செய்திகள்

பார்வையிழந்தவராக லேடி சூப்பர் ஸ்டாரின் நெற்றிக்கண்!

18th Nov 2022 06:30 AM | எஸ். ரவிவர்மா

ADVERTISEMENT

ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, தொட்டதெல்லாம் பொன் போல அடுத்தடுத்து நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட்டாக அமைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையானார்.

காதல் பிரிவு காரணமாக சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகியிருந்த  நயன்தாரா, அட்லியின் ராஜா ராணி படம் மூலம் கம்பேக் கொடுத்ததுடன் தமிழ் சினிமாவின் ராணியாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

அதன்பின், கதாநாயகனை மையமாகக் கொண்டிராமல் நாயகியை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட மாயா படம் பெரும் வெற்றி பெற்றது. நாயகியை மையமாக வைத்து நல்ல திரைக்கதை கொண்ட படங்களும் வெற்றி பெறும் என நிரூபித்துக் காட்டினார் நயன்தாரா.

தொடர்ந்து, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா, கொலையுதிர் காலம் என வரிசையாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையை தேர்ந்தெடுத்து தனி ராஜ்ஜியத்தை உருவாக்கினார் லேடி சூப்பர் ஸ்டார்.

ADVERTISEMENT

அந்த வரிசையில் கொரிய மொழியில் வெளியான ‘பிளைண்ட்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான நெற்றிக்கண் திரைப்படமும் ஒன்று.

இமைக்கா நொடிகள் படத்தை தொடர்ந்து மீண்டும் துணிச்சலான சிபிஐ அதிகாரியாகவும், தம்பி பாசமுடைய அக்காவாகவும் களமிறங்கியிருப்பார் நயன்.

படத்தின் தொடக்கத்தில் கெத்தாக வரும் நாயகி நயன், அடுத்த 5 நிமிடங்களிலேயே விபத்தில் கண் பார்வையை இழக்கிறார். உடனிருந்த உயிருக்கும் மேலான தம்பியையும் இழக்கிறார்.

கண் பார்வை போனதாலும், தம்பி உயிரிழக்கக் காரணமாக இருந்ததாலும், வேலை பறிபோகிறது. கண் பார்வை திரும்புவதற்கான சிகிச்சையும் தாமதமாவதால், பார்வையற்ற வாழ்க்கையை வாழப் பழகுகிறார் நயன்.

ஒருநாள் மழைபெய்யும் இரவில் வாடகைக் காருக்காகக் காத்திருக்கும்போது, பெண்களை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தும் சைகோ அஜ்மலின் வலையில் விழுகிறார் நாயகி.

ஆனால், அஜ்மலின் சிறிய தவறால் அவரிடமிருந்து தப்பிக்கும் நாயகி, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்கிறார். அங்குதான் பெண் கடத்தல் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அஜ்மல்தான் நயனையும் கடத்தினார் எனத் தெரிய வருகிறது.

தொடர்ந்து, அஜ்மலை நயனுடன் இணைந்து காவல்துறையினர் கண்டுபிடிக்கிறார்களா? அஜ்மல் கடத்திய பெண்கள் மீட்கப்படுகிறார்களா? பெண்களை ஏன் அவர் கடத்தித் துன்புறுத்துகிறார்? என்பது படத்தின் கதை.

துணிச்சலான சிபிஐ அதிகாரியான துர்கா, கண் பார்வை இழந்ததும் மனதளவில் உடைந்து போனதை நடிப்பில் தத்ரூபமாக காட்டியிருப்பார். அஜ்மலை எதிர்கொள்ளும் போது வரும் கோபம், வளர்ப்பு நாய் கொல்லப்பட்டபோது உடைந்து அழும் காட்சிகளில் முத்திரை பதித்திருப்பார் நயன்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக் கற்களில் நெற்றிக்கண்ணும் ஒன்று.

ADVERTISEMENT
ADVERTISEMENT