செய்திகள்

ஒட்டுமொத்த படத்தையும் தாங்கும் சசிகுமார்: 'நான் மிருகமாய் மாற' திரைப்பட விமர்சனம்

18th Nov 2022 04:04 PM | கி.ராம்குமார்

ADVERTISEMENT

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், ஹரிப்ரியா, விக்ராந்த் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் நான் மிருகமாய் மாற. இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சஞ்சய் குமார் தயாரித்துள்ளார். 

தனது தம்பியைக் கொன்றவரைப் பழிவாங்கச் சென்று கூலிப்படை கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார் சசிகுமார். அவர்களிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றரா இல்லையா என்பதே நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் கதை. 

இதையும் படிக்க | இதுதான் திட்டம் ‘விஜய் - லோகேஷ் கனகராஜ்’ கூட்டணி குறித்து தகவல்

வழக்கமாக திரையில் காட்டப்படும் சசிகுமாருக்கு அதிக சுமைகளை தாங்க வேண்டிய பொறுப்பு இத்திரைப்படம். முழுக்க முழுக்க சசிகுமாரை சுற்றியே கதை நகர்வதால் திரைக்கதையுடன் எளிதாக பயணிக்க முடிகிறது.

ADVERTISEMENT

பழிவாங்கலில் ஈடுபடும்போது ஆக்ரோசம், மாட்டிக் கொண்டபோது ஏற்படும் பரிதவிப்பு, கொலை செய்யும் முயற்சியில் தடுமாற்றம், குடும்பத்தை காக்க வேண்டிய பொறுப்பு என விரியும் காட்சிகளை ஒற்றை மனிதராக தாங்கியிருக்கிறார் சசிகுமார்.

மிகச்சிறிய அளவிலான கதாபாத்திரங்கள் வடிவமைப்பு படத்தின் திரைக்கதை பயணத்திற்கு உதவியுள்ளது. ஆக்‌ஷன் படங்கள் என்றாலே இடம்பெறும் அதீதிமான வசனங்கள் இல்லாமல் இருப்பது படத்திற்கு மற்றொரு பலம் என்றே கூறலாம்.

அவரைக் கடந்து வில்லனாக வரும் விக்ராந்த்துக்கு அதீத காட்சிகள் இல்லை என்றாலும், க்ளோஷப் காட்சிகளிலேயே படம் முழுக்க பயணிக்கிறார். வில்லனாக தெரிய மெனக்கெட்டுள்ளார் விக்ராந்த். ஹரிப்ரியாவிற்கு நடிப்பதற்கான பெரிய காட்சிகள் இல்லையென்றாலும் அவ்வப்போது தோன்றுகிறார். அப்படியே ஒதுங்கிக் கொள்கிறார். 

இதையும் படிக்க | சர்ச்சைகளை ஊதித் தள்ளிய ‘லேடி சூப்பர் ஸ்டார்’

திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என ஏற்கெனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதேசமயம் க்ரைம் த்ரில்லர் வகையிலான இந்த கதைக்கு ஜிப்ரானின் பின்னணி இசை நன்றாகவே வேலை செய்திருக்கிறது. இரவுக் காட்சிகளில் அவரது பின்னணி இசை, காட்சிகளுடன் ஒன்றி செல்ல உதவியிருக்கிறது. 

படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. வன்முறைக் காட்சிகள் இடம்பெறும் இடங்களிலெல்லாம் இரத்தம் தெறிக்கவிடப்பட்டிருக்கிறது. இரவு நேரக் காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

வழக்கமான அதே பழிவாங்கல் தப்பித்தல் கதைதான் என்றாலும் அதனை சுவாரஸ்யமாக வழங்க இயக்குநர் முயன்றிருக்கிறார். ஆங்காங்கே சந்தேகம் கிளப்பும் லாஜிக் இல்லா காட்சிகளைத் தவிர்த்து நல்ல திரைக்கதை ஓட்டத்தில் இருப்பது படத்திற்கு பலம். கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் மிகச்சிறப்பாகவே வந்திருக்கும். 

நான் மிருகமாய் மாற திரைப்படம் சசிகுமாரின் நடிப்பிற்கான அடுத்த அடையாளம். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT