ஐயா) மகன் ஜூனியர் சரத்குமார் (சின்ன ஐயா) மீது நயன்தாராவுக்கு காதல் ஏற்படுகிறது.  காதலுக்கு குடும்பமும் பச்சைக்கொடி காட்ட,  திருமணமும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், 18 வயது  பூர்த்தி அடையாமல் திருமணம் நடைபெறுவதாக வந்த பெட்டிஷன் மீது விசாரணை நடத்த வந்த போலீஸாரின் அறிவுரையைக் கேட்டு சரத்குமார்  (ஐயா) திருமணத்தை நிறுத்தி, வேறு தேதியில் நடத்துவதாக கூறுகிறார்.

ஆனால், மணமேடை வரை வந்து திருமணம் நின்றால் அசிங்கம் என்று கருதும் நெப்போலியன், ஐயா சரத்குமார் ஜாதி பேதம் பார்ப்பதால்தான் திருமணத்தை நிறுத்த நினைப்பதாகக் கூற,  இருவருக்கும் மோதல் வெடிக்கிறது, திருமணம் நிற்கிறது.

இடையில், நெப்போலியனும் பிரகாஷ்ராஜுடன் நேசக்கரம் நீட்ட, காதலர்கள் இணைந்தார்களா என்பதுதான் கிளைமாக்ஸ்.

இந்தப் படத்தில் சரத்குமார், நெப்போலியன் என்ற பல பெரிய ஆளுமைகளுக்கு நிகராகப் படத்தில் கலக்கி இருப்பவர் நயன்தாரா.

- முதல் காட்சியிலேயே, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி தனது தோழிகளோடு வரும் நயன்தாரா. தனது பரீட்சை பேப்பரில் ராமஜெயம் எழுதி வைத்ததாகக் கூறுவார். ஏன் என்று தோழிகள் கேட்க, பாஸ் ஆனால் காலேஜ் போகணும். பெயிலானால் கல்யாணம் என்று கூறி சந்தோஷப்படுவார். உடனே தோழிகள், யாரு அந்த அதிர்ஷ்டசாலி என்று கேட்பர். தனது மாமா மகன் என்பார்  நயன்தாரா.  அவங்க வேறு ஜாதியாச்சே என்று கேட்க, அதெல்லாம் தெரியாது. அவர்தான் என் மாமா. நான்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று  கூறும் காட்சி ரசிகர்களின் கை தட்டலில் அரங்கமே அதிரும்.  

- சரத்குமாரின் தியேட்டருக்கு தனது தோழிகளோடு சென்று உரிமையாக அடிக்கும் நயன்தாராவின் லூட்டியோ சிரிப்போ சிரிப்பு.

- தேர்வில் பெயில் ஆனதற்கு அழும் நயன்தாராவை நெப்போலியன் அடிக்க,  உடனே நயன்தாரா, சரத்குமாரின் வீட்டுக்குச் சென்று முறையிடும் காட்சி பிரமாதம்.

- தனது வீட்டில் சாமிக்கு பொங்கல் வைக்க, செங்கல் வேண்டும் என்று  ஜூனியர் சரத்குமாரின் செங்கல் சூளைக்கு சென்று, நயன்தாரா ஒரு செங்கல் கேட்கும் காதல் காட்சியில் நயன்தாராவின் கண்களை காண்போரின் நெஞ்சமே குலுங்கும். அப்போது, ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன் என்ற பாடல் காட்சியில் நயன்தாராவின் நடனம் நமது கால்களை ஆடவைக்கும்.

இவ்வாறாக, நயன்தாராவின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்திய  திரைப்படம் ஐயா. 17 ஆண்டுகள் அல்ல- நூறாண்டுகள் ஆனாலும் அந்தப்  படத்தைக் கண்டு ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT